(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இதுவரை நியமிக்கப்பட்ட பேரவைகள், சபைகள் மற்றும் குழுக்கள் நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கவில்லை.
அரசாங்கத்தின் தேசிய சபை யோசனை நாட்டு மக்களையும், சர்வதேசத்தையும் ஏமாற்றும் ஒரு செயற்பாடாகும். குறைந்தப்பட்சம் 10 அரசியல் கைதிகளை கூட விடுதலை செய்ய முடியாத அரசாங்கம் தேசிய சபை ஊடாக எவ்வாறு தமிழர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொடுக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேசிய பேரவை தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த நாட்டில் பல பேரவைகள் ,சபைகள் உருவாக்கப்பட்டு அவை காணாமல் போயுள்ளன.. ஆனால் குறுகிய,நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை வகுப்பதற்காக இப்போதுதான் நாட்டுக்கு ஒரு தேசிய சபை தேவைப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது. ஏற்கனவே பாராளுமன்றத்தில் பல குழுக்கள் உள்ளன.
அவற்றில் பல குழுக்கள் செயலிழந்துள்ளன. இவ்வாறிருக்கையில் தேசிய சபை உருவாக்கப்பட்டு இந்த சபையில் 35 உறுப்பினர்கள் இருக்கலாமென குறிப்பிடப்படுகிறது.
ஆனால் ஒரு கூட்டத்திற்கு 10 உறுப்பினர்கள் வந்தால் போதும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அவ்வாறானால் தேசிய சபைக்கு ஏன் நீங்கள் 35 உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும்? இது குறிகிய வட்டத்துக்குள் சபையை கூடி கலைந்து செல்வதாகவே அமையும்.
இந்த நாட்டில் இவ்வாறு எத்தனையோ பேரவை ,சபைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அவை வெற்றிகண்டுள்ளனவா என்று சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
1987 ஆம் ஆண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தம் கொன்டுவரப்பட்டது. இன்று அந்த ஒப்பந்தம் 35 ஆண்டுகளைக்கடந்தும் அந்த ஒப்பந்தத்தில் உள்ள விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா?சரத்துக்கள் ஏதாவது நடைமுறையில் உள்ளனவா? முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்திலே மங்கள முனசிங்க குழு ,அனைத்துக்கட்சி பாராளுமன்றக்குழு உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட 106 தடவைகளுக்கு மேல் இந்தக்குழுக்கள் கூடியுள்ளன ஆனால் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படவில்லை.
யுத்தம் முடிந்த பின்னர் அப்போதைய ஜனதிபதி மஹிந்த ராஜபக்சவினால் நல்லிணக்க ஆணைக்குழு கொண்டுவரப்பட்டது. இந்தக்குழுவாள் என்ன விடயங்கள் நிறைவேற்றப்பட்டன?இந்தக்குழுவின் அறிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
பின்னர் ஜனதிபதி ஆணைக்குழு நியமித்தார்கள்.இது கொண்டுவந்த விடயங்கள் ஏதாவது நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளனவா? .இங்கேஅரசின் சில நவீன அடிமைகள் தேசியம் பேசுவார்கள். அரசுடன் சேர்ந்து ஏதோ செய்வதாக கூறுவார்கள். அரசின் இந்த நவீன அடிமைகளால் ஒரு காலமும் தமிழ் மக்களுக்கான எந்த தீர்வுகளும் முன்வைக்கப்பட முடியாது. நடக்கவும் மாட்டாது.
இந்த பேரவைகள், குழுக்களினால் தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு என்ன முடிவுகள் எட்டப்பட்டன?நாங்கள் எவ்வாறு நீக்கல் உருவாக்கும் இவ்வாறான பேரவையில் குழுக்களில் அங்கத்துவம் பெறுவது?அதனூடாக எங்களுக்கு என்ன நடக்கும்? இவ்வளவு காலம் இந்த பிரச்சினையை தீர்க்க முடியாத அரசு இன்று பொருளாதார நிலைமையில் நலிந்துபோய் அதனை நிமிர்த்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலே ஜெனீவா பிரேரணைகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்திருக்கின்ற இந்த நேரத்திலே ஒரு பேரவையை உருவாக்கி எல்லாவற்றையும் மழுங்கடிக்க செய்கின்ற அல்லது உலகத்தை அரசு ஏமாற்றுகின்ற யுக்தியையே இவர்கள் கையாள முயல்கின்றனர். இதுதான் இந்த தேசிய சபையின் உண்மை முகம்.
மைத்திரி-ரணில் நல்லாட்சியில் இந்த பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டது. கிட்டத்தட்ட 73 தடவைகள் கூடிப்பேசினார்கள். ஒரு அரசியல் தீர்வுக்காக இடைக்கால அறிக்கையும் கொண்டு வரப்பட்டது. எதுவும் நடக்கவில்லை. எனவே பேரவையை கொண்டுவராதீர்கள்.
ஒரு 10 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாத இதிராணியற்ற இந்த அரசு தேசிய பேரவையைக்கொண்டு வந்து என்ன செய்யபோகின்றீர்கள்?ஆகவே இந்த தேசிய சபை என்பது தமிழ் மக்களைப்பொறுத்த வரையில் அவர்களுக்கு சாதகமானதாக அமையாது. அதனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்த தேசிய சபை தொடர்பில் நல்லெண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை.
இந்த தேசிய சபை ஒரு ஏமாற்று விடயம். இது பத்தோடு பதினொன்றாக அடிபட்டுப்போகப்போகின்றது. இது நாட்டில் பொருளாதார மாற்றத்தையோ அரசியல் தீர்வை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்ற மக்களுக்கு தீர்வுகளையோ வழங்கப் போவதில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM