ஐ.எம்.எப். கடனை தாண்டிய இந்தியாவின் டொலர் உதவி

By Digital Desk 5

26 Sep, 2022 | 10:53 AM
image

இலங்கை தற்போது எதிர்கொண்டிருக்கின்ற இந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எந்த ஒரு நாடும் இந்தியா வழங்கியதை போன்று கூடிய கடனை வழங்கவில்லை.  ஒரு சில நாடுகள் ஐந்து மில்லியன், பத்து மில்லியன்,  20 மில்லியன் என்ற வகையில் உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால் இந்தியா சர்வதேச நிறுவனங்கள் ஊடாக அன்றி  நேரடியாக இலங்கைக்கு இவ்வருடத்தில் சுமார் மூன்று பில்லியன் டொலர்களை கடனாகவும் பொருளாகவும் வழங்கி இருக்கின்றது.  சர்வதேச நாணய நிதியம் பல நிபந்தனைகளுக்கு பின்னர் 2.9 பில்லியன்களையே இலங்கைக்கு வழங்க கொள்கையளவில் முன்வந்துள்ளது.  

ரொபட் அன்டனி 

நாட்டின்  பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பதன்  காரணமாகவே இவ்வாறு பணவீக்கம் அதிகரித்து செல்கிறது.  பொதுவான பணவீக்கம் 70 வீதமாகவும் உணவு பணவீக்கம்  84 வீதமாகவும் ஆகஸ்ட் மாதத்தில் பதிவாகியுள்ளது.  சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் வரலாற்றில் முதல்  தடவையாக இவ்வாறு பாரிய அளவில்   பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் அரசாங்கம் இந்த நெருக்கடியை தீர்த்துக் கொள்ளும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருக்கிறது.   சர்வதேச நாணய நிதியத்துடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று விட்டன.  அதன் ஒரு கட்டமாக தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகத்தர் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டிருக்கின்றது.  அதனடிப்படையில் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம்  இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்காக நீண்ட கால கடன் திட்டத்தின் அடிப்படையில் 2,9 பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு முன்வந்திருக்கிறது.

கடன் மறுசீரமைப்பு  

ஆனால் சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் இலங்கைக்கு ஏற்கனவே கடன் வழங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு  தொடர்பான இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டும்.  அவ்வாறு கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும் பட்சத்தில் மட்டுமே இலங்கைக்கு சர்வதேச நாணய   நிதியத்தின் உதவி கிடைக்கும்.   

அதனடிப்படையில்  இலங்கை தற்போது தனக்கு ஏற்கனவே கடன் வழங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்து இருக்கின்றது.  பரிஸ்கிளப் அமைப்பின்  நாடுகளுடன்    பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டன.  அதற்காக சர்வதேச ரீதியில் ஆலோசனை நிறுவனம் ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.  அதேபோன்று இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுடனும் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  கடந்த வாரம் இந்தியாவுடன்  இந்த கடன் மறுசீரமைப்பு  தொடர்பான முதல் சுற்று பேச்சுவார்த்ததையும் நடந்தது.

 சீனாவின் தயக்கம்  

எனினும் இந்த விடயத்தில் சீனா கடன் மறுசீரமைப்பு செய்து கொள்வதற்கு தயக்கம் காட்டிவருகிறது.  காரணம் சீனா  இவ்வாறு நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகளுடன்  கடன் மறுசீரமைப்பு செய்து கொள்வதில்லை.  எனினும்   இலங்கை தற்போது தனக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு  செய்தால் மட்டுமே சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும்.  எனவே சீனாவுடன் ராஜதந்திர  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு   இணக்கம் காண வேண்டும். சீனா இந்த விடயத்தில்  என்ன செய்யப் போகிறது என்பதே இங்கு மிக முக்கியமான விடயமாக காணப்படுகிறது. 

இந்தியாவின் தீர்க்கமான கடனுதவி 

ஆனால் இங்கு அவதானம் செலுத்தபடே வேண்டிய  முக்கிய விடயம் ஒன்று காணப்படுகின்றது. அதாவது  தற்போது சர்வதேச நாணய நிதியம்   இலங்கைக்கு 2.9     பில்லியன் டொலர்களை கடனாக  வழங்க நிபந்தனைகளை விதித்துள்ளதுடன்  கடன் மறுசீரமைப்பு செய்யப்படவேண்டும் என்று கூறுகிறது. ஆனால் 2022 ஆம் ஆண்டில் அயல்நாடான  இந்தியா இலங்கைக்கு 3 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான கடன் உதவியை வழங்கியிருக்கிறது.   இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரம் இந்த கடன் உதவி வழங்கப்பட்டிருக்கின்றது.

இவ்வருடத்தில் பல மட்டங்களின் கீழ் இந்தியா இலங்கைக்கு உதவிகளை வழங்கியுள்ளது. தெற்காசிய நாணய பரிமாற்று ஏற்பாடுகள் திட்டத்தின்கீழ் இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்களை இந்தியா ஏற்கெனவே வழங்கியிருந்தது.  அதேபோன்று இலங்கை 500 மில்லியன் டொலர் கடன் ஒன்றை செலுத்துவதற்கான உதவியையும் இந்தியா இலங்கைக்கு வழங்கியது.    அதனைத் தொடர்ந்து 1.5 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு இந்தியா வழங்கியது.  மேலும் இலங்கை இந்தியாவுக்கு செலுத்த வேண்டியிருந்த  ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை  இந்தியா தாமதப்படுத்தியது.   அதன் பின்னரும் மீண்டும்  500 மில்லியன்  டொலர்களை   இந்தியா இலங்கைக்கு கடனுதவியாக வழங்கியுள்ளது. 

அப்படி பார்க்கும்போது  சுமார் 4 பில்லியன்  டொலர்களை இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ளது. கடன் தாமத நிலையை விடுத்து பார்த்தால் இந்தியா 3 பில்லியன்  டொலர்களை வழங்கியுள்ளது. 

இந்திய உதவி கிடைத்திருக்காவிடின்…

இந்த உதவிகள் இலங்கைக்கு கிடைத்திருக்காவிடின்   இலங்கையின் நிலைமை இதனைவிட எவ்வாறு உக்கரமடைந்திருக்கும் என்பதனை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது.    இந்தியாவின் உதவி கிடைத்தும் கூட இலங்கை எரிபொருளுக்கு பாரிய நெருக்கடியை சந்தித்தது.  எரிபொருள் , எரிவாயு போன்வற்றை பெற   மக்கள் கிலோமீட்டர் கணக்கில் வரிசையில் நிற்கும்  நிலைமை ஏற்பட்டது.  இந்நிலையில்  அவ்வப்போது இந்தியாவினால் வழங்கப்பட்ட  உதவிகளினால் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நிலைமையை சமாளித்துக் கொள்ள முடியுமாக இருந்தது.  

இந்தியாவின் இந்த உதவிகள் தொடர்பாக பல்வேறு  எதிர்மறை மற்றும் நேர்மறை கருத்துக்கள்  முன்வைக்கப்படுகின்றன.  எவ்வாறு இருப்பினும் இந்தியாவின் இந்த உதவியானது மிக முக்கியத்துவம் மிக்கதாகவும் தீர்க்கமானதாகவும் காணப்படுகிறது.    

தொடரும் நெருக்கடி 

தற்போது கூட மக்கள் பாரிய பொருளாதார சுமையை சுமந்துகொண்டுள்ளனர்.    எரிபொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்திருக்கின்றன.  மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக மருத்துவ சங்கங்கள் அறிவித்துள்ளன.   அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்வடைந்துசெல்கின்றன.  அவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.  டீசல் பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது.  மக்களுக்கு வரையறுக்கப்பட்ட அளவிலேயே எரிபொருள் கோட்டா  முறையில் வழங்கப்படுகிறது.   அதேபோன்று சிறிய மற்றும்   நடுத்தர வர்த்தக முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன.  தனியார் நிறுவனங்கள்    அரச நிறுவனங்கள்  பாதிக்கப்பட்டுள்ளன.  கல்வித்துறை சுகாதாரத்துறை போன்வற்றில்  பல நெருக்கடிகள்  நிலவுகின்றன.  இந்த அனைத்து நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஒரு அளவு நாட்டின் பொருளாதாரத்தை கொண்டு செல்ல முடியுமா இருப்பது இந்தியாவின் கடன் உதவியினாலேயே  என்பது  இங்கு  மிக முக்கியமாகும்

இந்தியாவின் புதிய அறிவிப்பு 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக    இந்தியா இனி  இலங்கைக்கு நிதி உதவி செய்யப்போவதில்லை என்ற கருத்துக்கள் ஊடகங்களில் வெளியாகின.    ஆனால் அதனை மறுத்துள்ள   இந்தியா இது தொடர்பாக ஒரு அறிக்கையை சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது. 

அதில்  இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடிகளின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்காக இவ்வருடம் சுமார் 4 பில்லியன் டொலர் பெறுமதியான இருதரப்பு உதவிகளை இந்தியா வழங்கியிருக்கின்றது.   அதுமாத்திரமன்றி இலங்கைக்கு ஆதரவாக இந்தியா ஏனைய இருதரப்பு மற்றும் பல்தரப்புப் பங்காளிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது.  இந்தியா இயலுமான அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவத்தயாராக இருக்கின்றது. சுமார் 3.5 பில்லியன் டொலர் பெறுமதியான இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்புத்திட்டங்கள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன  என்று இந்தியா அறிவித்துள்ளது.   

