மட்டுப்படுத்தப்பட்டளவிலான திருத்தங்களுடன் கூடிய புதிய பிரேரணையின் 2 ஆவது வரைபு வெளியானது

Published By: Digital Desk 4

21 Sep, 2022 | 11:16 PM
image

(நா.தனுஜா)

இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்ட புதிய பிரேரணை வரைபில் மட்டுப்படுத்தப்பட்டளவிலான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட 2 ஆவது வரைபு வெளியாகியிருக்கும் நிலையில், அதில் சேர்க்கப்பட்டிருக்கும் சில விடயங்கள் ஜப்பான் மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளின் ஆதரவைத் திரட்டிக்கொள்ளும் நோக்கில் அவற்றின் கோரிக்கைக்கு அமைவாக சேர்க்கப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது.

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், அன்றைய தினமே இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையின் சாராம்சம் வாசிக்கப்பட்டு, அதுகுறித்த விவாதமும் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, வடமெசிடோனியா, மாலாவி மற்றும் மொன்ரனேக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகள் இணைந்து 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பில் தயாரித்துள்ள புதிய பிரேரணையின் வரைபு கடந்த வாரம் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதுகுறித்த கலந்துரையாடல்கள் மற்றும் தர்க்கங்களைத் தொடர்ந்து அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரான 2 ஆவது வரைபு தற்போது வெளியாகியிருக்கின்றது.

இலங்கை தொடர்பில் இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணை வரைபு குறிப்பிட்டுக்கூறத்தக்களவிற்கு வலுவானதாக இல்லை என்றும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தப்படாமை அதன் பிரதான குறைபாடென்றும் பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியிருந்த போதிலும், அப்பிரேரணை வரைபில் பெருமளவிற்குத் திருத்தங்கள் எவையும் மேற்கொள்ளப்படமாட்டாது என்றே எதிர்பார்க்கப்பட்டது.

 அதற்கமைய தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணையின் இரண்டாவது வரைபில் மிகவும் வலுவானதும், ஆழமானதுமான முக்கிய திருத்தங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை எனும்போதிலும் சில விடயங்கள் நீக்கப்பட்டு, சில விடயங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

 பிரேரணையின் முதலாம் வரைபில் 'அமைதிவழிப்போராட்டங்கள் அபிவிருத்தியிலும் தேர்தல்கள் மற்றும் சட்டத்தின் ஆட்சி உள்ளடங்கலாக ஜனநாயகக்கட்டமைப்பின் செயற்திறனை வலுப்படுத்துவதிலும் நேர்மறையான பங்களிப்பை வழங்கக்கூடும் என்பதுடன் போராட்டங்களில் கலந்துகொள்வதென்பது கருத்துக்களை வெளிப்படுத்தல் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் ஆகியவற்றுக்கான உரிமையை அனுபவிப்பதன் ஓர் முக்கிய வடிவமாகும்' என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில், அதன் 2 ஆவது வரைபில் 'போராட்டங்களில் கலந்துகொள்வதென்பது கருத்துக்களை வெளிப்படுத்தல் மற்றும் அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் ஆகியவற்றுக்கான உரிமையை அனுபவிப்பதன் ஓர் முக்கிய வடிவமாகும்' என்ற விடயம் நீக்கப்பட்டிருக்கின்றது. அதேவேளை அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்துவதற்கான நடைமுறை உள்ளடங்கலாக சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 4 ஆம் சரத்திற்கு அமைவாகச் செயற்படவேண்டிய கடப்பாட்டை மீளவலியுறுத்துவதாகக் குறிப்பிடும் புதிய விடயமொன்று 2 ஆவது வரைபில் சேர்க்கப்பட்டுள்ளது.

 மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30ஃ1 தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கம் இணையனுசரணை வழங்கியமை குறித்தும் அத்தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை கொண்டிருக்கும் கடப்பாடு குறித்தும் மீளநினைவூட்டும் வகையில் புதிய பிரேரணையின் முதலாம் வரைவில் உள்ளடக்கப்பட்டிருந்த பந்தி 2 ஆவது வரைபில் நீக்கப்பட்டுள்ளது.

 அடுத்ததாக சிவில் அரசாங்க செயற்பாடுகளில் அதிகரித்துவரும் இராணுவமயமாக்கல் தொடர்பில் முதலாவது வரைபில் பயன்படுத்தப்பட்டிருந்த சொற்பதங்கள் 2 ஆவது வரைபில் சற்று இறுக்கமாக்கப்பட்டுள்ளது.

 அதேவேளை அனைத்துச்சமூகங்களையும் சேர்ந்த புலம்பெயர் இலங்கையர்களை அணுகுவதற்கு இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள முதற்கட்ட நகர்வு குறித்து சுட்டிக்காட்டியும், பாதிக்கப்பட்ட சமூகங்களைச்சேர்ந்த அனைத்துத்தரப்பினருடனும் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுப்பதுடன் அர்த்தமுள்ள நல்லிணக்கம், அரசியல் அதிகாரப்பகிர்வு, மனித உரிமைகள் உறுதிப்பாடு, நிலையான சமாதானம் ஆகியவற்றை நிலைநாட்டுவதை ஊக்குவிப்பதாகத் தெரிவித்தும் புதிய பிரேரணையின் 2 ஆவது வரைபில் பந்தியொன்று சேர்க்கப்பட்டிருக்கின்றது.

 இவை ஒருபுறமிருக்க இவ்வாறு மேற்கொள்ளப்பட்டிருக்கும் திருத்தங்கள் ஜப்பான் மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளின் கோரிக்கைக்கு அமைவாகவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் புதிய பிரேரணையை நிறைவேற்றுவதற்கு அந்நாடுகளின் ஆதரவைத் திரட்டிக்கொள்வதே அதன் பிரதான நோக்கம் எனவும் அறியமுடிகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56