நடிகை சமந்தாவின் 'சாகுந்தலம்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

By T Yuwaraj

26 Sep, 2022 | 10:23 PM
image

நடிகை சமந்தா கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சாகுந்தலம்' எனும் திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது..

தெலுங்கு திரை உலகின் முன்னணி நட்சத்திர இயக்குவரான குணசேகர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சாகுந்தலம்'. காளிதாசர் எழுதிய சாகுந்தலம் எனும் காவியத்தை தழுவி, தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் சகுந்தலையாக நடிகை சமந்தா நடிக்கிறார். இவருடைய மனம் கவர் காதலன் ராஜா துஷ்யந்தனாக நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார். 

இவர்களுடன் பிரகாஷ்ராஜ், கௌதமி, மதுபாலா, அதிதி பாலன், கபீர் பேடி, கபீர் துகான் சிங், மோகன் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான அல்லு அர்ஜுனின் மகளான அல்லு ஆர்ஹா இளவரசர் பரதர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சேகர் பி. ஜோசப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மணி ஷர்மா இசையமைத்திருக்கிறார். புராண இதிகாச நாடக பிரிவில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை குணா டீம் ஒர்க்ஸ் எனும் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் நீலிமா குணா தயாரித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் எனும் பிரபலமான பட நிறுவனத்தை சார்ந்த தில் ராஜு வெளியிடுகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நவம்பர் மாதம் நான்காம் திகதியன்று இந்த திரைப்படம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பட மாளிகைகளில் வெளியாகிறது.

'காத்து வாக்குல ரெண்டு காதல்' எனும் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை சமந்தா நடிப்பில் வெளியாகும் திரைப்படம் என்பதாலும், இதிகாச புராணங்களை மையப்படுத்திய திரைப்படங்களுக்கு தற்போது அகில இந்திய அளவில் பெரும் வரவேற்பு இருப்பதாலும், சமந்தாவின் 'சாகுந்தலம்' திரைப்படத்திற்கு வசூல் ரீதியான வெற்றி கிடைக்கும் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்