தமிழர்கள் ‘தாங்கு தளம்’

Published By: Digital Desk 5

24 Sep, 2022 | 08:44 PM
image

லோகன் பரமசாமி

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் ‘இலங்கை நல்லிணக்கச் செயற்பாடுகளில் போதுமான அளவுக்கு முன்னேற்றம் காணப்படவில்லை’ என்ற இந்தியா தெரிவித்துள்ளது. 

அத்துடன், இலங்கையின் செயற்பாடுகள் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் அடிப்படைகளுக்கு ஏற்றதாக இல்லை என்றும் இலங்கையில் 13ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.  

தமிழ் மக்கள், தமது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு 13ஆவது திருத்தச் சட்டம் போதுமானதாக இல்லை என்பதை தற்பொழுது உறுதியாக கூறிவருகின்றனர்.

ஆனாலும், இந்தியா 13ஆவது திருத்தச்சட்;டத்தினை முழுமையாக அமுலாக்குவதையே இலக்காக கொண்டு செயற்படுகின்றது.

1987இல் இந்திய, இலங்கை உடன்படிக்கை காரணமாக உருவான 13ஆம் திருத்த சட்டம் அப்போதைய சர்வதேச நிலைமைகளுக்கு அமைவாக, அது இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்வதாக இருக்கின்றது என்று இந்தியத்தலைவர்கள் உணர்ந்திருக்கலாம்.

ஆனால் தற்போதைய பூகோள அரசியல் நிலைமைக்கும் இலங்கையில் எழுந்துள்ள சீன செல்வாக்கின் வீரியத்திற்கும் இடையில் 13ஆம் திருத்த சட்டம் வெற்றுக் காகிதமாகவே பார்க்க வேண்டியுள்ளது. 

இலங்கையின் பல்வேறு இடங்களிலும் தனது கால்களை பதித்துள்ள சீனா இந்தியப் பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக இருக்கிறது என்பது புதுடில்லியின் பாதுகாப்பு ஆலோசகர்களது பெரும் கரிசனையாகும். இதன் தொடர்ச்சியாக சீன தொழில் நுட்பத்தில் உருவான 1155 அடி உயரமான தொலைதொடர்பு சமிக்ஞை வசதிகள் கொண்ட  தாமரைக்கோபுரம் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்தியப் பத்திரிகைகள் இதனையொரு ‘வெள்ளையானை’ என்று சித்தரித்து வருகிண்றனர். அத்தோடு, இந்தியாவை அயல் நாடாக கொண்டிருந்தும் இலங்கையின் உறுதியான சீன சார்புக் கொள்கையை காட்டும் வெளிப்படையான அடையாளச்சின்னம் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்தோ, பசுபிக் பெருங்கடல்  பிராந்தியங்களில்  இந்து சமுத்திரம் ஒரு முக்கிய மூலோபாய சந்தியாகும். இத்தகைய சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமுத்திரத்தின் நடுநாயகமாக திகழும் இலங்கையின் புவியியல் நிலையம் இந்தியப் பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புபட்டதாகும்.

பூகோள அரசியலில் பிராந்திய பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பு மிக முக்கிய விவகாரமாகவும்  இது தரைவழி, வான்வழி, கடல்வழி போக்குவரத்துடன் தொடர்புடையது மட்டுமல்லாது குறிப்பிட தக்க  பதற்ற காலங்களில் இடம் பெறகூடிய தகவல் பரிமாற்றம், கேந்திர முக்கியத்தவம் வாய்ந்த நிலைகளின் உபயோகம் ஆகியவற்றுடன் மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டதாகும்.

இலங்கை இவை எல்லாவற்றையும் உதாசீனம் செய்தோடு, தனது அதீத பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உல்லாசப் பயணக்கவர்ச்சி மையம் என்ற வகையில் தனது சீன இணக்கத்தை வெளிக்காட்டி இருப்பது கவனிக்கதக்கதாகும். 

சீனாவின் தலைநகரான பீஜிங்கின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க பிரித்தானிய ஆய்வு மையங்கள் அறிக்கைகள் தயாரித்து வெளியிட்டு வருகின்றன.  இந்த அறிக்கைகள் யாவும் பீஜிங்கின் இரகசிய நகர்வுகள் குறித்தே பேசுகின்றன. ஐக்கிய அமெரிக்க சமாதான கற்கை நிறுவனத்தின் இம்மாத அறிக்கை கூறும் விடயம் முக்கியமானது. 

பசுபிக் பிராந்தியத்தில் மிகச்சிறிய தீவுகளான மாசல் தீவுகள் , மைக்கிரோநீசிய தீவுகள், பலாவு தீவுகள் போன்றன 1980களிலும் 1990களிலேயே தமது சுயநிர்னய உரிமை கொண்ட அரசாங்கங்களை அமைத்து கொண்டன.  அவை சுதந்திரம் அடைந்த காலங்களில் ஐக்கிய அமெரிக்காவே பிரதான பொருளாதார பாதுகாப்பு பங்காளியாக இருந்தது. ஆனால் இன்று இந்த தீவுகளில் சீன கட்டமைப்புகளின் வளர்ச்சிகள் மிக விரைவாக வளர்ந்து  வருவது கவனிக்கப்பட்டு உள்ளது. 

அதாவது சீனா உலகலாவிய வகையில் மிகப்பாரிய அளவில் தனது வளர்ச்சிக்கு சவாலாக இருக்க கூடிய நாடுகளின் மத்தியில் இராஜதந்திர ரீதியாகவும் கலாசார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முதலீடுகளை செய்து வருகிறது. இது வளர்ந்து வரும் மூலோபாய ரீதியாக உருவாக  கூடிய போட்டியை வெளிப்படையாக காட்டி நிற்கிறது. 

அண்மையில் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் விருந்தினர் கட்டுரை பகுதியில் முன்னாள் பிரித்தானிய உளவுத்தறை அதிகாரி ஒருவர் எழுதியுள்ள பத்தியில் முன்பு எந்தவொரு போட்டி வல்லரசும் அணுகாத தொழில்நுட்ப மற்றும் பொருளாதார அறிவியற்துறைகளில் சீனா முன்னேறி வருவதுடன் பல பெரிய நாடுகளின் அரசிலிலும் செல்வாக்கு செலுத்தி வருவதை வியப்புடன் கூறியுள்ளார்.

சீனாவின் வளர்ச்சியில் 2018ஆம் ஆண்டிலிருந்து முன்பு இருந்ததை விட ஏழு மடங்கு அதிகரித்த அளவில் வளர்ந்து வருகிறது.  பல்வேறு மேலைத்தேய தொழில் நுட்பத்திறன்களை மிக இலாவகமாக பிரதி செய்து வெற்றிகரமாக முன்னேறுவதாக அந்த பந்திகளில் அவர் கூறியுஉள்ளார். 

அதேவேளை, சீனாவுடன் போட்டி போடுவதற்கு  தனியாக எந்தவொரு வரல்லரசும் தயார் நிலையில் இல்லை என்பது ஐரோப்பிய ஆய்வாளர்களின் பார்வையாகும். இதில் முக்கியமான விடையம் என்னவெனில் சீனா உலகின் பொருளாதார வளர்ச்சியில் பிரதான பங்கு வகிப்பதால் அது உலகின் பொருளாதாரத்தை இயக்கும் இயந்திரமாக மாறிவருகிறது. 

இதனால் தற்போதைய  உலகலாவிய ரீதியிலான பொருளாதார மீள்எழுச்சி நிலையில் வல்லரசுகள் பல இணைந்தும் சீனாவின் வளர்ச்சியை தடுப்பது இலகுவானதன்று. இதனால் பல்வேறு சிறிய நாடுகளின் உதவியையும் வல்லரசுகள் எதிர்பார்ப்பது தவிர்க்க முடியாததாகும். 

இந்தியா தன்னை ஒரு சீன போட்டியாளனாக காட்டி கொண்டாலும் தன்னை சூழ உள்ள நாடுகள் இந்திய சார்பாக இல்லாது போனால் காலப் போக்கில்  இந்த சமுத்திர பிராந்தியத்தில் சீன மேலாதிக்கத்தை  ஏற்று கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடும் என்பதில் ஐயமில்லை.

இதனால் இந்தியா தன்னுடன் சமூக கலாசார ரீதியாக ஒன்றிப்பினைந்த தரப்புகளை இணைத்து கொள்வது  அதன் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதாக இருக்கும். 

ஆனால் இலங்கை போன்ற நாடுகள் பேச்சளவில் தன்னை ஒரு இந்திய நண்பனாகக்காட்டி கொண்டாலும் செயல் அயவில் சீன உறவை நாடும் கொள்கையை கொண்டிருப்பதையே காணக்கூடியதாக உள்ளது. 

இந்த நிலையில் இந்தியா தமிழ் மக்களின் செல்வாக்கை அதிகரிக்க செய்வதில் முக்கிய கவனம் செலுத்தவேண்டும். இன்னமும் பல தசாப்தங்களுக்கு முந்திய புவிசார் அரசியல் ஒப்பந்தமான இந்திய இலங்கை ஒப்பந்தத்தை மையமாக கொண்ட நகர்வுகளில் விடாப்பிடியாக இருப்பது இந்திய பாதுகாப்பிற்கே ஏற்றதாக அமையாது. 

இன்னமும் தமிழ் மக்களிற்கு 13ஆம் திருத்தம் தான் சரியான தீர்வு என்று இந்தியா வாதிடுவது இந்தியா தன்னைத்தானே சீன மேலாதிக்கதிற்குள் அடிபணிய செய்து கொள்வதற்கு சமமானதாகவே பார்க்க வேண்டியுள்ளது.  

காலத்தாலும் கலாசாரத்தாலும் சமூக ஒற்றுமையாலும் மொழியாலும் இணைந்த தமிழ் சமுதாயத்தை இலங்கை தீவின் வடக்கு, கிழக்கு பிராந்தியத்தில் ஒரு பாதுகாப்பு தாங்கு தளமாக அணுக வேண்டிய காலம் மிக விரைவில் ஏற்படும் என்பது தான் எதிபார்ப்பாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்