இனி கோட் சேவ் த ரிங்… (God Save the King" ) ராணிக்கு பதில் மன்னர்

By Vishnu

19 Sep, 2022 | 12:10 PM
image

குமார் சுகுணா

1948 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி அன்று பக்கிங்ஹாம் மாளிகையில் சார்ள்ஸ் பிறந்தார். பிபிசி அவரது பிறப்பை அறிவித்தபோது, ராணிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று செய்தி வெளியிடவில்லை. அவரது தாயார், "இளவரசரைப் பாதுகாப்பாகப் பெற்றெடுத்துள்ளார்," என்று தெரிவித்தது.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு  அவர் அரியணை வாரிசானார். ஆயினும் சுமார் 70  வருடங்களுக்கு மேலாக பிரிட்டன் அரியணைக்கான வாரிசாக காத்திருந்த இருந்த சார்ல்ஸ் இப்போது  மன்னராகிவிட்டார். இதுவரை பிரிட்டிஷ் அரியணைக்கு வந்தவர்களில், அதிக வயதில் புதிய அரசராகப் பொறுப்பேற்றவர் இவர்தான். இப்போது இவருக்கு வயது 73.

ராணி 2- ஆம்  எலிசபெத்தின் மறைவுக்கு பின்னர் பிரித்தானியாவின் புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவர் குழந்தை பருவத்தில் இருந்து அரண்மனையில் வளர்ந்தாலும், பாரம்பரிய முறைப்படி இவர் தனது கல்வியை அரண்மனையில் கற்கவில்லை.

கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரிக்கு சென்று முதலில் தொல்லியல், மானுடவியல், பாடங்களை கற்று பிறகு வரலாற்று பாடத்தில் கடந்த 1970-ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். பல்கலைக்கு சென்று பட்டம் பெற்ற அரசு குடும்பத்தைச் சேர்ந்த முதல் நபர் சார்லஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 1969 இல், கேர்னார்ஃபோன் கோட்டையில் நடைபெற்ற விழாவில் சார்ல்ஸ் வேல்ஸ் இளவரசராக பட்டம் சூட்டப்பட்டார். அவர்  வேல்ஷ் மற்றும் ஆங்கிலத்தில் தனது உரையை நிகழ்த்தினார்.

இதன்பின் இங்கிலாந்தின் ராயல் விமானப்படையில் சேர்ந்து விமானியாக 7 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் கடற்படையில் ஹெலிகொப்டர் விமானியாக பணியாற்றினார். இங்கிலாந்து கடற்படையின் எச்எம்எஸ் பிரானிங்டன் என்ற கண்ணிவெடி அகற்றும் கப்பலின் கமாண்டராக பணியாற்றி 1976-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

சார்லஸ் இளவரசராக இருந்தபோது அவருக்கு காதல் தோல்வி அனுபவங்களும் ஏற்பட்டன. தற்போது அவரது இரண்டாவது மனைவியாக இருக்கும் கமீலாவை, சார்லஸ் முதலில் காதலித்தார். ஆனால் இந்த காதல் வெற்றிபெறவில்லை. அதன்பின் அமண்டா நாட்ச்புல் என்பவரை சார்லஸ் விரும்பினார். அவரும் சார்லஸை நிராகரித்தார்.

கடந்த 1981-ஆம் ஆண்டு சார்லஸ்-டயானாவை சந்தித்து தனது காதலை வெளிப்படுத்தினார். இதை டயானா ஏற்றுக் கொண்டதால், இவர்களது திருமணம் 1981-ஆம் ஆண்டு  நடந்தது.

முதல் குழந்தை இளவரசர் வில்லியம் 1982-இல் பிறந்தார். இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி 1984-இல் பிறந்தார். சில ஆண்டுகளுக்கப் பின் சார்ள்ஸ்-டயானா உறவில் விரிசல் ஏற்பட்டது. சார்ள்ஸின் முன்னாள் காதலி கமீலாதான் இந்த பிரிவுக்கு காரணம் என கூறப்பட்டது.

கடந்த 1992-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்து 1996-ஆம் ஆண்டு  விவாகரத்து பெற்றனர். அடுத்தாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்தார். கடந்த 2005-ஆம் ஆண்டு முன்னாள் காதலி கமீலாவை, இளவரசர் சார்லஸ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்குப்பின், அரியணை ஏறும் நபராகவும், பொதுநலவாய தலைவராகவும் இளவரசர் சார்ள்ஸ் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டார்.

ராணி 2-ஆம் எலிசபெத் மறைவால், சம்பிரதாயப்படி, அடுத்த 24 மணி நேரத்தில் இளவரசர் சார்லஸ், லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் மாளிகையில் நடைபெற்ற வரலாற்று நிகழ்வில் மூன்றாம் சார்ல்ஸ் ஐக்கிய ராஜ்ஜியத்தின் அரசராக முறைப்படி பிரகடனம் செய்யப்பட்டார்.

