மைக்கல் கொர்பச்சேவும் சோவியத் சோசலிசத்தின் வீழ்ச்சியும் 

By Vishnu

22 Sep, 2022 | 08:28 PM
image

கலாநிதி தயான் ஜயதிலக

உண்மையில் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பதிலீட்டு யுத்ததமாக இருக்கின்ற உக்ரைன் யுத்தத்துடன், ரஷ்யா எவ்வாறு முழுவீச்சில் ஈடுபடும் நிலமைக்கு வந்தது என்பதை ஒருவராலும் பார்க்கமுடியாவிட்டாலும்,  பின்ணனி அதற்கு உதவும். நான் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றிய போது மைக்கல் கொர்பச்சேவிற்க்கு அழைப்பு எடுப்பதற்கு முயற்சித்தேன், ஆனால் அவர் நோய்வாய்ப்பட்டிருந்ததாலும் பார்வையாளர்களை சந்திக்காமையாலும் எனது முயற்சி தோல்வியடைந்தது. 

எனது தந்தை சர்வதேச விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற ஓர் ஊடகவியலாளராக இருந்ததால், 1960 மற்றும் 1970களில் நான் இளைஞனாக பலமுறை சோவியத் ஒன்றியத்திற்கு எனது பெற்றோருடன் சென்றிருந்தேன். நான் தூதராக பதவியேற்பதற்கு முன்பான எனது கடைசிப் பயணத்தில் 1985 கோடைப்பருவத்தில் ஓர் சுதந்திரமான வயது வந்தவனாக சென்றிருந்தேன்.

அந்நிகழ்வு இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உலக விழாவிற்கு விருந்தினராக அமைந்திருந்தது. நானும் ரணில் விக்கிரமசிங்கவும் செஞ்சதுக்கத்திற்கு அருகிலுள்ள ஒரே ஹோட்டலில் தங்கியிருந்தோம். அங்கு ஏஞ்சலா டேவிஸ் (நான் காலை உணவின் போது மண்டபம் முழுவதையும் பார்வையிட உதவியவர்) மற்றும் Fire from the Mountain எனும் புத்தகத்தின் ஆசிரியரான சாண்டினிஸ்டா கமாண்டன்ட் ஓமர் கபேசாஸ் (நான் நேர்காணல் செய்தவர் என்பதுடன் கடைசியாக 2009 இல் ஜெனீவாவில் சந்தித்தேன்) ஆகியோர் இருந்தனர். இஸ்மாயிலோவா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கை இளைஞர் பிரதிநிதிகள் குழுவிற்கு விஜய குமாரதுங்க (மாஸ்கோவை பார்வையிட செல்லும் போது எனக்கு குர்தாவைத் தேர்ந்தெடுத்து தந்தவர்) தலைமை தாங்கினார்.

அது கோடைக்காலம் (யூன்-யூலை) என்றாலும், சோவியத் சோஷலிசத்திற்கும், உலக சோஷலிசத்திற்கும் அது வசந்த காலமாக இருந்தது. ஆறு ஆண்டுகளுக்குள், அது உண்மையிலும் உருவகத்திலும் குளிர்கால மரணமாக இருந்தது. சோவியத் சோஷலிசம் அழிந்துவிட்டது. சோவியத் யூனியன் ஒழிக்கப்பட்டது. ரஷ்யாவில் சோஷலிசம் அழிந்துவிட்டது, சோஷலிசம் என்ற முறைமை அழிந்துவிட்டது, ரஷ்யாவிலோ அல்லது உலகில் கியூபாவைத் தவிர (அங்கு ஒருபோதும் அழியவில்லை) வேறெங்குமோ ஒருபோதும் உயிர்த்தெழுப்பப்படாது, இருப்பினும் குறிப்பாக லத்தீன் அமெரிக்காவில் சோஷலிச இயக்கமும் செயற்திட்டமும் வலுவாக, வெற்றிகரமாக, புத்துயிர் பெற்றுள்ளன.

