எதிர்கால இலங்கை - இந்தியத்தொடர்புகள் வர்த்தகத்தை மையப்படுத்தியவையாக அமைவது அவசியம் - ஜனாதிபதி ரணில்

Published By: Digital Desk 3

20 Sep, 2022 | 11:09 AM
image

(நா.தனுஜா)

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எதிர்காலத்தொடர்புகள் வர்த்தகத்தை மையப்படுத்தியவையாகவே இருக்கவேண்டும் எனவும், ஆகவே அதனை விரிவுபடுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் இலங்கை - இந்திய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 

இந்திய சுதந்திரமடைந்து 75 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமையை நினைவுகூரும் விதமாக இலங்கை - இந்திய அமைப்பினால் கடந்த வியாழக்கிழமை கொழும்பிலுள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இராப்போசன விருந்துபசார நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

அந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர், 'கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை ஏற்படுத்தவல்ல ஒப்பந்தங்களைச் செய்துகொள்வதற்கு முயற்சித்தோம். 

எனவே தற்போது இந்நடவடிக்கையைத் துரிதப்படுத்தவேண்டுமென அரச உயர்மட்டத்திற்கு அறிவித்துள்ளேன். எதுஎவ்வாறெனினும் இலங்கையின் சர்வதேச வர்த்தகத்தை அபிவிருத்தி செய்யவேண்டுமானால், நாம் வேறுவிதமாகச் சிந்திக்கவேண்டும். 

அதனை இலக்காகக்கொண்டு சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளைக் கையாளத்தகுந்த சர்வதேச வர்த்த அலுவலகமொன்றை நிறுவுவதற்குத் தீர்மானித்துள்ளேன். இதனூடாக எமது வர்த்தக செயற்பாடுகளை சர்வதேச மட்டத்திற்கு விரிவுபடுத்தமுடியும்' என்று சுட்டிக்காட்டினார்.

மேலும் பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் நிலுவையில் இருப்பதாகவும் இவ்விடயத்தில் இலங்கையும் இந்தியாவும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான பல்வேறு வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி, சுற்றுலா, வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயற்படமுடியும் என்று குறிப்பிட்டார்.

அதேவேளை இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இராஜதந்திரத்தொடர்புகள் ஆரம்பமாகி 75 வருடங்கள் பூர்த்தியடைந்திருப்பதாகவும், இருநாடுகளும் சுதந்திரமடைந்து 100 ஆவது வருடம் பூர்த்தியடையும் வேளையிலும் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மிகவும் வலுவானதாகக் காணப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

அதுமாத்திரமன்றி '1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரமடைந்தபோது ஒருமைப்பாட்டையும் சுயாட்சியையும் நிலைநிறுத்துவதை முன்னிறுத்தி இயங்கவேண்டியிருந்த போதிலும், இப்போது இந்தியா நீண்ட தூரத்தைக்கடந்து வந்துவிட்டது. எனவே அடுத்தகட்டமாக 2047 ஆம் ஆண்டாகும்போது இலங்கையும் இந்தியாவும் எவ்வாறிருக்கும், எவ்வாறிருக்கவேண்டும் என்பது குறித்து சிந்திக்கவேண்டும்' என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதுஇவ்வாறிருக்க இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய இலங்கை - இந்திய அமைப்பின் தலைவர் கிஷோர் ரெட்டி, இருநாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் அரசியல், பொருளாதார, சமூக, மொழியியல், பாரம்பரிய, கலாசாரத்தொடர்புகள் குறித்து நினைவுகூர்ந்ததுடன் இருநாடுகளும் ஒன்றிணைந்து பணியாற்றவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

மேலும் நிகழ்வில் இறுதியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலங்கை - இந்திய அமைப்பின் சார்பில் நினைவுச்சின்னமொன்று வழங்கப்பட்டதுடன், ஜனாதிபதி மற்றும் இந்திய உயர்ஸ்தானிகரால் 'மைத்ரி' எனும் பெயரிலான நூலொன்றும் வெளியிட்டுவைக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right