ரஷ்ய படைகளுக்கான ஆட்சேர்ப்பு : மாறும் ஆயுதமோதல் வியூகங்கள்

By Digital Desk 5

24 Sep, 2022 | 09:23 PM
image

சதீஷ் கிருஷ்ணபிள்ளை                                                                

கடந்த புதன்கிழமை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேற்கொண்ட அறிவித்தல் முக்கியமானது. இந்த அறிவித்தல் உள்நாட்டுக்கும், மேலைத்தேய நாடுகளுக்குமான இரு செய்திகளை உள்ளடக்கி இருந்தது.

உள்நாட்டுக்கான செய்தி படைகளைத் திரட்டுதல் பற்றியது. மேற்குலகிற்கான செய்தி அணுவாயுத பயன்பாடு பற்றியது. 

உக்ரேனில் சண்டையிடுவதற்காக ரிசர்வ் படையில் 30,000 பேர் சேர்த்துக் கொள்வார்கள். இந்தப் படையினர் உக்ரேனுக்கு அனுப்பப்படுவார்கள் என்பது முதல் செய்தி.

அணுவாயுதங்களைக் காட்டி பயமுறுத்தினால், காற்று மறுதிசையில் திரும்புமென அடுத்த செய்தி. அதாவது ரஷ்யா அணுவாயுதங்களை பயன்படுத்த தயங்காது என்பது அதன் உள்ளடக்கமாகும்.

ஏனிந்த அறிவித்தல்? ரஷ்ய ஜனாதிபதி போர்க்களத்தில் பின்னடைவை ஒப்புக்கொள்கிறாரா? முழுவீச்சிலான போருக்குத் தயாராகிறாரா? என்ற கேள்விகள் உள்ளன.

உக்ரேனைத் தாக்குவதென புடின் தீர்மானித்தபோது, போர் என்ற சொல்லைத் தவிர்த்தார். விசேட நடவடிக்கை என்ற பெயரிலேயே கடந்த பெப்ரவரி மாதம் தாக்குதலை ஆரம்பித்தார். இந்த ஆயுத மோதலுக்கு 200 நாட்கள் கடந்து விட்டன. ஆயுதமோதலில் சம்பந்தப்பட்ட இருதரப்புக்களும் சாதித்தது ஒன்றுமில்லை.

மோதலின் விளைவுகளால் சில ஐரோப்பிய நாடுகளுக்கான எரிபொருள் விநியோகம் முடங்கியது. ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டது. இதுபோன்ற காரணங்களால் இன்று உலக பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளமை தான் உக்ரேனிய - ரஷ்ய ஆயுதமோதலின் பிரதான விளைவு.

தாக்குதலை ஆரம்பித்தது ரஷ்யா தான் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், அந்நாட்டுக்கு எதிரான உலகப் பொது அபிப்பிராயம் வலுவடைந்து வருவதை மறுக்க முடியாது.

இத்தகைய சூழ்நிலையில், ஆயுத மோதலுக்கு விரைவாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று புடின் நினைத்திருக்கலாம். படைகளுக்கு ஆட்சேர்ப்பது பற்றிய அறிவிப்பு புதன்கிழமை வெளியானது என்றால், செவ்வாய்க்கிழமை நடந்த மாற்றங்களை சொல்ல வேண்டும்.

அன்றைய தினம் ரஷ்ய பாராளுமன்றத்தின் கீழ்ச்சபை அவசர அவசரமாகக் கூடியது. பாதுகாப்புச் சட்டங்களில் திருத்தங்களை நிறைவேற்றியது.

இதன் பிரகாரம், எவரேனும் இராணுவ கடமைக்கு சமூகமளிக்கத் தவறக்கூடாது. சண்டைக்குப் போக மறுப்புத் தெரிவிக்கக் கூடாது. தவறினாலோ, மறுத்தாலோ கடும் தண்டனை.

அதேநாளில் இன்னொரு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இது ரஷ்ய மக்களுக்கானது அல்ல. உக்ரேனிய மண்ணில் ரஷ்ய படைகளின் ஆளுகைக்கு உட்பட்ட பிராந்தியங்களுக்கானது.

இதன் பிரகாரம், இந்தப் பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைய வேண்டுமா என்பதை அறிந்து கொள்ள, இங்குள்ள மக்கள் மத்தியில் கருத்துக் கணிப்பை நடத்த வேண்டும் என்பது உத்தரவின் சாராம்சம்.

இவ்விரு நடவடிக்கைகளுக்கும் அர்த்தம் தேட முனைந்தால், இரு வியாக்கியானங்கள் கொடுக்கலாம். உக்ரேனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை தமது நாடே ஆரம்பித்தபோதிலும், அதன்மூலம் தமது நாட்டுக்கும் இழப்பு உண்டு என்பதை பகிரங்கமாக அறிவிக்க புடின் விரும்புகிறார் என்று கருதலாம்.

இந்த ஆயுதமோதலில் ரஷ்யாவின் தரப்பில் ஏறத்தாழ ஆறாயிரம் படைவீரர்கள் பலியாகி இருக்கிறார்கள் என்ற தகவலை வெளியிட்டதன் தாற்பரியமும் இது தான். இதற்கு முன்னதாக, பலியான படைவீரர்கள் பற்றி ரஷ்யாவின் தரப்பில் இருந்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

மறுபுறத்தில், ரஷ்யா உக்ரேனைத் தாக்குவதற்கு மேற்குலகின் தலையீடுகள் தான் காரணமென உலகிற்கு மீண்டும் எடுத்துரைக்க புடின் விரும்புவதாகத் தெரிகிறது.

