தனுஷின் 'வாத்தி' வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

By Digital Desk 5

21 Sep, 2022 | 11:54 AM
image

நடிகர் தனுஷ் கதையின் நாயகனாக நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகி இருக்கும் 'வாத்தி' திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'வாத்தி'. இதில் நடிகர் தனுஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நடிகர்கள் சாய்குமார், சமுத்திரக்கனி, தனிக்கல பரணி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், ஆடுகளம் நரேன், இளவரசு, நான் கடவுள் ராஜேந்திரன், ஹரிஷ் பராடி, பிரவீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ஜே. யுவராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

எக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் என்ற பட நிறுவனமும், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் என்ற நிறுவனமும் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சிங்கிள் ட்ராக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட படமாளிகைகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

திருச்சிற்றம்பலம்' படத்தின் எதிர்பாராத வசூல் வெற்றியைத் தொடர்ந்து, தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்' இம்மாத இறுதியில் வெளியாகவிருக்கிறது என்பதாலும், அவருடைய நடிப்பில் தயாராகியிருக்கும் 'வாத்தி' படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பதாலும், தனுஷின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்