தமது தாயின் ஆட்சிக் காலம் முழுவதும் பல தலைமுறைத் தலைவர்கள் வருவதையும் போவதையும் சார்லஸ்  பார்த்துள்ளார். ஐக்கிய இராஜ்ஜியத்தின் 15 பிரதமர்களும் ஐக்கிய அமெரிக்காவின் 14 ஜனாதிபதிகளும் இதில் அடக்கம்.

அரசரான பிறகு, சார்ல்ஸுக்கு இனி தனியாக கடவுசீட்டோ , சாரதி உரிமமோ இருக்காது. பொதுவெளியில் தீவிரமான கருத்துகளை அவர் வெளியிடமாட்டார். அரசர் பதவி அவரது தனிப்பட்ட வாழ்வை பதிலீடு செய்யும்.

 இவர் பிரிட்டனின் அரசத் தலைவராக  இருப்பினும், அவரது அதிகாரங்கள் குறியீடு மற்றும் சம்பிரதாயம் மட்டுமே. அரசியல் ரீதியாக அவர் நடுநிலை வகிப்பார்.

அரசிடமிருந்து முக்கியமான கையொப்பம் தேவைப்படும் ஆவணங்கள், கடிதங்கள், கூட்டங்களுக்கான விளக்கங்கள் உள்ளிட்டவை சிவப்பு தோல் பெட்டியில் அவருக்கு வரும். பொதுவாக புதன்கிழமையன்று அரசரை நாட்டின் பிரதமர் பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்திப்பார். அரசாங்க விவகாரங்களை அவருக்குத் தெரிவிப்பார்.இந்த சந்திப்புகள் முற்றிலும் தனிப்பட்டவை. அதில் பேசப்படுவை பற்றி எந்தப் பதிவும் இருக்காது.

இவரது அதிகாரங்கள் என்னவென்று பார்த்தால், வழக்கமாக பொதுத் தேர்தலில் வெற்றிபெறும் கட்சியின் தலைவர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைக்கப்படுவார். அங்கு அவரிடம் முறையாக அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்பு விடுக்கப்படும். பொதுத் தேர்தலுக்கு முன் முறையாக அரசைக் கலைக்கும் பணியையும் அரசர் மேற்கொள்கிறார்.

ஆண்டின் முதல் பாராளுமன்ற கூட்டத்தை அரசர் தொடங்கி வைப்பார். பிரபுக்கள் அவையின் சிம்மாசனத்தில் அமர்ந்து அவர் ஆற்றும் உரையில் அரசின் திட்டங்களை அறிவிப்பார்.

ஒரு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, அது சட்டமாக மாறுவதற்கு அரசரால் முறையாக ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.

இவை தவிர நாட்டுக்கு வருகை தரும் பிற நாட்டுத் தலைவர்களுக்கு மன்னர் விருந்தளிப்பார். பிரிட்டனில் உள்ள வெளிநாட்டுத் தூதர்கள், தூதரக உயர் ஆணையர்களைச் சந்திப்பார். நவம்பர் மாதம் லண்டனில் உள்ள அடையாளக் கல்லறையில் நடைபெறும் வருடாந்திர நினைவு நிகழ்வுக்கு  மன்னர் தலைமை தாங்குவார்.

56 சுதந்திர நாடுகள் மற்றும் 240 கோடி மக்களைக் கொண்ட  பொதுநலவாய அமைப்பின் தலைவராக புதிய மன்னர் இருப்பார். அவற்றில் 14 நாடுகளுக்கு அவர் அரசத் தலைவராகவும் இருப்பார்.

முன்னதாக பிரிட்டனின் அங்கமான வேல்ஸ் இளவரசராக சார்லஸ் இருந்து வந்தார். இவரது முன்னாள் மனைவி  டயானா இளவரசியாக இருந்தார். தற்போது இவர்களது மூத்த மகனான வில்லியம்ஸ்இளவரசராகவும் வேல்ஸ் இளவரசியாக வில்லியம் மனைவி கேத்தரீனும் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும், இளவரசி டயானாவின்  திருமண வாழ்வின் முறிவோடு தொடர்புபட்ட கமிலாவை சார்லஸ் திருமணம் செய்துள்ளமையால்,  17 ஆண்டுகளாக சார்ல்ஸின் மனைவியாக இருக்கும் கமில்லா, தற்போது அவரது ராணியாகியுள்ளார்.

தபால் வில்லைகள், பேங்க் ஒப் இங்கிலாந்தின் பணத் தாள்கள், புதிய கடவுசீட்டுகள் ஆகியவற்றில் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு பதிலாக புதிய மன்னர் சார்ள்ஸ்ஸின்  படம் அல்லது பெயர் இனி  இடம்பெறும். அத்தோடு பிரித்தானிய தேசிய கீதம் இனிமேல்  கோட் சேவ் த ரிங்……("God Save the King" )என மாறிவிடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்