உக்ரேன் என்பது சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து சென்ற குடியரசு. அதன் கிழக்குப் பகுதியில் உள்ளவர்கள் உக்ரேனியர்களாக அன்றி, ரஷ்யர்களாகவே இருக்கிறார்கள் என்பதை புட்;டின் சொல்ல விரும்புகிறார்.

ஆரம்பித்தில் ரஷ்யாவிற்கு எதிரான சண்டையில் உக்ரேனைப் பயன்படுத்துகிறது என்பது புட்டினின் குற்றச்சாட்டாக இருந்தது. 

தற்போது, மேற்குலகம் சண்டையிடுவது உக்ரேனுக்கு எதிராக அல்ல. ரஷ்யாவிற்கு எதிராகத் தான் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதற்காக, உக்ரேனின் கிழக்கில் உள்ள பிராந்தியங்களை மீண்டும் ரஷ்ய ஆளுகைக்கு உட்பட்டவையாக மாற்ற நினைக்கிறார்.

வெளிநாட்டுப் படைகள் எல்லை தாண்டி ரஷ்யாவிற்குள் நுழைய முனைகின்றன என்ற கருத்து, உக்ரேனுக்கு எதிரான மோதலை ரஷ்ய மக்கள் மத்தியில் நியாயப்படுத்த மிகவும் அவசியமானதாக இருக்கிறது. எது எப்படியிருந்தாலும், போர்க்கள நிலைமைகளை ஆராய்ந்தால், அவை ரஷ்யாவிற்கு சாதகமான இல்லை என்றே தோன்றுகிறது.

உக்ரேனைத் தாக்குவதென புடின்; தீர்மானித்த சமயத்தில், அவர் படைப்பலத்தின் வலுவை நம்பினார். தம்மிடம் இருக்கின்ற விசாலமான படை, உக்ரேனை ஓரிரு வாரங்களில் மண்டியிடச் செய்யும் என்று கருதினார். அதனால் தான், அவர் முழுப்படையையும் அனுப்பவில்லை.

உக்ரேனின் படைப்பலம் குறைவாக இருந்தபோதிலும், படையில் இருந்த வீரர்கள் உளவுரண் மிக்கவர்களாக இருந்தார்கள். நோக்கத்தில் தெளிவு உடையவர்களாக காணப்பட்டார்கள்.

மேலைத்தேய நாடுகளும் கோடி கோடியாக செலவழித்து உக்ரேனியப் படைகளுக்கு ஆயுதங்களை வழங்கியதால், ரஷ்ய படைகள் எளிதாக முன்னேற முடியவில்லை.

இன்றைய நிலைமையில் விளாத்திமிர் புடின் சிக்கலான நிலைமையை எதிர்கொள்கிறார் என்றே கூற வேண்டும். உக்ரேனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை முறியடிக்க வேண்டும். நேட்டோவின் ஆயுதங்களுடன் களமிறங்கும் உக்ரேனியப் படைகளிடம் தோற்கவும் கூடாது.

உக்ரேனுக்கு எதிரான சண்டையில் ஆட்களைத் திரட்ட வேண்டும். எனினும், சகல ஆண்களையும் இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளக்கூடிய பொது ஆட்சேர்ப்பை மேற்கொள்ளக்கூடாது. 

பொது ஆட்சேர்ப்பை மேற்கொண்டு உக்ரேனை இல்லாதொழிக்க வேண்டும் என உள்நாட்டில் கோரும் தரப்புக்களுக்கு பதி;ல் அளிப்பதும் அவசியம்.

இந்த சிக்கலில் இருந்து கவனத்தைத் திசை திருப்புவதற்காகத் தான், அவர் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உள்ள பிராந்தியங்களை ரஷ்யாவுடன் மீளிணைப்பது பற்றி கவனம் செலுத்துகிறார் என்று தோன்றுகிறது.

இங்குள்ள டொன்பார் பிராந்தியத்தில் லுஹான்ஸ், டொனெட்ஸ் ஆகிய மாநிலங்கள் ரஷ்ய சார்புடைய குடியரசுகளாக தம்மைப் பிரகடனம் செய்து கொண்டுள்ளன. 

இவ்விரு மாநிலங்களும் ரஷ்யாவின் பாகங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டுமா என்ற கருத்துக் கணிப்பை நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. 

இவை மாத்திரமன்றி, கேர்ஸன், ஸப்போரிஸ்ஸியா ஆகிய மாநிலங்களில் ரஷ்யா நியமித்த ஆட்சியாளர்களும் இதையே செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள்.

கருத்துக் கணிப்புக்களில் இவை ரஷ்யப் பிராந்தியங்களாக அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், இவற்றைப் பாதுகாக்கும் கடப்பாடு ரஷ்யாவை சார்ந்து விடும்.

இந்தப் பிராந்தியங்களுக்குள் நேட்டோ ஆதரவுடன் இயங்கும் உக்ரேனியப் படைகள் பிரவேசிக்குமாயின், இதனை அத்துமீறலென ரஷ்யா கூறுதல் எளிது.

அத்துமீறலைத் தடுத்து நிறுத்தவோ, அத்துமீறலில் இருந்து பாதுகாப்பைப் பெறவோ, சுயபாதுகாப்பைக் காரணம் காட்டி அணுவாயுதங்களை பிரயோகிக்க முடியும்.

இதனை நோக்கிய நகர்வில் தான், புடின்; அணுவாயுதங்களைப் பயன்படுத்துவது பற்றி எச்சரித்திருக்கிறார் என்று கருதலாம். அது சாத்தியமில்லை என்று உறுதியாக மறுக்க முடியாமல் இருப்பது தான், ரஷ்ய உக்ரேனிய ஆயுத மோதலின் துர்ப்பாக்கியம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்