ஆயிரம் ரூபாய் நாட் சம்பள விடயத்தில் மீறப்பட்டு வரும் நீதிமன்ற உத்தரவு

By Digital Desk 5

20 Sep, 2022 | 09:56 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

தொழிலாளர்களுக்கு நாட் சம்பளம் வழங்குவதில் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ள நிலையில் அது குறித்த சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக  இ.தொ.கா மாத்திரமே அறிவித்துள்ளது. ஏனைய மலையக கட்சிகள் இது குறித்து மெளனம் சாதிக்காமல் இவ்விடயத்தில் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. 

சம்பள நிர்ணய சபையின்  வேதனத்திட்டத்தின் அடிப்படையில் அடிப்படை சம்பளமாக 900 ரூபாவும் வரவு செலவு கொடுப்பனவாக 100 ரூபாவுமாக தோட்டத்தொழிலாளி ஒருவருக்கு நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மேன் முறையீட்டு நீதிமன்றின் உத்தரவை சில தோட்ட நிர்வாகங்கள் மீறி வருகின்றமை குறித்து தொழிற்சங்கங்கள் தமது கவனத்தை திருப்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாட்சம்பளம்  வழங்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யும்படி கோரி, 22 பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளும் மேன் முறையீட்டு நீதிமன்றில் கடந்த வருடம் மார்ச் மாதம் வழக்கு தொடர்ந்திருந்தன. எனினும் குறித்த ரிட் மனு கடந்த ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி தள்ளுபடி செய்யப்பட்டதோடு, வர்த்தமானி அறிவித்தலின் படி  ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன் படி ஓகஸ்ட் மாத சம்பளத்தை முழுமையாக எதிர்ப்பார்த்திருந்த தொழிலாளர்கள் அம்மாதத்துக்குரிய சம்பள சிட்டையை இம்மாதம் 10 ஆம் திகதி பெற்றபோது தொடர்ந்தும் தாம் ஏமாற்றத்துக்குள்ளாக்கப்பட்டிருப்பதை அறிந்து விசனத்தை வெளியிட்டுள்ளனர்.  பல தோட்டங்களில் நாள் சம்பளம் வழங்கப்படாது, பறித்த தேயிலைக்குரிய கொடுப்பனவுகளே வழங்கப்பட்டிருந்தன. 

அது மட்டுமல்லாது சில தோட்டங்களில் கைக்காசு எனப்படும் முறையில் அன்றாடம் வேலை செய்தவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவே வழங்கப்பட்டுள்ளது. 18 கிலோவுக்கு குறைவாக கொழுந்து பறித்தவர்கள் அனைவருக்கும் கொழுந்தின் அளவுக்கே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.  இது குறித்து தாம் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களுக்கு தோட்டத்தொழிலாளர்கள் அறிவித்திருக்கின்றனர்.  இதையடுத்து   குறித்த தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக  சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரமே அறிவித்துள்ளது.  அப்படியானால்  ஏனைய தொழிற்சங்கங்கள் ஏன் இது குறித்த மெளனம் சாதிக்கின்றன என்ற கேள்வி எழுகின்றது. 

தலைநகர் சந்திப்பு

மலையகத்தின் பிரதான தொழிற்சங்கங்கள் கடந்த வாரம் தலைநகரில் ஒன்று கூடி தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து பேசியிருந்தனர். இதில் தொழிலாளர்களின் சம்பள விவகாரமும் பேசப்பட்டிருந்தமை முக்கிய விடயம். இச்சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி, தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்டத்   தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். 

தொழிலாளர்களின் பிரச்சினைகளை முன்வைத்து  சகல அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்பட இங்கு தீர்மானம் எட்டப்பட்ட போதும், சம்பள விவகாரத்தில் இ.தொ.கா மாத்திரம் தனித்து செயற்பட்டு வருவதாக தெரிகின்றது. இந்த விவகாரத்தில்  தமிழ் முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மலையக கட்சிகளான தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஒத்துழைப்பு ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்வி எழுகின்றது. 

 குறித்த கட்சிகளின் அங்கத்தினர்களாக இருக்கும் தொழிலாளர்களுக்கும் வேதன விடயத்தில் அநியாயம் இடம்பெற்றுள்ள நிலையில் அது குறித்து இந்த இரு கட்சிகளும் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளன என்பது குறித்து அறிவிக்க வேண்டும். 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது சில தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆயத்தமாகி வருவதாகத் தெரிகின்றது. இதில் தேயிலை தூளை தலைநகருக்கு கொண்டு செல்லும் செயற்பாடுகளை  தாமதப்படுத்தும் விடயமும் அடங்குகின்றது. சில தோட்டப்பகுதிகளில் அவ்வாறான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகின்றது. தற்போதைய சூழ்நிலையில் தேயிலையின் விலைகள் அதிகரித்துள்ளன. 

ஆகவே இது தோட்ட நிர்வாகங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று உறுதியாகக் கூறலாம். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தொழிலாளர்களுக்கு     நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாய் என்பது  மிகக்குறைந்த வருமானமாக இருக்கும் நிலையில், அதையும் வழங்காது தோட்ட நிர்வாகங்கள் இழுத்தடிப்பு செய்வது மனித உரிமை மீறலாகவே நோக்கப்படல் வேண்டும். 

மேலும் கம்பனிகள் இந்தத் தொகையை வழங்க முடியாது என்றும் கூற முடியாது. 2021 ஆம் ஆண்டு ஒரு அமெரிக்க டொலர் 191 ரூபாயாக இருந்த அதே வேளை தற்போது அதன் பெறுமதி 370 ரூபாவை அண்மித்துள்ளது. இந்நிலையில் தேயிலை உற்பத்தி மூலம் கிடைக்கும் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. ஆனால் தொழிலாளர்களின் வருமானம் திட்டமிடப்பட்ட வகையில் முன்னரை விட குறைந்துள்ளன.

