மக்களின் உயிர்களுடன் விளையாட்டு !!!

Published By: Priyatharshan

07 Oct, 2022 | 01:56 PM
image

இலங்கையைப் பொறுத்தவரையில் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு புதிய பிரச்சினைகள் தலைதூக்குவது சர்வசாதாரணமாக காணப்படுகின்றது. அதுவும் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பிரச்சினைகள் எவ்வாறு எழுந்தன என்பதும் நாம் கடந்த காலங்களில் வெளியான செய்திகளில் இருந்து அறியமுடியும்.

அந்தவகையில் தற்போது புதியதொரு பிரச்சினையொன்றை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக  எப்லடொக்சின் எனும் அமிலம் கலந்த திரிபோஷா, சமபோஷ, யஹபோஷ, லக்போஷ உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

இலங்கையில் கடந்த காலங்களில் இவ்வாறு பல செய்திகள் வெளியாகின. குறிப்பாக நியூசிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால்மா மாதிரிகளில் மெலமைன், டிசிடி இரசாயனப் பதார்த்தம் கலந்துள்ளதாக செய்திகள் வெளியாகி மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன.

அதேபோன்று இறக்குமதி செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களின் தேங்காய் எண்ணெய்களில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய எப்லடொக்சின் காசினோஜென் என்ற இரசாயனம் அடங்கியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி மக்களை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. 

மனித உயிர்களை விளையாட்டுப் பொருளாக எண்ணி நாட்டில் பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இது தொடர்பில் பல்வேறு செய்திகள் கடந்த காலங்களில் வெளியாகியிருத்ததை காணக்கூடியதாக இருந்தது. அதுமட்டுமல்லாது வீட்டு சமையல் எரிவாயுவிலும் இவ்வாறு திருவிளையாடல்கள் அரங்கேற்றப்பட்டு மக்களின் உயிர்கள் பலியெடுக்கப்பட்டதை யாவரும் அறிந்ததே.

இந்நிலையில், நாட்டில் திரிபோஷா தட்டுப்பாடு மற்றும் எப்லடொக்சின் பிரச்சினை உள்ளது என்பதை மறுக்கவில்லை. மந்தபோசணை மற்றும் திரிபோஷா விவகாரம் தொடர்பில் சபைக்கு அறிவியல் பூர்வமான அறிக்கை சமர்ப்பிப்பேன் என்றும் அரசியல் மற்றும் வியாபார போட்டித்தன்மையை இலக்காகக்கொண்டு போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பாராளுமன்றில் வியாழக்கிழமை (22) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கடந்த வாரம் இறக்குமதி செய்யப்பட்ட 10 கொள்கலன்கள் அடங்கிய சோளத்தில் எப்லடொக்சின் அளவு அதிகமாக காணப்பட்டதால் குறித்த 10 கொள்கலன்கள் அடங்கிய சோளத்தை திரிபோஷா நிறுவனம் நிராகரித்துள்ளது.

இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட ‍சோளத்தில் திரிபோஷா உற்பத்திக்கான ‍சிறந்த தரம் அதில் அடங்கப்பட்டிருக்கவில்லை என திரிபோஷா நிறுவனத்தில் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு அரசாங்கமும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களை தெரிவிக்கும் போது சாதாரண மக்கள் எதனை பின்பற்றி தமது வாழ்க்கையை முன்னகர்த்த முடியும் என்ற கேள்வி எழுகின்றது ? இவ்வாறான பிரச்சினைகளை சீர்செய்வது அரச தலைவர்களினதும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளினதும் தலையாய கடமையென்பதை மறந்துவிடக்கூடாது.

இதேவேளை, சிறு பிள்ளைகள் மற்றும் தாய்மார்களுக்கு ஆபத்தான முறையில் எப்லடொக்சின் அடங்கிய திரிபோஷா வழங்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சிடம் பொதுமக்கள் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.

திரிபோஷா தொடர்பில் இந்த சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் முதல் தொடர்ச்சியாக எழுகின்ற பிரச்சினையாகும். டிசம்பர் மாதம் திரிபோஷா மாதிரிகள் பெறப்பட்டு எப்லடொக்சின் உரிய அளவினை விட அதிகமாக காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது எனவும் பொதுமக்கள் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிடுகிறார்.

இந்நிலையில், மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற,  பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எப்லடொக்சினை உள்ளடக்கிய சமபோஷ, யஹபோஷ, லக்போஷவை உற்பத்தி செய்து விநியோகித்தமையை மையப்படுத்தி  நான்கு முன்னணி நிறுவனங்கள் மற்றும் அதன் பணிப்பாளர்களுக்கு நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை ( 21) உத்தரவிட்டுள்ளது.

 குறித்த நான்கு நிறுவனங்கள் மற்றும் அதன் பணிப்பாளர்கள் உற்பத்தி செய்து விநியோகித்த 'போஷ' ரக உணவில், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட எப்லடொக்சின்  அடங்கியுள்ளதாக இரசாயன பகுப்பாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொத்தட்டுவ பொது சுகாதார பரிசோதகர்  பி.ஏ.எஸ். கசுன் நீதிமன்றில் முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ள நிலையிலேயே அதனை ஆராய்ந்தே நீதிவான் இந்த அழைப்பாணையை அனுப்பியுள்ளார்.

எப்லொடொக்சின் எனப்படுவது சோள உற்பத்தியின் போது உருவாகும் ஒரு வகை வைரஸாகும். திரிபோஷா உற்பத்திக்காக சோளத்தைப் பெற்றுக்கொள்ளும் போது இந்த வைரஸின் செறிமானம் 30 சதவீதத்தை விடக் குறைவாகக்காணப்படுகின்றதா என்பது குறித்து அவதானம் செலுத்தப்படுவதோடு , தர பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். எனவே இது வரை விநியோகிக்கப்பட்டுள்ள திரிபோஷா பக்கட்டுக்களில் எந்த பிரச்சினையும் கிடையாது என்பதால் , அது குறித்து வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று திரிபோஷா நிறுவனத் தலைவர் தீப்தி குலரத்ன  கூறுகிறார்.

உயிர் அச்சுறுத்தலான பிரச்சினைகள் கடந்த காலங்களில் எழுந்தபோதும் அவற்றை தீர்ப்பதாக கூறிக்கொண்டு பெறுப்புவாய்ந்தவர்களும் அரசாங்கமும் குழுக்களை அமைந்து விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கைகளை பெற்று காலத்தை கடத்தி பிரச்சினைகளை மூடிமறைத்துவிடுவது மாத்திரமே இடம்பெறுகின்றது.

இவ்வாறான பிரச்சினைகள் எழாமல் இருப்பதற்கு அரசாங்கம் மற்றும் பொறுப்பானவர்கள் ஆரம்பத்திலேயே நடவடிக்கைகளை மேற்கொள்ள பரிசோதனை முறைகளையும் தரநிர்ணயமுறைகளையும் நடைமுறைப்படுத்த வேண்டும். உயிர்கள் பலியெடுக்கப்பட்ட பின்னரோ மக்கள் நோய்த்தாக்கத்திற்குள்ளான பின்னரோ குழுக்களை அமைந்து விசாரணைகளை நடத்துவதில் எவ்வித பயனும் இல்லை.

ஏமாற்றுபவர்களும் ஏமாறுபவர்களும் இருக்கும் வரை எந்தப்  பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியாது !

வீ.பி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர்கள் மீதான அக்கறையை பின்தள்ளும் பூகோள...

2024-02-12 01:49:22
news-image

தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மைத்­துவ போட்­டிக்கு முடிவு கட்ட...

2024-02-04 15:03:03
news-image

தமிழ் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை...

2024-01-28 14:04:47
news-image

குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­வதை விடுத்து யதார்த்­த­பூர்­வ­மான தீர்­வுக்கு...

2024-01-21 21:05:37
news-image

நல்லிணக்கத்துக்கான அரசாங்கத்தின் முயற்சியும் யதார்த்த நிலைமையும்

2024-01-14 11:49:14
news-image

தமிழர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீர்மானம்...

2024-01-07 12:15:27
news-image

பொருளாதார முன்னேற்றத்துக்கு அரசியல் தீர்வும் அவசியம்

2023-12-31 17:06:11
news-image

இமயமலை பிரகடனமும் யதார்த்த நிலைமையும்

2023-12-24 19:04:39
news-image

இணக்­கப்­பாட்­டுக்­கான முயற்­சிகள் தொடர்­வது நல்ல அறி­கு­றி­யாகும் 

2023-12-18 20:50:16
news-image

இந்தியாவின் வகிபாகத்தை வலியுறுத்தும் தமிழ்த் தரப்பு

2023-12-10 22:58:12
news-image

மலை­யக அர­சியல் தலை­மைகளின் முன்­னுள்ள கடமை,...

2023-12-04 16:48:54
news-image

பாரா­ளு­மன்­றத்தின் கெள­ர­வத்தை பாது­காக்க வேண்­டி­யதன் அவ­சியம்

2023-11-26 18:34:28