ஆறு வருடங்கள். நான் என்னுடைய புத்தகமான The Fall of Global Socialism: A Counternarrative from the South இல் செங்குத்தான வீழ்ச்சியின் தன்மையை உள்ளடக்க முயற்சித்தேன்.

மைக்கல் கொர்பச்சேவ் அந்தக் கதையின் நாயகனோ அல்லது வில்லனோ அல்ல, ஆனால் ஒரு துன்பியல் நிகழ்வின் முக்கிய நபராவார்.

1985 கோடையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உலக விழாவில் மைக்கல் கொர்பச்சேவ்வைப் பார்க்கும்போது, எனக்கு ஒரு எண்ணம் தோன்றியதுடன், அதனை நான் பின்னர் தி ஐலண்ட் பத்திரிகையில் (கொழும்பு) ஓர் ஆக்கத்தில் பதிவு செய்தேன். அது "இறுதியாக எங்களுக்கு ஒரு சோவியத் தலைவர் இருக்கிறார், அதைப் பற்றி நாங்கள் சங்கடப்பட வேண்டியதில்லை" என்பதாகும்.  

நான் சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPSU) 20வது காங்கிரஸ் ஆண்டான 1956 ஆம் ஆண்டில் பிறந்தேன். இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உலக விழாவில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட எனது தலைமுறை உலக சமுதாயத்திற்கு, எங்கள் வாழ்நாளின் எங்களைக் கவர்ந்த ஒரே சோவியத் தலைவர் யுரி அன்ரோபேவ் என்பதுடன், அவர் முதன்மையாக இருந்த காலம் ஒரு சோகமான குறுகிய அத்தியாயமாகும். 

1985 உலக விழாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், அக்டோபர் புரட்சியின் 70 வது ஆண்டு நினைவாக, பிடல் காஸ்ட்ரோ மாஸ்கோவில், "ஒரு நாள் நாம் விழித்தெழுந்து சோவியத் யூனியன் மறைந்துவிட்டதைக் காணலாம்" என தீர்க்கதரிசனமாக எச்சரித்ததுடன் தான் ஆச்சரியப்பட மாட்டாரென்றும் கூறினார். ஏதோ மிகவும் தவறாக நடக்க ஆரம்பித்திருந்தது. 1991 காலப்பகுதியில், பிடலின் தீர்க்கதரிசனம் நிறைவேறியது.

கோர்பச்சேவைப் பற்றி நிறைய சொல்லப்பட்டிருப்பதுடன், இன்னும் நிறைய சொல்ல முடியும், ஆனால் நான் ஒரே ஒரு விடயத்தில், ஒரே ஒரு கேள்வியில்  கவனம் செலுத்த விரும்புகிறேன். அது அவரும் அவரது குழுவினரும் தௌிவாக செல்ல மற்றொரு பாதை இருந்தபோது, அப்பாதை, அதே இடத்தில் சேதப்படுத்தாமல், பெரும்பாலும் சேதப்படுத்தாமலே இருக்கும் போது ஏன் குறுக்கு வழியில் ஒரு பாதையை தேர்ந்தெடுத்தார்கள்? என்பதாகும்.  

சிறிது காலத்திற்கு கோர்பச்சேவ் உலக இடதுசாரிகளுக்கு தார்மீக உயர் நிலையை அளித்தார். இடதுசாரிகள் சோவியத் ஒன்றியத்தை சுட்டிக்காட்டி, அதன் வியத்தகு, அமைதியான ஆட்சிமாற்றத்தை மேற்குலகின் மேலாதிக்கத்தின் கீழ் உலகின் ஒரு பகுதியில் இடம்பெறும் இறுக்கத்தன்மை மற்றும் ஆட்சிக்கவிழ்ப்பு பாரம்பரியத்துடன் வேறுபடுத்தினர்.

