நடிகர் ரவி ராகுல் இயக்குநராக அறிமுகமாகும் 'ரவாளி'

Published By: Digital Desk 5

27 Sep, 2022 | 05:18 PM
image

பிரபல நடிகர் ரவி ராகுல் 'ரவாளி' என பெயரிடப்பட்டிருக்கும் படத்தை இயக்கியிருப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார்.

இயக்குநர் கஸ்தூரிராஜா இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் 'ஆத்தா உன் கோவிலிலே'. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ரவி ராகுல். அதன் பிறகு 'தமிழ் பொண்ணு', 'மிட்டா மிராசு' என சில படங்களில் கதாநாயகனாக நடித்த ரவி ராகுல், தொடர்ந்து சின்னத்திரை, டிஜிட்டல் திரை என பல திரைகளில் அழுத்தமான குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். இவர் 'ரவாளி' என்ற படத்தின் மூலம் இயக்குநராக உயர்ந்திருக்கிறார்.

படத்தைப் பற்றி அவர் பேசுகையில், '' எம்முடைய வாழ்க்கையில் பெண்மணி ஒருவரை சில ஆண்டுகளுக்கு முன் சந்தித்தேன். அவர் விவரித்த சம்பவங்கள் இந்தப் படத்திற்கான கதை களமாக உருவானது . இன்றைய சூழலில் சிறிய பட்ஜட்டில் தயாராகும் திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என்றால், அவை தரமான படைப்பாகவும், வித்தியாசமான படைப்பாகவும் இருக்க வேண்டும் என்பது மரபு . 

இதனால் பொருத்தமான கதைக்காக காத்திருந்து, 'ரவாளி' படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறேன். தமிழகத்தில் கட்டுமான தொழிலாளியாக பணியாற்றும் வட இந்திய வாலிபன் ஒருவனுக்கும், தமிழ் பெண்ணிற்கும் காதல் உருவாகி, இருவரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஒரு தருணத்தில் வட இந்திய வாலிபன் காணாமல் போக, அவனைத் தேடி தமிழ் பெண் பயணிக்கிறாள். அவள் தன் கணவனை தேடி கண்டறிந்தாரா? இல்லையா? என்பதுதான் 'ரவாளி' படத்தின் திரைக்கதை.

கதைக்குப் பொருத்தமான இளம் தோற்றமுடைய வாலிபன் தேவை என்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான வணிகவளாகத்தில் சந்தித்த சித்தார்த் என்னும் இளைஞனை பயிற்சி அளித்து கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கிறேன். இவருக்கு ஜோடியாக மும்பையில் நாடக கலைஞராக கலை சேவையாற்றி வரும் நடிகை ஷா நைராவை தமிழில் அறிமுகப்படுத்துகிறேன். '' என்றார்.

காதலுக்கு முக்கியத்துவம் அளித்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சிவார்த்தா என்டர்டெய்ன்மென்ட் என்னும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் ஆர். சித்தார்த் மற்றும் ஷா நைரா ஆகியோருடன் ஜெயபிரகாஷ், பூ விலங்கு மோகன், ரியாஸ்கான், பப்லு, கஞ்சா கருப்பு, அப்புக்குட்டி, சுஜாதா, ஆத்மா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வினோத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெய் ஆனந்த் மற்றும் ஏ எஸ் மைக்கல் யாகப்பன் ஆகிய இருவரும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ஓடியோவை நடிகர் ரவி ராகுலின் குருவான மூத்த இயக்குநர் கஸ்தூரிராஜா வெளியிட்டிருக்கிறார். இயக்குநர்கள் நடிகர்களாக அறிமுகமாகி வெற்றி பெறும் இந்த காலகட்டத்தில் நடிகர் ஒருவர், இயக்குநராக அறிமுகமாவது வரவேற்புக்குரியது என திரையுலகினர் பாராட்டுகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right