இந்தியாவை நம்ப வைக்கும் முயற்சி

By Digital Desk 5

24 Sep, 2022 | 12:39 PM
image

சுபத்ரா

அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவப் பயன்பாட்டுக்கானது அல்ல, அது வர்த்தகத் துறைமுகம் தான் என்று, தேசிய பாதுகாப்புக் கல்லூரியின், பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்.

ராஜபக்ஷவினர் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைத்த காலத்திலும் இதனைக் கூறினார்கள். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், அம்பாந்தோட்டை துறைமுகத்தை, சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கிய போது ரணில் விக்கிரமசிங்கவும் அதனையே கூறினார்.

இப்போது மீண்டும் அவர் அவ்வாறே கூறுகிறார். ஆட்சியில் உள்ளவர்கள் இதனை திரும்பத் திரும்பக் கூறுகின்ற நிலை இருக்கிறது என்றால், இந்த உண்மையை யாரும் நம்புகிறார்கள் இல்லை என்று தான் பொருள்.

அம்பாந்தோட்டை துறைமுகம் வர்த்தக துறைமுகம் தான். சீன நிறுவனம் அதனை நிர்வகிக்கும் வேலையை மட்டும் தான் செய்கிறது.

அங்கு கடற்படையின் கொமாண்டோ அணி இருக்கிறது. இராணுவத்தின் கட்டளைத் தலைமையகம் இருக்கிறது என்றெல்லாம், ரணில் விக்கிரமசிங்க, படை அதிகாரிகளுக்கு முன்பாக பாடம் நடத்தியிருக்கிறார். அவர் இந்தப் பாடத்தை நடத்தியது, தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் என்பதை மறந்து விட்டார்.

தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் கற்றவர்கள், கற்பித்தவர்களுக்கு இந்த உண்மை ஒன்றும் தெரியாததல்ல. அவர்களுக்கு எந்தப் படைப்பிரிவு எங்கு இருக்கிறது. யாருடைய கட்டளையில் இயங்குகிறது என எல்லா தகவல்களையும் அறிந்தவர்கள்.

அவ்வாறிருக்க ரணில் விக்கிரமசிங்க இந்தப் பாடத்தை அங்கு எடுக்க முயன்றதற்கு  முக்கியமான ஒரு காரணம் உள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை இராணுவத் தேவைக்குப் பயன்படுத்த அனுமதிக்கவில்லை. அனுமதிக்கப் போவதும் இல்லை என்ற செய்தியை உள்நாட்டுக்கும் வெளிநாட்டுக்கும் கூறுவது தான் அது.

சீனாவின் யுவான் வாங்-5 என்ற செய்மதி மற்றும் ஏவுகணை வழித்தடக் கண்காணிப்புக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்துச் சென்ற பின்னர், அதனை சீனத் துறைமுகமாக அடையாளப்படுத்தும் போக்கு சர்வதேச அளவில் காணப்பட்டது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது என்ற கருத்தை, ஜனாதிபதி ரணில் உடைக்க விரும்புகிறார்.

ஆனால், யுவான் வாங்-5 கப்பலின் வருகை, அந்த நிலையைப் பலவீனப்படுத்தி விட்டது.

ஏனென்றால், கப்பலின் வருகைக்கு கோட்டாபய ராஜபக்ஷ கடைசி நேரத்தில் அனுமதி கொடுத்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.

அதுபற்றி ரணிலுக்குத் தெரிந்திருக்கவில்லை.  கப்பல் வருகை பற்றிய செய்திகள் பரவி அது சர்ச்சையாக, இந்தியத் தரப்பில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

அப்போது, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம், யுவான் வாங் கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு சீனாவுக்கு அறிவித்தது. ஆனாலும் பின்னர் அவர் தவிர்க்க முடியாமல் ஒப்புதல் அளித்தார். 

சீன நிறுவனத்தின் கையில் உள்ள துறைமுகம் என்பதால் தான் தட்டிக்கழிக்காமல் அந்த அனுமதியை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதுவே திருகோணமலை அல்லது கொழும்புத் துறைமுகமாக இருந்திருந்தால், ரணில் விக்கிரமசிங்க விளைவுகளைப் பொருட்படுத்தாமல் தடுத்திருக்க முடியும்.

அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு யுவான் வாங்-5 கப்பல் அனுமதிக்கப்பட்டதால், அது சீனாவின் இராணுவப் பயன்பாட்டுத் துறைமுகமாக உள்ளதென்ற நிலைப்பாடு வலுவடைந்திருக்கிறது.

அதனைத் தாண்டி, அம்பாந்தோட்டையை வர்த்தக துறைமுகமாகவும், இலங்கையை பக்கச்சார்பற்ற நாடு என்றும், இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை கொடுக்காத நாடு என்றும் திரும்பத் திரும்ப உறுதியளிக்க முற்படுகிறார் ரணில்.

இந்தியாவின் பாதுகாப்பை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவர் தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவும் மாலைதீவும் இலங்கையின் பாதுகாப்புக்கு முக்கியமானதாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பையும் உறுதித்தன்மையையும் பேணுவதன் மூலம், இலங்கையை வர்த்தக கேந்திரமாக அபிவிருத்தி செய்ய முடியும் என்றும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருக்கிறார்.

ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கா தொடர்ச்சியாக கூறிவருகின்ற கருத்தையே தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் தெரிவித்திருக்கிறார்.

இந்தியப் பெருங்கடலில் சுதந்திரமான, திறந்த, வெளிப்படையான கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே அது.

அமெரிக்கா இந்த நிலையை இந்தோ- பசுபிக் பிராந்தியம் முழுமைக்கும் எதிர்பார்க்கிறது. சீனாவின் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள தென் சீனக் கடல் தொடக்கம், அரபிக் கடல் வரைக்கும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

இந்தப் பிராந்தியம் உலகின் அதிகபட்ச கப்பல் போக்குவரத்து நடந்து கொண்டிருக்கும் கடற்பகுதியைக் கொண்டது. 

பெரும்பாலான சரக்கு மற்றும் எண்ணெய்க் கப்பல்கள் இதனைக் கடந்தே செல்கின்றன. இவ்வாறான ஒரு பிராந்தியத்தில் அமைதியற்ற சூழல் ஏற்படுமானால் அது நாடுகளையும் பாதிக்கும். அவற்றின் பொருளாதார வளர்ச்சியையும் தடுத்து விடும்.

யுவான் வாங்-5 கப்பல் விவகாரத்துக்குப் பின்னர் இந்திய- சீன பதற்றம் இந்தியப் பெருங்கடலில் அதிகரித்திருக்கிறது.

சீனாவை இந்தப் பிராந்தியத்துக்குள் இழுத்து வந்து, இலங்கை அமைதியைக் குலைத்து விட்டதாக புதுடெல்லி நினைக்கிறது.

அதேவேளை சீனா தனது இலக்கு மெதுமெதுவாக நிறைவேறிக் கொண்டிருப்பதாக திருப்தி கொள்கிறது.

இவ்வாறான பின்னணியில், இந்தியாவைக் கோபப்படுத்தும் வேலையை செய்து விட்டதாக இலங்கை உணருகிறது.

ஆனால், சீனாவின் எதிர்ப்பு மற்றும் அழுத்தங்களை தவிர்க்க முடியாமல் தான், யுவான் வாங் 5 கப்பலை அனுமதித்திருந்தது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம்.

இந்த விவகாரத்தினால் இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் அமைதியற்றுப் போவது இலங்கைக்கான ஆபத்தாக அமைந்து விடும் என்பதால் தான், இந்தியாவை அமைதிப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் ரணில் விக்ரமசிங்க.

அவர் இந்தியாவுடன் இயல்பான உறவை ஏற்படுத்திக் கொள்வதற்காக, பாதுகாப்பு உத்தரவாதத்தை கொடுக்க முற்படுகிறார். இந்தியாவின் பாதுகாப்பு இலங்கைக்கு முக்கியம் என்றும், அதனை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்திக் கூறியிருக்கிறார்.

அதேவேளை, இலங்கையை தீவிரவாதிகள் தளமாகப் பயன்படுத்தி இந்தியா மீது தாக்குதல் தொடுக்கும் ஆபத்து உள்ளது என்பதையும் அவர் பகிரங்கமாக கூறியிருப்பது முக்கியமானது.

அதனை தடுப்பது இலங்கைப் படைகளுக்கு உள்ள முக்கியமான சவால் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்த மூன்றாவது தரப்புக்கு அனுமதி அளிக்கமாட்டோம் என்று இலங்கையின் ஆட்சியாளர்கள் பலமுறை வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள்.

ஆனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய பல திட்டங்களுக்கு அல்லது நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் தெரிந்தோ தெரியாமலோ இடமளித்திருக்கிறது.

சீனாவின் யுவான் வாங்-5 கப்பல் விவகாரமும் அவ்வாறானதொன்று தான். 

அந்தக் கப்பல் நவீன கண்காணிப்புக் கருவிகளை கொண்டது என்றும், அதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முடியும் என்றும் தெரிந்து கொண்ட பின்னரும், அதனை அனுமதிக்க எடுத்த முடிவு இந்தியாவை சந்தேகம் கொள்ள வைத்திருக்கிறது.

இதற்கு மேலும் இந்தியாவை நம்ப வைக்க ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் முடியுமா என்று தெரியவில்லை.

ஆனால், இந்தியா இந்தக் கட்டத்தில் தனியே ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாது. ஒட்டுமொத்த இலங்கை அரசாங்கத்தினதும் நிலைப்பாடாகத் தான் அதனைப் பார்க்கும்.

ஆட்சிகள் மாறினாலும் ஏற்படக் கூடிய அச்சுறுத்தலை அது தொடர்ந்து கவனிக்கும்.

அதனால் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விடயங்களுக்கு இடமளிக்கமாட்டோம் என்ற வாக்குறுதிகள் இனிமேலும், நம்பகமானதாக இருக்கப் போவதில்லை.

அது ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரிந்து விட்டது.  அதனால் தான் அவர், தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் இதுபற்றி வெளிப்படையாக பேச முயன்றிருக்கிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்