மேலும், கொர்பச்சேவ் உலகளாவிய இடதுசாரிகளின் அனைத்து சுவர்களையும் தகர்த்ததுடன், ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருந்த அனைத்து மரபுகளையும் சுதந்திரமாக ஒன்றுடன் ஒன்று இணைந்து செயற்பட அனுமதித்தார். புக்கரின் மறுவாழ்வு பெற்றதுடன், சமூக ஜனநாயக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டன. 1985 உலக விழா இடதுசாரிகளின் காலத்தில் ஒரு வானவில்லாகும். 

1933 இல் எல் சால்வடாரில் புகழ்பெற்ற ஃபராபுண்டோ மார்டியின் கீழான மக்கள் கிளர்ச்சியின் கம்யூனிஸ்ட் தலைவரான மிகுவல் மார்மோல் மற்றும் அதைத் தொடர்ந்தான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் இரத்தக்களரி தொடர்பில் நான் அவதானித்தேன். நான் ஜெர்மன் யூத கம்யூனிஸ்டும், ஸ்பானிஷ் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டவரும், ஆஷ்விட்ஸ் மற்றும் புச்சென்வால்டில் இருந்து தப்பிப்பிழைத்தவரும் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போராளிகளின் கூட்டமைப்பின் தலைவருமான குர்ட் ஜூலியஸ் கோல்ட்ஸ்டைனை நேர்காணல் செய்தேன். நான் மானுவல் ரோட்ரிக்ஸ் தேசபக்தி முன்னணியின் (FPMR) இளம் போராளிகளுடன் உரையாடியதுடன், இவ்வமைப்பு சிலி MIR இலிருந்து தப்பியவர்களை சிலி கம்யூனிஸ்ட் கட்சியின் இடதுசாரிகளுடன் ஒன்றிணைத்து, அடுத்த ஆண்டான, 1986 இல் சிலியின் சர்வாதிகாரி அகஸ்டோ பினோஷே மீது  தோல்வியடைந்த படுகொலை முயற்சியை ஆரம்பித்தது.

1985 கோடையில் நான் கண்ட கோட்பாட்டுச் சுவர்கள் உடைந்த நிலையில், சோவியத் ஒன்றியத்தில் சீர்திருத்தச் செயன்முறை பல தசாப்தங்களாக அணுக முடியாத தனித்தனி பெட்டகங்களில் பூட்டப்பட்டிருந்த, யோசனைகள் மற்றும் கருத்துகளின் வளமான களஞ்சியத்தைக் கொண்டிருந்தது. இவை சோவியத் ஒன்றியத்திலிருந்தே ஆனால் இன்னும் அதிகமாக கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வந்த" சந்தைப்படுத்தல் சோஷலிசம்" தொடர்பான யோசனைகளாகும்.

சோவியத் ஒன்றியத்தில் கருத்து வேறுபாடுகளின் பாரம்பரியத்தில் மூன்று போக்குகள் இருந்தன. அவற்றில் ஒன்று வெளிப்படையாக மேற்கத்திய சார்பு (சகாரோவ்), இரண்டாவது சோவியத் எதிர்ப்பு பாரம்பரியவாதம் (சோல்ஜெனிட்சின்) மற்றும் மூன்றாவது சோசலிஸ்ட் (மெட்வெடேவ்ஸ்) என்பனவாகும். ஒரு குறுகிய காலத்திற்கு, மூன்றாவது போக்கு வௌியானதுடன் 1920 க்குப் பிந்தைய லெனினின் கடைசி ஆண்டுகளில் விளக்கங்களின் செழிப்பு இருந்தது. சுருக்கமாக, 'திறந்த சோவியத் யூனியனில்' நெறிமுறைகள் ஒரு 'திறந்த சோஷலிசம்' என்று தோன்றியது.

1991 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு வாக்கெடுப்பில் சோவியத் மக்களுக்கு முன்வைக்கப்பட்ட முன்மொழிவின் வார்த்தைகளிலேயே இது சுருக்கமாகச் சொல்லப்பட்டது. இது ஒரு சிறந்த பெரும்பான்மையால் நடாத்தப்பட்டது.

