சிறைவாச விடுமுறை - பரோல்

By Nanthini

20 Sep, 2022 | 01:38 PM
image

லங்கையில் தேசிய கைதிகள் தினமானது ஒவ்வொரு வருடமும் புரட்டாதி மாதம் 12ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் இக்கட்டுரையானது கைதிகளுக்கு காணப்படுகின்ற சிறப்புரிமையான பரோல் பற்றி ஆராய முற்படுகிறது.

பரோல் என்பது தண்டனைக்காலம் முடியும் முன்னரே நன்னடத்தையின் காரணமாக ஒருவர் குறிப்பிட்ட காரணத்துக்காக சிறைச்சாலையிலிருந்து வெளியேற அனுமதிக்கும் தற்காலிக விடுவிப்பாகும்.

உதாரணமாக, ஒரு சிறைக்கைதி வெளியே கலந்துகொள்ள வேண்டிய மரணம், திருமணம் போன்ற முக்கிய நிகழ்வுகளுக்காக பரோல் வழங்கப்படக்கூடும்.

ஆயினும், ஒரு கைதி எதற்காக விடுவிக்கப்படுகிறாரோ, அந்த நிகழ்வுக்காக மாத்திரமே கலந்துகொள்ள முடியும். அவ்வாறன்றி, அக்குறிப்பிட்ட கைதி பரோலில் குறிப்பிட்ட நிகழ்வைத் தவிர வேறொரு நிகழ்வில் கலந்துகொள்வாராயின், அப்பரோல் விடுவிப்பு ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்.

பரோல் முறைமையின் நவீனத்துவ சிந்தனையானது 1840இல் அலெக்ஸாண்டர் மாகோனொச் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் இப்பரோல் முறைமையில் மூன்று படிநிலைகளை ஆராய்ந்தார்.

1. ஒருவரின் நன்னடத்தைக்காக விடுமுறை

2. தொழில் மற்றும் கல்விக்காக விடுமுறை

3. நிபந்தனைகளுடனான விடுமுறை

ஒரு சிறைக்கைதியானவர் சிறைக்காவலிலிருந்து நன்னடத்தை காரணமாகவும், அவரின் குற்றத்தின் தன்மை காரணமாகவும், அக்குறிப்பிட்ட நிகழ்வுக்கு அவர் அவசியமானவரா என்பதை கருத்தில் கொண்டும் காவலுடன் விடுவிக்கப்படுவார்.

மேலும், பரோலில் விடுவிக்கப்படுகின்ற போது சிறைச்சாலையிலிருந்து அக்குறிப்பிட்ட இடம் வரையான தூரமும் கவனத்தில் கொள்ளப்படும்.

உதாரணமாக, தூரத்தை அடிப்படையாகக் கொண்டு பரோல் வழங்கப்படுவது தவிர்க்கப்படலாம். அந்த வகையில் பரோலானது இரண்டு முறைகளில் வழங்கப்படலாம்.

1. தற்துணிவின் அடிப்படையான பரோல்

2. பணிப்புறுத்தப்பட்ட பரோல்

கனடாவில் பரோல் வழங்கப்படுவதற்கான  நடைமுறையை எடுத்து நோக்கினால், ஒரு சிறைக்கைதியானவர், தனது சிறைத்தண்டனையில் மூன்றில் ஒரு பகுதி முடிவுற்ற பிறகு பரோலுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதியுடையவராகிறார்.

மேலும், பாரதூரமான குற்றத்தை விளைவித்த நபர் பரோலில் செல்ல அனுமதிக்கப்படமாட்டார். ஆயினும், கொலைக்கைதி ஒருவர் தனது சிறைத்தண்டனை காலத்தில் 25 ஆண்டுகளின் பிற்பாடே பரோலில் செல்வதற்கு விண்ணப்பிக்க முடியும்.

லண்டனில், பரோலில் செல்வதற்கான நடைமுறையை நோக்கும்போது, 'பரோல் சபையே' சிறைக்கைதிகளின் பரோல் சார்ந்த முழுமையான தீர்மானத்தை எடுப்பதற்கான அதிகாரத்தை கொண்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் பல நிபந்தனைகள் வழங்கப்பட்டே ஒரு சிறைக்கைதி பரோலில் விடுவிக்கப்படுவார்.

1. பரோலில் செல்ல அனுமதிக்கப்படும் காலத்தில் கைதி நன்னடத்தையுடன் நடந்துகொள்ள வேண்டும்.

2. குறிப்பிட்ட கைதி வேறு குற்றங்களை பரோலில் செல்ல அனுமதிக்கப்படும் காலத்தில் செய்யக்கூடாது.

3. தன்னுடன் கண்காணிப்புக்காக வருகை தரும் உத்தியோகத்தருடன் எப்போதும் தொடர்பில் இருப்பதுடன், அந்த உத்தியோகத்தரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.

4. பரோலில் விடுவிக்கப்படும்போது கண்காணிப்பு உத்தியோகத்தருக்கு கைதியால் வழங்கப்பட்ட விலாசத்திலேயே கைதி தங்க வேண்டும். அத்துடன் வேறு விலாசத்தில் தங்க வேண்டிய தேவை ஏற்படின், கண்காணிப்பு உத்தியோகத்தரின் முற்கூட்டிய அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

5. பரோலில் செல்லும் காலத்தில் குறித்த கைதி எந்தவொரு தொழிலிலும் ஈடுபடக்கூடாது.

6. ஐக்கிய இராச்சியத்துக்கு வெளியே பிரயாணம் செய்தல் தடுக்கப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறான நிபந்தனைகளை ஐக்கிய இராச்சியத்தில் பரோலில் செல்பவர் பின்பற்ற வேண்டும்.

ஐக்கிய அமெரிக்காவில் காணப்படுகின்ற சட்ட ஏற்பாடுகளை நோக்குகின்ற போது, அமெரிக்காவில் சில மாநிலங்களில் குறிப்பிட்ட கால சிறைத்தண்டனை முடிவிலேயே ஒரு கைதியானவர் பரோலுக்கு விண்ணப்பிக்க முடியும்.

அமெரிக்காவில் பரோல் ஆணைக்குழுவே பரோலில் விடுவிப்பது தொடர்பான நியாயாதிக்கத்தை கொண்டுள்ளது.

அமெரிக்காவின் மொறிசே VS பிறீவர் (408 VS 471) (1972) என்ற வழக்கிலே பரோல் வழங்குதல் அல்லது மறுக்கப்படுதல் என்பது பதினான்காவது சீர்திருத்தத்தின் தக்கவாறான சட்டவழிமுறையின் (DUE  PROCESS OF LAW) அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், பரோல் தொடர்பில் இந்தியாவின் சட்ட ஏற்பாடுகளை நோக்குகின்ற போது, பரோல் வழங்குவது தொடர்பில் நியதிச்சட்ட ஏற்பாடுகள் எதுவும் காணப்படவில்லை. அது மட்டுமன்றி, குற்றவியல் நடபடிமுறைக் கோவையிலும் எந்த நடைமுறையும் காணப்படவில்லை. ஆயினும், நிர்வாக அடிப்படையிலான தீர்மானத்தின் அடிப்படையில், பரோல் வழங்கப்படுவதற்கான ஏற்பாட்டை சில மாநிலங்கள் கொண்டுள்ளன.

2000ஆம் ஆண்டின் டெல்லி சிறைச்சாலை சட்டத்தின் பிரிவு 2 (P)இன்படி, பரோலில் விடுவித்தல் என்பது ஒரு கைதியை குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் சிறைச்சாலையில் இருந்து வெளியே செல்ல அனுமதித்தல் ஆகும்.

