இந்தியா இலங்கைக்கு பலமாக இருக்கின்றது : விரைவில் இந்தியாவுக்கு விஜயம் செய்வேன் - பிரதமர் தினேஷ்

By Digital Desk 5

25 Sep, 2022 | 03:44 PM
image

ரொபட் அன்டனி

  • வடக்கு கிழக்கின் விசேட பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை
  • உள்நாட்டில் ஜெனிவாவை கையாள்வோருக்கு அரசியல் நோக்கம்
  • திருக்கோணேஸ்வர விவகாரத்தை அமைச்சர் தீர்த்து வைப்பார்
  • அந்தக் கேள்வியை கோட்டாவிடமே கேட்க வேண்டும்
  • சர்வகட்சி அரசமைக்க முடியாமைக்கு எதிர்க்கட்சிகளே காரணம்
  • ஐ.எம்.எப். உதவிக்கு யாரும் தடையேற்படுத்த மாட்டார்கள்

இந்தியா இலங்கைக்கு நெருக்கடி மிக்க நேரத்தில் பாரிய உதவியை வழங்கியிருக்கின்றது.  இந்தியா   எமக்கு   பலமாக  உதவியாக இருந்திருக்கிறது. எமக்கு ஒரு வலுவான உதவியை செய்திருக்கின்றது. விரைவில் நான் இந்தியாவுக்கு விஜயம் செய்ய எதிர்பார்க்கின்றேன். இந்தியா எமக்கு வழங்கிய உதவி மிகவும் முக்கியத்துவம் மிக்கது.  இந்தியாவின் உதவியை நாங்கள் பாரிய அளவில் மதிக்கின்றோம் என்று  பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசாங்கம் பாரிய அரப்பணிப்புடன் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் சர்வ கட்சி அரசாங்கம் அமைப்பதற்கு முன்வரவில்லை.  எதிர்க்கட்சிகள் தாமாகவே ஒரு சில நிபந்தனைகளை வைத்துக்கொண்டு சர்வ கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாமல் இருந்ததை நாங்கள் கண்டோம். அதனால்தான்  சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை  என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

வடக்கு கிழக்கில்  காணப்படுகின்ற விசேட பிரச்சினைகள் தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். அது தொடர்பாக நாங்கள் வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம்  என்றும்  பிரதமர் கூறினார்.

வீரகேசரி வார வெளியீடு சார்பில் நேற்று பிரதமரிடம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.

பிரதமர் இதன்போது மேலும் தெரிவிக்கையில் ,

கேள்வி சர்வ கட்சி அரசாங்கம் அமைக்க முடியாமையின் காரணம் என்ன?

பதில் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு அரசாங்கம் பாரிய அரப்பணிப்புடன் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் சர்வ கட்சி அரசாங்கம் அமைப்பதற்கு முன்வரவில்லை.  எதிர்க்கட்சிகள் தாமாகவே ஒரு சில நிபந்தனைகளை வைத்துக்கொண்டு சர்வ கட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்ளாமல் இருந்ததை நாங்கள் கண்டோம். எனவே எதிர்கட்சிகள் முன் வராததன் காரணமாகவே எங்களால் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை.  எதிர்க்கட்சிகள் தாமாகவே ஒரு சில நிபந்தனைகளை ஏற்படுத்திக் கொண்டு சர்வ கட்சி அரசாங்கத்திற்கு வராமல் இருந்தன.

கேள்வி ஜெனிவா மனித உரிமை  பேரவையில் மற்றும் ஒரு புதிய பிரேரணை இலங்கைக்கு இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ளது.  அதனை அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகிறது?

பதில் ஜெனிவா விவகாரத்தை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கையாண்டு வருகிறார்.  அவர் அந்த செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.  ஆனால் நாங்கள் ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும்.  உள்ளக ரீதியில் நாங்கள் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.  குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்ட விவகாரத்தில் நாங்கள் சில நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றோம்.   அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாகவும் ஏனைய பல்வேறு விடயங்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இந்த விடயங்களை நாங்கள் தொடர்ச்சியாக சர்வதேச சமூகத்திற்கு தெரிவித்து வருகின்றோம்.  ஆனாலும் இந்த விடயத்தில் தொடர்ச்சியாக இவ்வாறு நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கேள்வி அப்படியானால் அரசியல் நோக்கம் இருக்கின்றது என்று கூறுகிறீர்களா ?

பதில் இலங்கையிலிருந்து இந்த ஜெனிவா விவகாரத்தை கையாளுகின்றவர்களுக்கு பின்னால் ஒரு அரசியல் நோக்கம் இருப்பதை நான் காண்கிறேன்.  இலங்கையில் இருந்து   ஜெனிவா செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றவர்கள் அரசியல் நோக்கத்தில் செயல்படுகின்றனர் என்பதே எனது கருத்தாகும்.

கேள்வி அப்படியானால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளை நீங்கள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தலாமே ?

பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சகல  கட்சிகளுடனும் நாங்கள் இந்த ஜெனிவா விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்தி இருக்கின்றோம். நாங்கள் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம்.  எவ்வாறான முன்னேற்றங்கள்  ஏற்படுத்தப்பட்டுள்ளன   என்பது தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகளுக்கும் தெளிவுபடுத்தி வருகின்றோம்.   ஆனாலும் இந்த விவகாரம் தொடர்கிறது.

கேள்வி நீங்கள் அண்மையில்   இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தீர்கள்.  இந்தியா இலங்கைக்கு பாரிய    உதவிகளையும் செய்திருக்கின்றது.    இந்திய உயர்ஸ்தானிகருடன் என்ன பேசப்பட்டது?

 பதில் இந்திய  உயர்ஸ்தானிகருடன்  நான் அடிக்கடி சந்தித்து சுமுகமான பேச்சு வார்த்தைகளை நடத்துவது வழமையாகும்.  இலங்கைக்கு இந்தியாவுக்கும் இடையில் பல்வேறு வழிகளில் பாரிய நெருக்கமான தொடர்புகள் காணப்படுகின்றன.  எனவே அவற்றின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம். அதன் அடிப்படையிலேயே அண்மையில் இந்திய உயரஸ்தானிகளுடன் எனது சந்திப்பு இருந்தது.    இந்தியா இலங்கைக்கு நெருக்கடி மிக்க நேரத்தில் பாரிய உதவியை வழங்கியிருக்கின்றது.  இந்தியா   எமக்கு   பலமாக  உதவியாக இருந்திருக்கிறது.   எமக்கு ஒரு வலுவான உதவியை செய்திருக்கின்றது. விரைவில் நான் இந்தியாவுக்கு விஜயம் செய்ய எதிர்பார்க்கின்றேன்.  இந்தியா எமக்கு வழங்கிய உதவி மிகவும் முக்கியத்துவம் மிக்கது.  இந்தியாவின் உதவியை நாங்கள் பாரிய அளவில் மதிக்கின்றோம்.

 கேள்வி முன்னாள்  ஜனாதிபதி கோத்தப்பய ராஜபக்ச நாடு திரும்பி இருக்கின்றார்.  அவர் மீண்டும் அரசியலுக்கு வருவாரா ?

பதில் நீங்கள் அந்த கேள்வியை கோட்டாபய ராஜபக்ஷவிடமே கேட்க வேண்டும்.,

 கேள்வி   நீங்கள் தற்போது வகித்துக் கொண்டிருக்கின்ற பிரதமர் பதவிக்கு அவரை நியமிக்க போவதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.  அது தொடர்பாக ஏதாவது ?

பதில் இந்த கேள்வியையைும் நீங்கள் கோட்டாபய ராஜபக்ஷவிடமே கேட்க வேண்டும்.

 கேள்வி கோட்டாபய ராஜபக்ஷவை நீங்கள் சந்தித்தீர்களா?

பதில் நான் சகல முன்னாள் ஜனாதிபதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றேன்.

 கேள்வி எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் நாம் கடன் மறுசீரமைப்பை செய்து கொள்ளும் பட்சத்தில் மட்டுமே சர்வதேச நாணய நிதியம் இணங்கியிருக்கின்ற 2.9 பில்லியன் டொலர் கடன் கிடைக்கும்.  எனினும் சீனா கடன் மறுசீரமைப்பு செய்ய தயங்குகிறது.  என்ன நடக்கப்போகிறது?

 பதில் நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்து பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகின்றோம்.  தற்போது உத்தியோகஸ்தர் மட்டத்திலான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது.  தொடர்ந்து நாங்கள் வலுவான முறையில் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். அதேபோன்று எமக்கு கடன் வழங்கிருக்கின்ற சகல நாடுகளுடனும் நாங்கள் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். சர்வதேச நாணய நிதியமும் கூட எமது சார்பாக பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொண்டிருக்கின்றது.    எந்தவித தடையும் இன்றி விரைவாக சர்வதேச நாணய  நிதியத்தின்  கடன் உதவியை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும் என்று நாங்கள் நம்புகின்றோம்.  அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றோம். எந்த ஒரு நாடும் இதற்கு தடையாக இருக்காது என்பதே எனது நம்பிக்கையாக இருக்கின்றது.

கேள்வி இனப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.  இனப் பிரச்சினை தீர்வு விடயம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் ?

பதில் இது  தொடர்பாக ஜனாதபதி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றார்.  அதன்படி அவர் நடவடிக்கைகளை முன்னெடுப்பார். குறிப்பாக அரசியலமைப்பு மாற்றம்,  புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பன தொடர்பாக பேசப்பட்டிருக்கின்றது.  இவை மிகவும் சவாலான விடயங்கள்.  எனினும் ஜனாதிபதி அறிவித்த விடயங்களை மற்றும்  அவர் தனது கொள்கை பிரகடன உரையில் முன் வைத்து விடயங்களை  முன்னெடுத்து செல்வார்.    வடக்கு கிழக்கில்  காணப்படுகின்ற விசேட பிரச்சினைகள் தொடர்பாக நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். அது தொடர்பாக நாங்கள் வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம். பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இந்த விடயங்களை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். இதில் முன்னேற்றங்களையும் ஏற்படுத்துவோம்.

 கேள்வி அமைச்சர் பதவியில் இருந்து பிரதமராகி இருக்கின்றீர்கள்.  அந்த மாற்றத்தை எவ்வாறு உணர்கின்றீர்கள் ?

பதில் ஆர்வத்துடன் வேலை செய்து கொண்டிருக்கின்றேன். பல்வேறு தேசிய பிரச்சனைகளை தீர்க்க வேண்டியிருக்கின்றது.  எனவே அவை தொடர்பாக தினமும் பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொள்ள  வேண்டியுள்ளது. பல்வேறு தரப்பினரையும் சந்திக்க வேண்டி இருக்கின்றது.

கேள்வி திருக்கோணேஸ்வரம் விவகாரம் தொடர்பாக அரசாங்கம் என்ன செய்யப்போகிறது ?

பதில்   திருக்கோணேஸ்வரம் விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர் நடவடிக்கைகள் எடுத்திருக்கின்றார்.  அவர் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.  இந்த விடயத்தில் நாங்கள் சகல தரப்பினரதும் விடயங்களுக்கு செவிமடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.

 அமைச்சர் இந்த இந்த விவகாரத்தில் செயல்பாடுகளை மேற்கொள்வார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right