அப்படியானால் 1991 ஆம் ஆண்டின் இறுதியில் மக்களால் வழங்கப்பட்ட அந்த ஒப்புதல் எப்படி சாம்பலாக மாறியது? கேலித்தனமான ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியைத் தவிர வேறு ஓர் காரணியை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்: கொர்பச்சேவ் மற்றும் அவரது குழுவினர் செய்யப்பட்ட ஒரு முரண்பாடான தெரிவே அதுவாகும். 

என்னால் ஒரு திகதியையோ அல்லது ஒரு வருடத்தையோ குறிக்க முடியாது, ஆனால் அந்த காலப்பகுதியில் எங்கேயோ, இரண்டு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்த பாதையில் மாற்றங்கள் செய்யப்பட்டன, இது பழைய அகராதியில் 'விலகல்' என்று அழைக்கப்படும்.

முதலாவது கருத்தியலானதுடன் உள்நாட்டுக்குரியதாகும். சீர்திருத்தப்பட்ட சோஷலிசத்தின் கருத்துக்களுக்கும் திறந்த, ஜனநாயக இடதுசாரிகளின் அரசியல் அடையாளத்திற்கும், மறுபுறம், முதலாளித்துவ தாராளவாத ஜனநாயகம் மற்றும் மோசமான, மேற்கத்திய வலதுசாரி சித்தாந்தத்தின் கருத்தியலுக்கும் இடையே ஒரு ஊடுருவல் இருந்தது. வெளிப்படையாகச் சொல்வதானால், பொருளாதாரத் துறையில் சீர்திருத்தப்பட்ட சோஷலிசத்தின் இலக்குகள் மற்றும் கருத்துக்கள், திறந்த சந்தை முதலாளித்துவம் மற்றும் அரசை நோக்கிய இல்லாமை வாத கருத்துக்களால் (நீலிசம்) பெருகிய முறையில் சீர்குலைக்கப்பட்டு இடம்பெயர்க்கப்பட்டன.

இந்த வலதுசாரி விலகலுக்கான எதிர்ப்பானது காலத்திற்கு காலம் வந்து சென்று கொண்டிருந்த பழமைவாத சோவியத் மார்க்சிஸ்டுகளான நினா ஆண்ட்ரேவா மற்றும் யெகோர் லிகாச்சேவ் போன்றவர்களிடமிருந்து வந்தது. 1985-1987 சோஷலிச நவீனத்துவத்தின் அசல் நிகழ்ச்சித் திட்டம் மற்றும் வாக்குறுதியின் அடிப்படையில் எதிர்த்துப் போராடியவர்கள் யாரும் இல்லை.

இரண்டாவது முரண்பாடான தேர்வு வெளியுறவுக் கொள்கை மற்றும் வெளியக உறவுகளின் பகுதியில் இருந்தது. 1980களில், ஐரோப்பாவின் சில பகுதிகள் கூட வலுவாக இருந்த மேற்கு மற்றும் பிற இடங்களில் உள்ள சமூக ஜனநாயகக் கட்சியினரை சீர்திருத்த கம்யூனிஸ்டுகளின் முதன்மை பங்காளிகளாக அணுகும் விருப்பத்தை சோவியத் ஒன்றியம் கொண்டிருந்தது. கிழக்கு ஐரோப்பாவில் கூட முன்னோடியாக இல்லையென்றாலும் புதுப்பிக்கப்பட்ட, சீர்திருத்தவாத சோஷலிசப் போக்குகள் தோன்றின. கொர்பச்சேவின் கீழ் சோவியத் ஒன்றியம் மேற்கில் ஒரு வலுவான அமைதி இயக்கத்தின் பரிவைக் கொண்டிருந்தது.