குற்றவியல் நடபடிமுறைக் கோவையின் பிரிவுகள், பரோல் தொடர்பில் ஆராயாமல் இருப்பினும், வழக்குகளின் தீர்ப்புச்சட்டங்களில் பரோல் பற்றிய வியாக்கியானங்கள் எழுந்துள்ளன.

மேலும், இந்தியாவில் தற்போது பரோல் என்பது குற்றவியல் பரப்பில் மிக முக்கிய விடயமாக கருதப்படுகிறது.

இந்தியாவின் இன்டீர் சிங் VS அரசு (8 ATR 1978 SC 1091) என்ற வழக்கிலே சிறைக்கைதிகளின் நடத்தைப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு பரோலில் செல்ல அனுமதி வழங்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்தியாவில் இரண்டு முறையான பரோல் முறைகள் காணப்படுகின்றன.

1. கட்டுக்காவலுடனான பரோல்

2. கிரம முறையான பரோல்

கட்டுக்காவலுடனான பரோல் என்பது கைதியின் குடும்ப அங்கத்தவர்களின் இறப்பு, திருமணம், பாரதூரமான நோய் நிலைமை, அவசர அவசிய நிலைமை போன்ற காரணங்களின் நிமித்தம் வழங்கப்படலாம்.

கிரம முறையான பரோல் என்பது பரோல் விண்ணப்பத்தின் பேரில் கைதியானவர் விடுவிக்கப்படலாம். இவை பின்வரும் சந்தர்ப்பங்களில் அமையலாம்.

1. குடும்ப அங்கத்தவரின் வியாதி மற்றும் நோய் நிலைமை

2. பாரதூரமான நோய் நிலைமை அல்லது இறப்பு

3. திருமணம்

4. தனது மனைவிக்கு குழந்தைப்பேறு

5. தனது குடும்பத்துக்கு ஏற்பட்ட பாரதூரமான பொருள் இழப்பு

6. குடும்பத்தை பராமரிப்பதற்காக

7. உச்ச நீதிமன்றத்துக்கு விண்ணப்பித்ததன் பேரில் விடுவிக்கப்படலாம்.

இலங்கையில் பரோலில் செல்வதற்கான ஏற்பாடுகள் பற்றி நோக்குகையில்...

1. Home Leave Scheme

2. License Scheme

3. Work Release Scheme

முதலாவது முறையின் அடிப்படையில் சிறைக்கைதிகள் ஆகக்கூடியது 7 நாட்கள் வரை பரோலில் செல்ல அனுமதிக்கலாம்.

இரண்டாவது முறையானது சில நிபந்தனைகளுடன் ஒருவரை பரோலில் செல்ல அனுமதிக்கிறது. இம்முறையில் சிறைக்கைதியானவர் சிறை நலன்புரி உத்தியோகத்தரால் கண்காணிக்கப்படுவார்.

வேலைக்காக பரோலில் செல்லுதலானது சில குறிப்பிட்ட சிறைக்கைதிகள் பகலில் வேலைக்கு அல்லது தொழிலுக்குச் செல்வதற்கும் இரவில் சிறைக்கு திரும்புவதற்கும் அனுமதிக்கப்படுவர்.

ஆயினும், பரோல் தொடர்பில் பல்வேறுபட்ட சவால்கள் எழுகின்றன. அவையாவன:-

பரோலின் வினைதிறன் மற்றும் விளைதிறன் சமூகத்தில் அபாய நிலைமை மற்றும் பரோலில் செல்வதற்கான கைதிகளை தெரிவு செய்வதில் சவால்கள், வளப்பற்றாக்குறை, நன்னடத்தை தொடர்பான அறிக்கையின் குறைபாடுகள், சமூகப் பார்வை என்பன பரோலில் செல்வதற்கான உரிமையை கைதிகள் கொண்டுள்ள போதும், கைதிகள் பரோலை பெறுவதற்கு சவால் நிலைமையை தோற்றுவிக்கின்றன.

- சட்டத்தரணி அம்பிகை கஜேந்திரன் (LL.B)

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்