அதாவது சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன்  டொலர் கடனை வழங்க கடன் மறுசீரமைப்பை நிபந்தனையாக முன்வைத்துள்ள நிலையில் இந்தியா  4 பில்லியன்  டொலர்களை வழங்கியுள்ளமையே இங்கு மிக முக்கியமானதாகும்.  ஜனாதிபதியாக கடந்த ஜூலை மாதம் தெரிவாகிய ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் கொள்கை பிரகடன உரையை நிகழ்த்தும்போது  இந்தியாவுக்கு பிரத்தியேகமாக நன்றி தெரிவித்தார்.  அதாவது இலங்கை மக்கள் மூச்சிவிடுவதற்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி தெரிவிப்பதாக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அன்று அறிவித்தார்.  இதனூடாக இந்தியாவின் டொலர் கடனுதவி எந்தளவு தூரம் முக்கியத்துவமிக்கது என்பதனை புரிந்துகொள்ள முடிகின்றது.   

இலங்கை தற்போது எதிர்கொண்டிருக்கின்ற இந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எந்த ஒரு நாடும் இந்தியா வழங்கியதை போன்று கூடிய கடனை வழங்கவில்லை.  ஒரு சில நாடுகள் ஐந்து மில்லியன், பத்து மில்லியன்,  20 மில்லியன் என்ற வகையில் உதவிகளை வழங்கி வருகின்றன. ஆனால் இந்தியா சர்வதேச நிறுவனங்கள் ஊடாக அன்றி  நேரடியாக இலங்கைக்கு இவ்வருடத்தில் சுமார் மூன்று பில்லியன் டொலர்களை கடனாகவும் பொருளாகவும் வழங்கி இருக்கின்றது. 

மக்கள் மத்தியில் எழும் கேள்விகள் 

இதேவேளை இலங்கையின்  தற்போதைய பொருளாதார டொலர் மற்றும் கடன் நெருக்கடி   தொடர்ந்தும்  பாரிய நெருக்கடியாகவே நீடித்துவருகிறது.  அரசாங்கம்  பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை மேற்கொண்டுவருகின்ற போதிலும் குறுகிய காலத்தில் நெருக்கடி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக  மக்கள்  வாழ்க்கைச் செலவு உயர்வினால் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.  

இந்நிலையில் அரசாங்கம் கடன் மறுசீரமைப்பை செய்துகொள்ளும் பட்சத்தில் மட்டுமே  சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்ள முடியும்.    கடந்த வியாழக்கிழமை கூட ஜனாதிபதி பரிஸ் கிளப் நாடுகளின் தூதுவர்களை கொழும்பில் சந்தித்து  கடன் மறுசீரமைப்பு  தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அவற்றின் பெறுபேறுகள் எவ்வாறு அமையும் என்பதும் இங்கு முக்கிய கேள்வியாகும். மேலும் பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுகின்றன.    இந்தியா மேலும் கடன் உதவிகளை வழங்குமா?  சீனா கடன் மறுசீரமைப்பு செய்துகொள்ளுமா?  இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி உதவி கிடைக்குமா?  அதனூடாக எரிபொருட்கள் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையுமா?   மக்களின் வாழ்க்கை செலவு சுமை குறையுமா?  போக்குவரத்து உள்ளிட்ட சேவைக் கட்டணங்கள் குறைக்கப்படுமா? மக்களின் வருமானம் அதிகரிக்குமா? என பல கேள்விகள் மக்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கின்றன. பதில் கிடைக்குமா என்பதையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓமான் பணிப்பெண்கள் விவகாரம் : மத்திய...

2022-12-01 14:33:01
news-image

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக மலையகத்தில் ஒன்றிணைந்த...

2022-12-01 14:32:19
news-image

உலக அழகி பிரியங்கா சோப்ரா மீதே...

2022-11-29 16:09:16
news-image

மத்திய வங்கியின் ஆளுநருக்கு மாதம் நான்கு...

2022-11-30 15:48:59
news-image

விடத்தல்தீவு எனும் இயற்கைப் வனத்தைப் பாதுகாப்போம்

2022-11-29 17:25:43
news-image

உணரப்பட வேண்டிய பெறுமதி

2022-11-28 15:05:06
news-image

உலக நீதி சீர்குலைந்த நாள் :...

2022-11-28 13:21:05
news-image

ஸ்கொட்லாந்தும் சுயநிர்ணய உரிமையும் - ஒரு...

2022-11-28 12:29:41
news-image

உலகப் போர் நினைவுச் சின்னங்களின் பின்னணியில்...

2022-11-28 11:05:34
news-image

அரசியல் தீர்வு: முஸ்லிம் தரப்பின் நிலைப்பாடு...

2022-11-27 17:30:18
news-image

உக்ரேனில் நீளும் போரும் குறைந்துவரும் ஆதரவும்

2022-11-27 17:16:51
news-image

வரவு - செலவுத் திட்டம் 2023...

2022-11-27 16:08:24