கொர்பச்சேவ் செய்த மிகப் பெரிய தவறு என்னவென்றால், அவர் சமூக ஜனநாயகவாதிகள், கம்யூனிஸ்டுகள் மற்றும் அமைதி இயக்கங்களுடனான கூட்டணியின் இந்த நெருங்கிய விருப்பத்தை புறக்கணித்தார் அல்லது தரமிறக்கியதுடன், அதற்கு பதிலாக சீர்திருத்தப்பட்ட சோஷலிசத்திற்கான அவரது செயற்திட்டத்திற்கு பரிவு காட்டாத ரீகன் மற்றும் தாட்சர் ஆகியோருடன் தன்னை இணைத்துக் கொண்டார்.

நான் ஜூலை 1985 இல் மாஸ்கோவில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உலக விழாவில் பார்த்து பாராட்டிய மிக்கேல் கொர்பச்சேவ் மறைந்துவிட்டாராயினும், அவரின் இடம் அதிகாரப்போக்குடைய, மேற்குலகின் சோவியத் எதிர்ப்புத் தலைமைத்துவங்களிடம் பிரபல்யமற்ற அவரின் சகாவினால் மட்டுமே பிரதியீடு செய்யப்படலாம்.

சோவியத் சோகம் தவிர்க்கபட்டிருக்கக்கூடியது. ஆழமான தவறு இருந்தாலும், ஃபிடல் காஸ்ட்ரோ கோர்பச்சேவை பின்னோக்கிப் பார்க்கும்போதும் கூட நேர்மையானவர் என்று கருத மறுத்தது சுவாரஸ்யமானது. ஃபிடல் சோவியத் ஒன்றியத்தின் முடிவு "தற்கொலை, கொலை அல்ல" என்று சாண்டினிஸ்டா கமாண்டர் டோமாஸ் போர்ஜிடம் கூறினார். மிக்கைல் கோர்பச்சேவ் ஒரு மென்மையான மனதுடனான சோகமான நபராக இருந்ததுடன், அவர் தனது விவரிக்க முடியாத குழப்பம் மற்றும் மனமாற்றத்தால், ஒரு வல்லரசின் தற்கொலைக்கு உதவினார்.

கலாநிதி தயான் ஜயதிலக “The Fall of Global Socialism: A Counternarrative from the South” (பால்கிரேவ் மக்மில்லன், லண்டன், 2014), மற்றும் “பிடலின் வன்முறை நெறிமுறைகள்: பிடல் காஸ்ட்ரோவின் அரசியல் சிந்தனையின் தார்மீகப் பரிமாணம்” (புளூட்டோ பிரஸ், லண்டன், 2007) ஆகியவற்றின் ஆசிரியராவார்.

Factum என்பது இலங்கையை தளமாகக் கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய ஆசியாவை மையமாக கொண்ட சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டிசம்பர் என்கின்றது - உறுதியாக...

2022-09-29 15:08:23
news-image

யார் இந்த பொன்னியின் செல்வன்?

2022-09-29 15:25:42
news-image

முதல் முறையாக விண்கல்லை திசை திருப்பிய...

2022-09-29 13:18:27
news-image

உடையால் பற்றி எரியும் ஈராக் :...

2022-09-29 13:18:49
news-image

கஞ்சாவை சட்டபூர்வமாக்குவதால் யாருக்கு இலாபம் ?

2022-09-29 12:26:33
news-image

மீண்டும் களத்தில் இறங்கும் சந்­தி­ரிகா

2022-09-29 12:26:16
news-image

சிறுவர்கள் பட்டினியால் பாதிக்கப்படுவது குறித்த தகவல்...

2022-09-28 12:40:54
news-image

இலங்கையின் வர்த்தக நாமம் கஞ்சா…?

2022-09-28 10:14:28
news-image

மலையக சமூகம் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதியின்...

2022-09-28 10:10:48
news-image

அடையாளம் தான் துறப்போம். எல்லா தேசத்திலும்...

2022-09-27 09:27:02
news-image

ஐ.எம்.எப். கடனை தாண்டிய இந்தியாவின் டொலர்...

2022-09-26 10:53:34
news-image

இந்தியா இலங்கைக்கு பலமாக இருக்கின்றது :...

2022-09-25 15:44:19