தமிழறிந்த கோடிக்கணக்கான வாசகர்களின் நெஞ்சங்களில் தடம்பதித்த, அமரர் 'கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பிரம்மாண்ட கற்பனையில், நாற்பதுக்கும் மேலான கதாபாத்திரங்கள் உள்ளடக்கப்பட்டு, சுவாரஸ்ய எழுத்து நடையில் உருவான ஜனரஞ்சக சரித்திர நாவல் 'பொன்னியின் செல்வன்'.
தென்னிந்திய வரலாற்றின் அடிப்படையில் 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழ மன்னர்களை பற்றிய நாவல் இது.
அந்த காலப்பகுதியில் சோழர்களது வாழ்க்கையிலும் சாம்ராஜ்ஜியத்திலும் நடந்த சில சம்பவங்களை சிறிது கற்பனை கலந்து, தீந்தமிழ் சுவையுடன் எழுத்தாளர் கல்கி இந்நாவலை படைத்துள்ளார்.
1950 தொடங்கி 1954 வரை கல்கி வார இதழில் தொடராக பிரசுரமாகி, வாசகர்களிடத்தில் பெரும் புகழீட்டி, அது பின்னர் 'பொன்னியின் செல்வன்' ஐந்து பாகங்களை கொண்ட புத்தகங்களாக வெளியாகி, விற்பனையில் இமாலய வெற்றியை தொட்டது.
காவிய நாவலான இந்த 'பொன்னியின் செல்வன்', தமிழகத்தின் பல முன்னணி திரைப்பட கலைஞர்களின் பங்காற்றுகையில் திரைப்படமாக வடிவமைக்கப்பட்டு, தற்போது அதன் முதல் பாகம் எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் மணிரத்னம் இயக்கியுள்ளார்.
பல வருடங்களுக்கு முன் 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக உருவாக்கும் முதல் முயற்சியை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., மேற்கொண்டார்.
இக்கதையில் வரும் அருள்மொழி வர்மன், வந்தியத்தேவன் ஆகிய மிக முக்கியமான கதாபாத்திரங்களை தானே இரட்டை வேடங்களில் ஏற்று நடிக்க எம்.ஜி.ஆர்., விரும்பினார்.
எம்ஜியார் பிக்சர்ஸ் அளிக்கும் 'பொன்னியின் செல்வன்' என்ற போஸ்டரும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டது.
அப்போதைய தமிழகத்தின் பிரபல நடிகர்களான ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா, பத்மினி, சாவித்திரி, சரோஜாதேவி, டி.எஸ்.பாலையா, எம்.என். நம்பியார், ஓ.ஏ.கே.தேவர் போன்றோர் படத்தில் மிக முக்கியமான வேடங்களில் நடிக்க கால்ஷீட் வழங்கியும் இருந்தனர்.
படத்துக்கான திரைக்கதையை இயக்குநர் மகேந்திரனை எழுதச் சொன்னார், எம்.ஜி.ஆர். எனினும், மகேந்திரன் அப்போது நாடகங்களில் அதீத பணிகளில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக அவரால் திரைக்கதை எழுத முடியவில்லை. இருப்பினும், எம்.ஜி.ஆர்., வேறு சிலரை விட்டு திரைக்கதை அமைத்தார்.
1958இல் வெளியான 'நாடோடி மன்னன்' படத்துக்குப் பின் 'பொன்னியின் செல்வன்' படத்தை எம்.ஜி.ஆர்., பிக்சர்ஸ் சார்பில் தானே தயாரித்து, இயக்க எம்.ஜி.ஆர்., திட்டமிட்டிருந்தார்.
இதற்காக 1958இல் 'பொன்னியின் செல்வன்' கதையினது உரிமையை 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியிருந்தார், எம்.ஜி.ஆர். அதேயாண்டு 'இன்பக்கனவு' என்ற மேடை நாடகத்தில் நடிக்கும்போது எம்.ஜி.ஆர்., தன் காலை உடைத்துக்கொண்டார். இந்த விபத்துக்குப் பின் குணமாகி மீண்டெழ அவருக்கு ஆறு மாத காலம் தேவைப்பட்டது.