 எரிபொருள் விலை அதிகரிப்பால் போக்குவரத்து மற்றும் உற்பத்தி செலவீன  அதிகரிப்பை கம்பனிகள் வழமையாக முன்வைத்து வருவதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றே கூற வேண்டும். 

 செயலிழந்துள்ள தொழிற்சங்க செயற்பாடுகள்

பல  தோட்டங்களில் தொழிற்சங்க செயற்பாடுகளை முற்றாக செயலிழக்கச்செய்யும் வகையில் தோட்ட நிர்வாகங்கள் நடந்து கொள்வதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். நிர்வாகத்துடனான முரண்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பினால், கூட்டு ஒப்பந்தம் இல்லாததால் எவரும் அது குறித்து பேச முடியாது என்றும் தற்போது தோட்டங்களில் தொழிற்சங்கங்கள் இல்லை என்றும் சில தோட்ட முகாமையாளர்கள் தொழிலாளர்களையும் தோட்ட கமிட்டி தலைவர்களையும் திருப்பி அனுப்பிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

தொழிற்சங்கங்களுக்கு பெருமளவில் சந்தா செலுத்தும் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதால் தொழிற்சங்கங்களை விட இங்கு தோட்ட நிர்வாகம் கூறும்படியே நடந்து கொள்ள வேண்டும் என சில தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளன. இதில் தற்போது சம்பள விவகாரமும் சேர்க்கப்பட்டுள்ளது. நீதி மன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளமை அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. அதற்குரிய ஆதாரங்களும் உள்ளன. ஆகவே இவ்விடயத்தில் மலையக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்தே சட்ட ரீதியான நகர்வுகளுக்கோ அல்லது தொழிற்சங்க எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கோ செல்ல வேண்டும்.

அதுவே இந்த விவகாரத்துக்கு வலு சேர்ப்பதாக அமையும். எனினும் சில தோட்டங்களில் தொழிற்சங்கங்களை பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் சில தோட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்ததொரு தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மாற்று தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு பறிக்கப்பட்ட தேயிலைக் கொழுந்துக்கேற்ற கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் தொழிலாளர்கள், ஒரே தோட்டத்தில் இவ்வாறான பாரபட்சம் ஏன் என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர். 

அதே வேளை ஆயிரம் ரூபாய் நாட்சம்பளம் பெற்ற தொழிலாளர்கள் தமது தொழிற்சங்க தோட்டக் கமிட்டி தலைவர் மற்றும் பிரதிநிதிகளின் சொற்படி மெளனம் காத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இது தொழிலாளர்களிடையே பிரிவினையை வளர்க்கும் தோட்ட நிர்வாகத்தின் தந்திரோபாயமாக விளங்குகின்றது. இது குறித்து தொழிலாளர்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்த வேண்டியது தொழிற்சங்க காரியாலய உத்தியோகத்தர்களின் கடமையாக உள்ளது. கூட்டு ஒப்பந்தத்தில் தான் தொழிற்சங்கங்கள் பிரிந்து நின்று செயற்பட்டன. அல்லது ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தனர். இப்போது கூட்டு ஒப்பந்தம் இல்லை. 

அரசாங்கத்தின் பொறிமுறையின் கீழ் சம்பள நிர்ணய சபையால் வேதனம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  நாட்டை பொருளாதார ரீதியாக ஸ்திரப்படுத்தும் எந்த திட்டங்களுக்கும் ஆதரவு அளிக்கத் தயார் என அனைத்துத் தரப்பினரும் கூறியுள்ளனர். அந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு தேயிலை ஏற்றுமதி பிரதான இடத்தை வகித்து வருகின்றது. அப்படியானால் அத்தொழிற்றுறையில் இணைந்து கொண்டுள்ள தொழிலாளர்களுக்கு உரிய வருமானம் கிடைக்கின்றதா என்பதை உறுதிப்படுத்த வேண்டியது பிரதிநிதிகளின் கடமையல்லவா? இதை ஜனாதிபதியின் கவனத்துக்கு நேரடியாகவே கொண்டு செல்லும் உரிய நடவடிக்கையே இப்போது அவசியம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டிசம்பர் என்கின்றது - உறுதியாக...

2022-09-29 15:08:23
news-image

யார் இந்த பொன்னியின் செல்வன்?

2022-09-29 15:25:42
news-image

முதல் முறையாக விண்கல்லை திசை திருப்பிய...

2022-09-29 13:18:27
news-image

உடையால் பற்றி எரியும் ஈராக் :...

2022-09-29 13:18:49
news-image

கஞ்சாவை சட்டபூர்வமாக்குவதால் யாருக்கு இலாபம் ?

2022-09-29 12:26:33
news-image

மீண்டும் களத்தில் இறங்கும் சந்­தி­ரிகா

2022-09-29 12:26:16
news-image

சிறுவர்கள் பட்டினியால் பாதிக்கப்படுவது குறித்த தகவல்...

2022-09-28 12:40:54
news-image

இலங்கையின் வர்த்தக நாமம் கஞ்சா…?

2022-09-28 10:14:28
news-image

மலையக சமூகம் தொடர்பில் ஐ.நா. பிரதிநிதியின்...

2022-09-28 10:10:48
news-image

அடையாளம் தான் துறப்போம். எல்லா தேசத்திலும்...

2022-09-27 09:27:02
news-image

ஐ.எம்.எப். கடனை தாண்டிய இந்தியாவின் டொலர்...

2022-09-26 10:53:34
news-image

இந்தியா இலங்கைக்கு பலமாக இருக்கின்றது :...

2022-09-25 15:44:19