பண்டாரகம – மெதகம பிரதேசத்தில் சுப்பர் மார்க்கெட் ஒன்றுக்குள் நேற்றிரவு புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களில் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

பண்டாரகம - மெதகமவிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றுக்குள் முகமூடியணிந்து துப்பாக்கியுடன் புகுந்த இரு கொள்ளையர்கள் அங்கிருந்து சுமார் 30 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றிருந்தனர்.

சம்பவத்தின் போது சுப்பர் மார்க்கெட்டில் கடையில் இருந்த பெண் கொள்ளையிட வந்திருந்த கொள்ளையர் ஒருவரைத்தாக்கியுள்ளார். இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

 குறித்த பெண்ணின் தங்கச்சங்கிலியை கொள்ளையர்களில் ஒருவர் அறுக்க முயன்ற போது, கொள்ளையர் மீது அப்பெண் அருகிலிருந்த ஆசனத்தினால் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

அப்பெண்  கொள்ளையரைத் தாக்கும் காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமெராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில்,  கொள்ளையர்களில் ஒருவர் பண்டாரகம- வல்கம- படபொல பிரதேசத்தில் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து கொள்ளையர் தங்கியிருந்த இடத்திற்கு பொலிஸார் விரைந்த நிலையில் கொள்ளையர்களில் ஒருவரான நிஷாந்த வீரதுங்க என்பவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட நபர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் மற்றைய கொள்ளையரை பொலிஸார் தொடர்ந்தும் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.