அத்தோடு ஏற்கனவே ஒப்பந்தமான பல படங்களில் பணியாற்றி முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் 'பொன்னியின் செல்வன்' படத்தை உருவாக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
அதன் பிறகு சில வருடங்கள் கழித்து, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடமிருந்து இக்கதையின் உரிமையை நடிகர் கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார்.
"இக்கதையை படமாக்கும் போது வந்தியத்தேவன் வேடத்தை ரஜினிகாந்துக்கு கொடு" என நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கமல்ஹாசனிடம் தெரிவித்திருந்தார்.
அருள்மொழி வர்மனாக கமல்ஹாசனும், மிக முக்கியமான வேடமொன்றில் ஸ்ரீதேவியும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அத்துடன் தமிழகத்தின் பல திரைப்பட நட்சத்திரங்கள் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கும் தயாராகவிருந்தனர். கமல்ஹாசனின் முயற்சியும் அவரின் கனவுப்படமான 'மருதநாயகம்' போல் பொன்னியின் செல்வனும் பாதியிலேயே நின்றுபோனது.
1999இல் லேண்டன் எனும் நாடகக் குழுவினர் 'பொன்னியின் செல்வன்' நாடகத்தை சென்னை வை.எம்.சி மைதானத்தில் அரங்கேற்றியிருந்தனர். இந்நாடகத்தில் நாசர், பசுபதி போன்ற பிரபல நடிகர்கள் நடித்திருந்தனர்.
அதன் பின் 2014, 2015களில் சென்னை, கோயமுத்தூர், மதுரை போன்ற நகரங்களில் பல முறை இந்த நாடகத்தை மேடையேற்றி வெற்றி காணச் செய்த பெருமைக்குரியவர், கதாசிரியரும் நடிகருமான குமரவேல் அவர்கள். இப்படிக் கூறினால், வாசகர்களுக்கு இவர் யாரென தெரியாது. 'அபியும் நானும்' படத்தில் ரவி சாஸ்த்திரி என்ற பிச்சைக்கார வேடத்தில் த்ரிஷாவுக்கு நண்பராக அற்புதமாய் நடித்தவரே இந்த குமரவேல்.
தமிழ் சினிமாவின் ஜனரஞ்சக இயக்குநர் என பெயரெடுத்த மணிரத்னத்தின் பகீரதப் பிரயத்தனத்தில் சுமார் நாற்பது ஆண்டுகால முயற்சிகளுக்குப் பின் லைகா சுபாஷ்கரனின் பல கோடி பொருட்செலவின் தயாரிப்பில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதலாம் பாகம் தயாராகி, இம்மாத இறுதியில் திரைக்களம் காணவிருக்கின்றது. பலர் முயற்சித்தும் இக்கதையை திரைப்படமாக உருவாக்க ஏறக்குறைய அறுபத்து நான்கு ஆண்டுகளாகியுள்ளது. ஆயினும், இயக்குநர் மணிரத்னத்தின் அபார முயற்சியே இக்காவியம் திரையோவியமாக மிளிர காரணமாகிறது.
இப்படம் இமாலய வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மனங்களிலும் துளிர் விட்டிருக்கின்றது.
சந்திரலேகா, ஔவையார், வீரபாண்டிய கட்டபொம்மன், பார்த்திபன் கனவு, சிவகங்கைச் சீமை, சம்பூர்ண இராமாயணம், கர்ணன், மஹாபாரத உபரிக் கதைகள் கொண்ட படங்கள், பாகுபலி போன்ற தென்னகத்தில் எடுக்கப்பட்ட பல பிரமாண்ட படங்களின் வரிசையில் பொன்னியின் செல்வனும் கண்டிப்பாக இடம்பிடிக்கும்.
அறுபத்து நான்கு ஆண்டுகளாக வாசகர்களின் மனதில் புத்தக வடிவில் இருந்த பாத்திரங்களுக்கு உயிர் கொடுக்க திரையினூடாக வருகின்றான் 'பொன்னியின் செல்வன்'.
உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கௌரவம் வழங்கும் வகையில் அவரின் உரையிலிருந்து இப்படம் தொடங்குகின்றது. இப்படத்தில் சில பாடல்களை பாடிய கலைஞர் பம்பா பாக்யா சமீபத்தில் காலமானார் என்பதும் துயர்மிகு தகவலாகும்.
'பொன்னியின் செல்வன்' படக்குழுவினரும்
கதா பாத்திரங்களும்
ஜெயம் ரவி: அருள்மொழி வர்மன் (பொன்னியின் செல்வன், பின்னாளில் ராஜ ராஜ சோழன்).
சீயான் விக்ரம்: ஆதித்த கரிகாலன்
ஐஸ்வர்யா ராய்: நந்தினி, மந்தாகினி தேவி.
திரிஷா: குந்தவை
கார்த்தி: வல்லவராயன் வந்தியத்தேவன்.
ஸாரா அர்ஜுன்: இளைய நந்தினி.
ஐஸ்வர்யா லக்ஷ்மி: பூங்குழலி
ஷோபிதா துலிபாலா: வானதி
பிரபு: பெரிய வேலர் பூதி விக்ரமகேசரி
சரத்குமார்: பெரிய பழுவேட்டரையர்.
விக்ரம் பிரபு: பார்த்திபேந்திரா பல்லவன்.
ஜெயராம்: ஆழ்வார்க்கடியான் நம்பி.
பிரகாஷ்ராஜ்: பராந்தக சுந்தர சோழன்.
ரகுமான்: மதுராந்தக உத்தம சோழன்.
பார்த்திபன்: சின்னப் பழுவேட்டரையர்.
அஷ்வின் ககுமன்: சேந்தன் அமுதன்.
அஷ்வின் ராவ்: கந்தமாறன்.
நிழல்கள் ரவி: கடம்பூர் சம்புவராயர்.
லால்: திருக்கோயிலூர் மலையமான்.
விஜயகுமார்: விஜயாலய சோழன்.
வித்யா சுப்ரமண்யம்: வானவன் மஹாதேவி.
ஜெயசித்ரா: செம்பியன் மஹாதேவி.
மோகன் ராமன்: அனிருத்த பிரம்மராயர் - 'குடந்தை' ஜோதிடர்.
நாசர்: வீரபாண்டியன்.
கிஷோர்: ரவிதாசன்.
ரியாஸ்கான்: சோமன் சாம்பவன்.
வினய்குமார்: பரமேஷ்வரன்.
அர்ஜுன் சிதம்பரம்: வரகுணன்.
நிம்மி ரஃபேல்: ராக்கம்மாள்.
வினோதினி வைத்தியநாதன்: வாசுகி (நந்தினியின் பணிப்பெண்).
மாஸ்டர் ராகவன்: பாண்டிய இளவரசன்.
பாபு எண்டெனி: ராஷ்ட்டிரகூட அரசன்.
மகரந்த் தேஷ்பாண்டே: காலமுகர்.
***
இயக்கம், திரைக்கதை: மணிரத்னம்.
தயாரிப்பு: 'லைக்கா' அல்லிராஜா சுபாஷ்கரன்.
இணை தயாரிப்பு: மணிரத்னம்.
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்.
கதை: 'கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி.
வசனம்: பி.ஜெயமோகன்.
பாடல்கள்: இளங்கோ கிருஷ்ணன்.
ஒளிப்பதிவு: ரவிவர்மன்.
கலை: தோட்டா தரணி
எடிட்டிங்: ஏ.ஸ்ரீகர் ப்ரஷாத்.
இத்திரைப்படத்தை பல கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளனர் இதன் படைப்பாளிகள். எனவே ரசிகர்கள் பலரும் இப்படத்தினை சின்னத்திரைகளிலும் கைப்பேசிகளிலும் பார்த்து தயவு செய்து, இதன் தரத்தை குறைத்துவிடாதீர்கள். திரையரங்குகளில் அகன்ற திரையில் தரமான ஒளி, ஒலியமைப்பில் படத்தினை கண்டு ரசித்து திரைக் கலைக்கும் அதனை படைத்த படைப்பாளிகளுக்கும் மதிப்பளித்து, கதையின் படைப்பாளியான அமரர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், தமிழின் பெருமைக்கும் நன்றிக்கடன் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
(எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ், கம்பளை)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM