சர்வாதிகார மன்னர்களை ஊக்குவித்த மகாராணி

By Digital Desk 5

24 Sep, 2022 | 12:18 PM
image

லத்தீப் பாரூக்

பிரித்தானிய அரச பரம்பரையில் ஆகக்கூடுதலான காலப்பகுதியான 64 வருடங்களும் ஏழு மாதங்களும் அரியாசனத்தில் இருந்த இரண்டாவது எலிசபெத் மகாராணி 2022 செப்டெம்பர் 8 இல் தனது 96ஆவது வயதில் மரணம் அடைந்தார். நீண்ட இரங்கல் நிகழ்வுகளின் பின், கடந்த திங்கள் கிழமை 19ஆம் திகதி அவரது இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன. 

உலகின் மிகவும் பலம்பொருந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதியாக அவர் காணப்பட்டார். இந்த வர்க்கம் தான் பூகோள பொருளாதாரத்தை வடிவமைக்கும் சக்தியாகவும் இருந்தது இன்னமும் இருக்கின்றது. அத்தோடு பலவிதமான மர்ம அமைப்புக்களுக்கும் மகாராணி தலைமை தாங்கியுள்ளார்.

மத்திய கிழக்கைப் பொறுத்தமட்டில் பிரித்தானியா ஏகாதிபத்தியவாத சக்தி தான் அங்கு இஸ்ரேல் என்ற சட்டத்துக்கு விரோதமான வன்முறை அரசு நிறுவப்பட மூல காரணமாகத் திகழ்ந்தது. 

அதேபோல் முதலாம் உலக மகா யுத்தத்தின் பின் மத்திய கிழக்கு பிராந்தியம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டதும் அந்தப்பிராந்தியம் முழுவதும் துண்டாடப்பட்டு மக்களுக்கு விரோதமான சர்வாதிகார போக்கு மன்னர்களை அந்த நாடுகளில் ஆட்சி பீடத்தில் அமரச் செய்ததும் பிரித்தானிய ஏகாதிபத்திய அரசு தான். 

இரண்டாவது எலிசபெத் மகாராணியும் முடியாட்சி துடைத்தெறியப்படுதலும்” என்ற தலைப்பில் பத்தி எழுத்தாளர் ஜோய் கில் என்பவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், பிரித்தானிய மன்னராட்சி முறையானது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு ஆற்றிய பங்களிப்பில் இருந்து ஒரு புறநிலை பார்வையாக, மகாராணியின் தனிப்பட்ட குணாதிசயங்கள் பிரிக்கப்பட வேண்டும். மத்திய கிழக்கு முழுவதும் மன்னராட்சிகளை நிறுவி அவற்றுக்கு ஆதரவளிக்கும் பிரித்தானிய ஏகாதிபத்திய அரசின் கொள்கை, பிரித்தானியாவால் பிரகடனம் செய்யப்பட்டுள்ள ஜனநாயகத்துக்கான ஆதரவுடன் பார்க்கையில் விந்தையானதாக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உதாரணத்துக்கு 1953இல் அமெரிக்க – பிரித்தானிய சதிப்புரட்சிக்கும் அதற்கு முன்னரும் ஈரானின் பஹ்லவி ராஜ்ஜியத்தின் மன்னர் ‘ஷா’ உடன் மகாராணிக்கு இருந்த நெருக்கமான உறவுகள் நவகாலணித்துவ கொள்கைகளுக்கு மேலைத்தேச ஆதரவு சர்வாதிகாரிகள் மூலம் உயிரூட்டவும் அந்தக்கொள்கைகளை சட்டபூர்வுமாக்கவும் பிரித்தானிய முடியாட்சி நடந்து கொண்ட விதத்தையும் சர்வதிகாரிகளோடு அது கொண்டிருந்த நேரடித் தொடர்புகளையும் தெளிவாக விளக்குவதாக உள்ளது.

மன்னர் ஷா மிகக் கொடூரமான இரகசிய பொலிஸ் பிரிவைக்கொண்டு தனது மக்களை அடக்கி ஆண்டார். அந்த நாட்டின் அப்போதைய தெரிவு செய்யப்பட்ட பிரதமர், மத்திய கிழக்கில் பிரித்தானியா மிகவும் முக்கியமான மூலோபாய எண்ணெய் விநியோகப் பிரதேசத்தை கொண்டிருந்த ஈரானின் எண்ணெய் உற்பத்தித் துறையை தேசிய மயமாக்கியதால் தான் ஷா பிரித்தானியாவால் மன்னர் பதவியில் அமர்த்தப்படார்.

அவர் பாதுகாப்பாக அந்தப் பதவியில் அமர்த்தப்பட்டதும் மீண்டும் அவர்களின் எண்ணெய் வருமானம் செழிப்படையத் தொடங்கியது. 1959இல் மன்னர் ஷா வை மகாராணி எலிசபெத் தனது அரச விருந்தாளியாக அழைத்து கௌரவித்தார். பின்னர் 1961இல் ஷாவின் விருந்தாளியாக மகாராணியும் ஈரான் சென்றார். அதன் பிறகு பல்வேறு அரச மட்ட விஜயங்கள் இடம்பெற்றதோடு உறவுகள் மிகவும் சுமுகமான் நிலையில் பேணப்பட்டு வந்தன.

1953இல் சதியை மகாராணி அங்கீகரிக்கவில்லை என்பது என்னவோ உண்மைதான். பிரித்தானியாவின் அன்றைய பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் அமெரிக்க ஜனாதிபதி இஸன்ஹோவர் ஆகியோரால் திட்டமிடப்பட்டது. ஆனால் அதனை அடுத்து வந்த தசாப்தங்களில் ஷா மற்றும் அவரது மனைவியுடன் தனிப்பட்ட உறவுகளை மேற்கொண்டு ஈரானுடன் உறவுகளை மேம்படுத்த மகாராணி பெரும் ஆதரவளித்தார். 1979இல் ஈரானில் மக்கள் புரட்சி மூலம் ஷா பதவியில் இருந்து துரத்தப்படும் வரை இந்நிலை தொடர்ந்தது.

பிரித்தானியா தனது ஏகாதிபத்திய ஆதிக்கத்தை மத்திய கிழக்கில் தொடர்ந்தும் நிலை நிறுத்த முயன்றது. எகிப்து, ஈராக், ஜோர்டான், லிபியா, வளைகுடா அமீரகம் என்று எல்லா இடங்களிலும் தன்னால் பதவிகளில் அமர்த்தப்பட்டவர்கள் மூலம் தனது ஆதிக்க மேலாண்மையை நீடிக்க நினைத்தது. எவ்வாறாயினும் கடந்த காலங்களில் இடம்பெற்ற காலணித்துவத்துக்கு எதிரான புரட்சிகளின் போது இந்த ஆட்சிகள் பல கவிழ்த்தப்பட்டன. 

பிரித்தானிய அரச குடும்பம் சர்வாதிகாரப் போக்குடைய ஒரு வகையான இராஜதந்திரம் மூலம் சவூதி, ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் உட்பட பல நாடுகளின் அரசுகளோடு உறவுகளைப் பேணுவதில் முக்கியமான பங்களிப்பை செலுத்தி வருகின்றது. 

மேலும் இவைதான் பிரித்தானிய பொருளாதாரத்துக்கு பில்லியன் கணக்கான தொகை பணத்தையும் வாரி இறைத்து வருகின்றன. கண்ணுக்குப் புலப்படாத வருமானங்கள் மூலமும், பிரித்தானியாவில் பெறுமதிமிக்க சொத்துக்களை வாங்கிக் குவிப்பதன் மூலமும் பிரித்தானியாவுக்கு வருமானங்கள் கிடைக்கின்றன.

பிரித்தானிய ஆயுதப் படைகளின் பிரதான கட்டளையிடும் தளபதி என்ற வகையில் மகாராணி, மத்திய கிழக்கில் பிரித்தானியா மேற்கொண்ட எல்லா யுத்தங்களுக்கும் அனுமதி அளித்துள்ளார். முன்னாள் பிரித்தானிய பிரதமர் டொனி பிளாயர் மற்றும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அகியோர் தலைமையில் ஈராக் நாசமாக்கப்பட்டது மிகப்பொருத்தமான உதாரணமாகும்.

பதவியேற்றுள்ள மன்னர் சார்ள்ஸ் பல தடவைகள் வளைகுடா பிராந்தியத்துக்கு விஜயம் செய்துள்ளார். யெமன் தேசத்தில் கொடூரமானதோர் யுத்தத்தை தொடுத்துள்ள சவூதி அரேபிய அரசுக்கு பிரித்தானிய ஆயுதங்கள் தொடர்ந்து கிடைக்க வழியமைக்கப்பட்டுள்ளது. இதுவரை யெமனில் மேற்கொள்ளப்பட்டுள்ள விமானத் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் பிரித்தானிய அரச குடும்பத்தின் செயற்பாடுகளில் இந்த விடயம் பற்றிப் பேசப்பட்டதே இல்லை.

இவற்றுக்கு பதிலீடாக மத்திய கிழக்கின் இந்தக் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் பிரித்தானிய மகாராணிக்கு விலைமதிப்பற்ற பரிசுகளை வழங்கி கௌரவித்துள்ளனர். 

இவற்றுள் எலிசபெத் மகாராணியின் திருமணத்தின் போது 1947இல் அன்றைய எகிப்திய மன்னர் பாரூக் வழங்கிய பரிசு மிகவும் பெறுமதி மிக்கதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.மு 250ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு உரிய தங்க நாணயக் குற்றிகள் அவற்றோடு இணைந்த தங்க வேலைப்பாடுகள் அமைந்த நகை மன்னர் பாரூக்கால் வழங்கப்பட்டது. இந்த தங்க மாலையும் அதில் உள்ள தங்க நாணயக் குற்றிகளும் கிறிஸ்துக்கு முந்திய மூன்றாம் நூற்றாண்டு காலத்துக்குரியவை எனத்தெரிய வந்துள்ளது.

1965இல் சூடான் இரண்டு தீக்கோழி முட்டைகளை சிவப்பு, மஞ்சள், நீலம் மற்றும் பச்சைக் கண்ணாடி மணிகளால் சுற்றப்பட்ட தட்டில் வைத்து மகாராணிக்கு பரிசாக வழங்கியது. மன்னர் பைஸால் விலைமதிப்பற்ற 300க்கு அதிகமான வைரங்கள் மற்றும் பெறுமதிமிக்க வேறு வகையான பல மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட மொத்தம் 80 கரட் எடைகொண்ட கற்கள் பதிக்கப்பட்ட நெக்லஸ் ஒன்றை வழங்கினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷேக் தங்கத்தினால் வார்க்கப்பட்ட ஒரு ஒட்டகமும் இரண்டு பேரீச்சம் பழ மரங்களும் அந்த மரங்களில் பழங்களாக வடிவமைக்கப்பட்ட ரூபி மாணிக்கக் கற்களும் உள்ளடங்களாக  அடங்கிய நினைவுப் படிகத்தோடு வைரக்கற்கள் மற்றும் நீலக் கற்கள் பதிக்கப்பட்ட நகைகளையும் பரிசாக வழங்கினார்

தனது 70வருட கால ஆட்சியில் மகாராணி எலிசபெத் தனது முன்னோர்கள் மற்றும் குடும்பத்தவர்கள் அடிமை வர்த்தகத்துக்காகவும், காலணித்துவத்துக்காகவும் நாடுகள் மீது படையெடுப்பு நடத்தி உலக மக்களுக்கு செய்த  கொடுமைகளுக்காக ஒரு போதும் வருத்தம் தெரிவித்ததில்லை. அதைப் பற்றி அவர் அலட்டிக் கொண்டதும் இல்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்