முட்டாள் தனமான யோசனைகளை தவிருங்கள் ! உலக பிரசித்திபெற்ற மன்னாரின் உயிர்பல்வகைமையும் கருவாடும்

19 Sep, 2022 | 11:00 AM
image

அண்மையில் புதிதாக பதவியேற்ற சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சரின் மன்னார் தீவு சம்பந்தமானகூற்று பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. 

பலரும் இக்கூற்றுக்கு எதிரான கருத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். அவரின் கூற்று : சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியில், மன்னார் தீவினை முற்றுமுழுதாக இரவு களியாட்ட மையமாகமாற்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்து இலங்கைக்கு பெரும் அன்னிய செலாவணியை ஈட்டுவதன்  நோக்கமாக கொண்டது. 

இக் கூற்றுக்கு எதிர்ப்பு வெளியிட்ட பலரும் கலாச்சார சீரழிவினை மையமாகக் கொண்டே எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

ஆயினும் முக்கியமாக சூழல் மாசடைதலை எவரும் குறிப்பிடவில்லை. மன்னர் தீவானது பல இயற்கை வளங்களை கொண்ட ஒரு அதிசய தீவாகும்.  இவ் இயற்கை வளங்கள் ஆவன; கடற்கரைகள், மண் திட்டுகள், கண்டல் தாவர சூழல் தொகுதிகள், ரம்மியமான இயற்கை காட்சிகள், தேவாங்கு போன்ற வன விலங்குகள் மற்றும் பறவைகளை கொண்ட ஒரு அதிசய தீவாகும். 

மன்னாருக்கே உரித்தான உயிர்ப்பல்வகைமை மன்னர் தீவின் சிறப்பம்சமாகும். மன்னர் தீவின் உயிர்ப்பல்வகைமையும் அதன் இயற்கை சூழலும் மன்னர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் இன்றியமையாததொன்றாகும். 

இரவு களியாட்ட விடுதிகளை ஊக்குவிப்பதன் மூலம் இவ் இயற்கை சூழலும் உயிர்பல்வகைமையும் பெரிதாக பாதிக்கப்படுவதனால் இது மன்னார் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிடும். 

உலகின் பல நாடுகளில் இரவு களியாட்ட விடுதிகள் காணப்படுகின்றன. இவ்விரவு களியாட்ட விடுதிகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை இணைய வழியூடாகவும், நேராக சென்று பார்ப்பதன் ஊடாகவும் அறிந்து கொள்ளலாம். தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா தென் கொரியா மற்றும் ஆபிரிக்க, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் இவற்றை காணலாம்.

இரவுக் களியாட்ட விடுதிகளில் அதிசக்திவாய்ந்த பல வர்ண வெளிச்சங்களும், அதிக சத்தத்துடன் கூடிய இசையும் சர்வ சாதாரணமானது. இவை இரண்டும் சூழலில் ஒளி, ஒலி மாசடைதலை ஏற்படுத்தும். இவ் ஒளி, ஒலி மாசடைதல் பெரிதாக கணக்கில் எடுக்கப்படாவிட்டாலும், அதன் பாதிப்பு சூழலில் அளவிடப்பட முடியாதது. 

உதாரணமாக ஐப்பசி மாதத்தில் இருந்து பங்குனி மாதம் வரையான காலப்பகுதியில் உலகின் வடபகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் பல்லாயிரம் கிலோ மீற்றர்களை கடந்து மன்னார் தீவினை வந்தடைகின்றன.

இதனாலேயே மன்னார், உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் முக்கியத்துவம் பெறுகின்றது. இப்பறவைகளை அவை இனப்பெருக்கம் செய்யும் நாடுகளில், அதீத குளிர் காரணமாகவும் சுகமாக வாழ்வதற்கு இடமின்மை காரணமாகவும் இலங்கையை வந்தடைகின்றன. இவை மன்னாரில் உள்ள நீர் நிலைகளிலும் நீர் சார்ந்த சதுப்புநிலங்களிலும் அத்துடன் கண்டல் தாவரங்கள் உள்ள பகுதிகளிலும் தமக்கு தேவையான உணவுகளை பெற்றுக் கொள்கின்றன.

பறவைகள் நாடும் இவ்விடங்களிலேயே சுற்றுலாத்துறையும் நாடுகின்றது. இப் பறவைகளுக்கு இயற்கையாக காணப்படும் பகல் காலமும் இரவுக்காலமும் சமமாக இருக்க வேண்டியது அவைகளின் உடற்கூற்று தொழில் பாடுகளுக்கு அத்தியாவசியமாகும். இந்த காலப்பகுதிகளில் அந்த பறவைகளின் நாடுகளில் பகல் காலம் ஆறு மணித்தியாலத்திலும் குறைவானதாகவும், இரவுக் காலம் 18 மணித்தியாலத்தை விட கூடியதாகவும் காணப்படும்.

ஆகவே இரவு களியாட்ட விடுதிகளை ஆரம்பிப்பதன் மூலம் சூழல் இரவினை இழக்க நேரிடும். அத்துடன் அதிக சத்தம் கொண்ட ஒலி  இப்பறவைகளின் இரவு நேர தூக்கத்தினை குழப்பிவிடும். இதன் காரணமாக பல மில்லியன் ஆண்டுகளாக பறவைகளுக்கு ஆதரவாக இருந்த மன்னர் தீவு இரவு களியாட்ட விதிகளினால் நிராகரிக்கப்பட்டு விடும். இந்நிலைமையானது மன்னார் தீவில் உள்ள உயிர்ப்பல்வகைமையில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு உலகின் உயிர்பல்வகைமையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மன்னர் பகுதியில், இலகுவாகபார்க்கப்படக் கூடிய தேவாங்கு என்ற விலங்கு மனித குலத்திற்கு மூதாதைகள் ஆன மனித குரங்கிற்கு மூதாதைகள் ஆன  குரங்கிற்கு மூதாதைகள் ஆன விலங்கு ஆகும். இவ்விலங்கு, 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்கா கண்டத்தில் கூர்ப்படைந்தது. இன்று இவ் விலங்குகள் ஆபிரிக்க கண்டத்தில் மடகஸ்கார் இலும், ஆசிய கண்டத்தில் இலங்கை, தென் இந்தியா, மற்றும்மற்றும்.இந்தோனேசியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றன. இது இலங்கையும் இந்தியாவும் ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்து பிரிந்து சென்றதற்கான ஆதாரமும் ஆகும். இப்படிப்பட்ட ஒரு விலங்கு மன்னார் தீவில் இலகுவாக காணக்கூடியது கிடைத்தற்கரிய சந்தர்ப்பமாகும். இவை இரவில் மட்டுமே நடமாடி பொதுவாக பூச்சிகளை உணவாக உட்கொள்கிறது. இரவு களியாட்ட விடுதிகள் பல வர்ண விளக்குகளை கொண்டிருப்பதனால் இவை உட்கொள்ளும் பூச்சிகள் இவ் விளக்குகளினால் கவரப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு. இந்நிலையில் தேவாங்கு என்ற இந்த அரிய விலங்கினத்தின் உணவு பாதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் வெளிச்சம் கூடிய இரவுகள் இவற்றின் வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கலாம்.

இவ்வாறு இரவு களியாட்ட விடுதிகள் மன்னர் தீவின் இயற்கை சூழலில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல் அத்தீவின் மக்களின் வாழ்வாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில்,.இயற்கையாக வாழும் விலங்குகளினதும் தாவரங்களினதும் அழிவு நிச்சயமாக மனிதனின் வாழ்விலும் தாக்கத்தினை ஏற்படுத்தும்.

ஆகவே மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தமக்கு எல்லாம் தெரியும் என்ற மமதையில் இருந்து விடுபட்டு இவ்வாறான முட்டாள் தனமான யோசனைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இன்று நம் இலங்கை திருநாடு அதாலபாதாளத்தில் விழுவதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட 74 ஆண்டுகளாக ஆண்ட நாட்டு தலைவர்களின் முட்டாள்தனமான முடிவுகளே காரணம் ஆகும்.

எமது நாடு சிறந்த அறிவாளிகளை கொண்ட நாடாகும். எமது நாட்டில் இருந்து உருவான பல்வேறு துறையினை சார்ந்த அறிவாளிகள் பல நாடுகளில் சிறந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அதற்கான சந்தர்ப்பம் அந்நாடுகளில் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் எமது நாட்டில் மக்களால் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டதும் அவர்கள் தமக்கே எல்லாம் தெரியும் என்ற நிலைப்பாட்டை எடுப்பதனால் நாட்டில் உள்ள புத்தி ஜீவிகளின் உதவியை அவர்கள் மதிப்பதூமில்லை செவி சாய்ப்பதுமில்லை.

தற்போது புதிய சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சரும் இதே நிலைப்பாட்டிலேயே மன்னார் தீவு இதுவரை காலமும் பல மில்லியன் ஆண்டுகளாக உலக உயிரினங்களின் கூர்பிற்கு இன்றியமையாததாக இருந்ததை அறியாமல் மன்னார் தீவு கருவாடு காய வைப்பதற்கு மட்டுமே பயன்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டு களியாட்ட மையமாக மன்னார் தீவினை மாற்றுவதற்கு முடிவெடுத்துள்ளார். 

இவ் அமைச்சர் புத்திஜீவிகளின் ஆலோசனைகளை பெற்று மன்னார் தீவினை சூழல் சுற்றுலா தலமாக மாற்றி அங்கிருக்கும் சூழலையும் உயிர்பல்வகைமையும் மன்னார் மக்களின் கலாச்சாரங்களையும் பேணுவதோடு, அம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாடுபட வேண்டும். மன்னர் கருவாடு கூட உலக பிரசித்தி வாய்ந்ததே. இதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை. மன்னார் கருவாட்டினால் இலங்கைக்கு கிடைத்த வெளிநாட்டு அந்நியச் செலாவணியை இவ் அமைச்சர் கணக்கில் எடுப்பதும் சாலச் சிறந்ததே.

கலாநிதி ச. விஜயமோகன்

சிரேஷ்ட விரிவுரையாளர், உயிரியல் துறை,

பிரயோக விஞ்ஞான பீடம், வவுனியா பல்கலைக்கழகம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீன கடலட்டை பண்ணைகளும் வடக்கு மீனவர்களின்...

2022-09-29 11:55:39
news-image

அடிப்படைக் காரணிகளை கையாளாமல் போராட்ட இயக்கத்தை...

2022-09-27 11:20:56
news-image

கலைக்கூடமாகும் ஜனாதிபதி மாளிகை

2022-09-22 13:34:39
news-image

ஜனாதிபதி ஆட்சிமுறையை நியாயப்படுத்தும் ஜே.ஆரின் பேரப்பிள்ளை

2022-09-22 10:39:18
news-image

ஆட்சிமுறை தவறுகளின் விளைவே ஐ.நா. மனித...

2022-09-20 13:39:22
news-image

முட்டாள் தனமான யோசனைகளை தவிருங்கள் !...

2022-09-19 11:00:38
news-image

ஜெனீவாவில் இந்திய நிலைப்பாடு

2022-09-14 16:23:39
news-image

தேசிய, சர்வதேச கண்டனத்துக்குள்ளாகும் அரசாங்கத்தின் அடக்குமுறை

2022-09-13 15:12:48
news-image

மக்கள் ஆணையைக்கொண்ட அரசின் தேவை குறித்து...

2022-09-07 13:21:06
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி பொருளாதார...

2022-09-06 19:09:58
news-image

அவமானங்கள், துன்பங்களால் தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்ட...

2022-09-07 15:08:17
news-image

அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதில் திண்டாடும் இலங்கை...

2022-09-05 15:16:12