'பொன்னியின் செல்வன்' கதையை படமாக்குவது தமிழ் சினிமாவில் பலரின் கனவாக இருந்திருக்கிறது. அப்படி 1950-களில் கல்கி வார இதழில் தொடராக வெளிவந்தபோதே அதன் வெற்றி எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. ‘பொன்னியின் செல்வன்’ கதையின் உரிமையை வாங்கிய அவர், இயக்குநர் மகேந்திரனிடம் அதைத் திரைக்கதையாக மாற்றச்சொல்லியிருக்கிறார்.
ஆனால் ஒரு சில காரணங்களால் அது நிறைவேறாமலேயே போய்விட்டது. இதேபோல் கமலும் இக்கதையைப் படமாக எடுக்க முயற்சி செய்தார். ஆனால் கமலின் ஆசையும் நிறைவேறவில்லை. இப்படிப் பலரின் கனவுப் படமான பொன்னியின் செல்வனை தற்போது மணிரத்னம்தான் நிஜமாக்கி இருக்கிறார்.
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ரவிவர்மன் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் போஸ்டர், டீஸர், இசை வெளியீட்டு விழா என அனைத்துமே மக்களிடம், படத்தினுடைய எதிர்பார்ப்பை அதிகப்படுத்திருக்கின்றன. வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்பிரமாண்ட படத்தின் கதாபாத்திரங்களையும், படத்தில் யார் யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் என்பதையும் பார்ப்போம்.
சுந்தர சோழர் - நாவலில், சோழ நாட்டின் அரசர். குந்தவை, அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன் மூவரின் தந்தை. பொன்னியின் செல்வன் படத்தில் சுந்தர சோழராக நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.
ஆதித்த கரிகாலன் - சோழ நாட்டின் அரசன் சுந்தர சோழரின் மூத்த மகன். இளவரசராக முடி சூடப்பட்டவர். குந்தவை, அருள்மொழி வர்மரின் அண்ணன். சிறுவயதிலேயே போர் புரியும் திறன் கொண்டு விளங்கியவர். படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடிக்கிறார்.
அருள்மொழி வர்மன் - சுந்தர சோழரின் மகன். ஆதித்த கரிகாலன், குந்தவையின் தம்பி. இலங்கைக்குப் படைத் திரட்டிச் சென்று சோழ நாட்டிற்காக போர் செய்து வருபவர். சோழ மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். படத்தில் ஜெயம் ரவி அருள்மொழி வர்மனாக நடித்திருக்கிறார்.
வந்தியத் தேவன் - வாணர்குல இளவரசன். பல்லவ நாட்டிலிருக்கும் ஆதித்த கரிகாலன் சொன்னதன் பேரில் தஞ்சையில் உள்ள ஆதித்த கரிகாலனின் தந்தை சுந்தர சோழருக்கும், தங்கை குந்தவைக்கும் தூது கொண்டு செல்பவராக நாவலில் அறிமுகமாகிறார். படத்தில் இந்தக் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கிறார்.
குந்தவை - சுந்தர சோழரின் மகள். அண்ணன் ஆதித்த கரிகாலன் பல்லவ நாட்டிலும், தம்பி அருள் மொழி வர்மன் இலங்கையிலும் இருக்க பழையாறை அரண்மனையில் வசிப்பவர். சோழ நாட்டிற்கு வரப்போகும் பகையை எதிர்க்க திட்டம் வகுப்பதில் கவனமாக இருப்பவர். த்ரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
நந்தினி - திருமலையின் தங்கை. பழுவூர் சிற்றரசரான பெரிய பழுவேட்டையரின் மனைவி. வீரபாண்டியனைக் கொன்றமைக்காக சோழப் பேரரசினையே அழிக்கத் திட்டமிடும் பெண். இக்கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார்.
பூங்குழலி - காண்போர் மயங்கும் அழகிய பெண பூங்குழலி. இவர் தியாகவிடங்கரின் மகள். படகோட்டி முருகய்யனின் தங்கை. சேந்தன் அமுதனின் காதலி. படகு ஓட்டுவதில் திறமைசாலி. பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.
வானதி - கொடும்பாளூர் இளவரசி. அருள்மொழி வர்மனின் மனைவி. குந்தவையின் தோழி. பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் ஷோபிதா நடித்திருக்கிறார்.
பெரிய பழுவேட்டரையர் - பழுவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த சிற்றரசர். சுங்கத்துறை விதித்து வசூலிக்கும் அதிகாரிகளைக் கண்காணிக்கும் பொறுப்பினை ஏற்றிருப்பவர். நந்தினியைத் திருமணம் செய்து கொண்டு தனது இளையராணியாக்கியவர். இக்கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார்.
சின்ன பழுவேட்டரையர் - சின்ன பழுவேட்டரையர் என அழைக்கப்படும் காலாந்தகக் கண்டர் சோழப் பேரரசின் தஞ்சை கோட்டையினைக் காவல்காக்கும் தளபதி. இந்தச் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.
கடம்பூர் சம்புவரையர் - கடம்பூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்யும் சிற்றரசர். மணிமேகலை மற்றும் கந்தமாறனின் தந்தை.
மலையமான் - திருக்கோவிலூர் எனும் ஊரைத் தலைநகராகக் கொண்ட மலைநாட்டினை ஆளும் சிற்றரசர். சோழப்பேரரசியாக இருக்கும் வானமா தேவியின் தந்தை, ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி வர்மன் ஆகியோரது தாத்தா மலையமான். நடிகர் லால் இக்கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
ஆழ்வார்க்கடியான் நம்பி - சோழநாட்டின் முதல் மந்திரியான அநிருத்தப் பிரம்மராயரின் தலைசிறந்த தூதுவன். மேலும் பழுவூர் இளையராணி நந்தினியை வளர்த்த சகோதரர். மலையாள நடிகர் ஜெயராம் ஆழ்வார்க்கடியான் நம்பியாக நடித்திருக்கிறார்.
அநிருத்த பிரம்மராயர் - சோழப் பேரரசின் முதன்மை அமைச்சர். அநிருத்தப் பட்டாச்சாரி எனும் நாராயணன் புகழ் பரப்பிய அந்தணரின் கொள்ளுப் பேரன். இந்தக் கதாபாத்திரத்தில் மோகன் ராம் நடிக்கிறார்.
சோமன் சாம்பவன் - பாண்டியன்: சோமன் சாம்பவன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன்புதினத்தில் வருகின்ற பாண்டிய ஆபத்துதவிகளில் ஒருவராவார். ரியாஸ் கான் சோமன் சாம்பவனாக நடித்திருக்கிறார்.
ரவிதாசன் - பாண்டியன் - மந்திரவாதி என்று அழைக்கப்படும் ரவிதாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்திருக்கிறார்.
சேந்தன் அமுதன் - கதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவனின் நண்பன் பூங்குழலியை காதல் செய்யும் இக்கதாப்பாத்திரத்தில் அஸ்வின் நடிக்கிறார்.
கந்த மாறன் - கடம்பூர் சம்புவரையரின் மகன். வந்தியத்தேவனின் நண்பன். மணிமேகலையின் அண்ணண் கந்த மாறன்.
மதுராந்தகன் - சுந்தர சோழனின் பெரியப்பா கண்டராதித்தர் - செம்பியன் மாதேவியின் மகன். சிவ பக்தன். சோழ நாட்டின் அரசனாகும் ஆசையில் இருப்பவர். நடிகர் ரஹ்மான் மதுராந்தகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பார்த்திபேந்திர பல்லவன் - ஆதித்த கரிகாலனின் நண்பன். வந்தியத்தேவன் மீது பொறாமை இருந்த பார்த்திபேந்திர பல்லவன் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கிறார்.
குடந்தை ஜோதிடர் - பல்வேறு நாட்டின் அரச குமாரர்கள், அரச குமாரிகளின் ஜாதகங்களை சேர்த்து வைத்திருப்பவர். இந்தக் குடந்தை ஜோதிடர் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
பூதி விக்ரம கேசரி - பூதி விக்கிரம கேசரி முதலாம் பராந்தக சோழன் முதல் சுந்தர சோழன் வரையிலான காலங்களில் கொடும்பாளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட இருக்குவேளிர் குலத்தை சேர்ந்த சிற்றரசர் ஆவார். வானதியின் பெரியப்பா. இந்தக் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார்.
நன்றி விகடன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM