மனச்சோர்வுக்கு மருந்தாகும் 'நித்தம் ஒரு வானம்'

By Digital Desk 5

24 Sep, 2022 | 01:59 PM
image

முன்னணி நட்சத்திர நடிகராக வளர்ந்து வரும் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படமான 'நித்தம் ஒரு வானம்' பார்வையாளர்களின் மனச்சோர்வுக்கு மருந்தாக இருக்கும் என படக் குழுவினர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'நித்தம் ஒரு வானம்'. இதில் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ராஜசேகர், ரித்து வர்மா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள்.

விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைத்திருக்கிறார். பயணத்தையும், காதலையும் மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்களின் சார்பில் ஸ்ரீநிதி சாகர் ரூபக் பிரணவ் தேஜ் ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு அனைவரும் தங்களுக்குள் ஏற்பட்ட மன சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட பயணம் மேற்கொள்ள திட்டமிடுகிறார்கள்.

ஏனெனில் பயணம் என்பது உளவியல் ரீதியாக மனச்சோர்வுக்கு மருந்தாகும் விடயம். மேலும் பயணங்கள் பல நேர்மறையான அதிர்வுகளையும் ஏற்படுத்தக் கூடியவை.

'நித்தம் ஒரு வானம்' படத்தை பட மாளிகைகளில் பார்த்துவிட்டு திரும்பும் போது மனதில் புத்துணர்ச்சியும், உதட்டில் புன்னகையும் நிச்சயம் இருக்கும்.

இதனை மையப்படுத்தி தான் படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மூன்று வெவ்வேறு நிலப்பரப்புகளில் பயணம் மேற்கொள்ளும் நாயகனின் வாழ்வில் குறிக்கிடும் மூன்று நாயகிகளும்,  அதன் தொடர்பான சம்பவங்களும் தான் படத்தின் திரைக்கதை'' என்றார்.

நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் காதலைப் பற்றிய திரைப்படம் என்பதாலும், மூன்று இளம் முன்னணி நட்சத்திர நடிகைகள் நடித்திருப்பதாலும், 'நித்தம் ஒரு வானம்' திரைப்படத்திற்கு ரசிகர்களிடமும், திரையுலக வணிகர்களிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்