(நெவில் அன்தனி)
கடந்த சில வருடங்களாக நாடு எதிர்கொண்ட பிரச்சினைகள், குறைபாடுகளுக்கு மத்தியில் மெய்வல்லுநர்கள், இலங்கை கிரிக்கெட் அணியினர் மற்றும் இலங்கை வலைபந்தாட்ட அணியினர் கொண்டிருந்த அர்ப்பணிப்புத்தன்மையும் அவர்களிடம் உள்ள போராட்டக் குணமுமே அவர்களை வெற்றிபெறச் செய்தது எனவும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கங்கள் வென்ற மெய்வல்லுநர்கள், ஆசிய சம்பியன்களான கிரிக்கெட் அணியினர், வலைபந்தாட்ட அணியினர் நாட்டிற்கு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றனர் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார்.
பொதுநலவாய விளையாட்டு விழாவில் பதக்கங்கள் வென்ற மெய்வல்லுநர்கள், ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் சம்பயினான இலங்கை வலைபந்தாட்ட அணியினர், ஆசிய கிண்ண (இ 20) கிரிக்கெட் போட்டியில் சம்பயினான இலங்கை கிரிக்கெட் அணியினர் ஆகியோரை பாராட்டிக் கௌரவிக்கும் வைபவம் கொழும்பில் நடைபெற்றபோது அதற்கு தலைமை தாங்கி உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் அந்தந்த விளையாட்டுத்துறை சங்கங்கள், இலங்கை கிரிக்கெட் மற்றும் வலைபந்தாட்ட அணிகளின் உத்தியோகபூர்வ அனுசரணையாளர்களான டயலோக ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம் என்பன பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நாட்டில் விளையாட்டு வீரர்கள் எதிர்நோக்கும் குறைபாடுகளை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி, அவை நிவர்த்தி செய்யப்படும் என உறுதி அளித்தார்.
'விளையாட்டுத்துறை அபிவிருத்தி அடையவேண்டுமானால் நாம் முழுமனதுடன் நம்மை அர்ப்பணிக்கவேண்டும். அரைகுறை மனதுடன் ஈடுபட்டால் எதுவும் நிறைவேறாது' எனகூறிய ஜனாதிபதி, அண்மைக் காலத்தில் தோல்விக்கு மத்தியில் மீள் எழுச்சிபெற்று வெற்றியீட்டிய இலங்கை அணிக்கு தனது நன்றியையையும் தெரிவித்தார்.
'இது எமக்கு கிடைத்த மிகவும் பெறுமதிவாய்ந்த வெற்றி ஆகும். எதிர்காலத்தில் இன்னும் பல வெற்றிகளை ஈட்டிக்கொடுப்பீர்கள் என நம்புவதோடு அது எம்மை மேலும் மகிழ்விக்கும்' என்றார் அவர்.
இலங்கை கிரிக்கெட் அணி தேசத்திற்கு நல்லதொரு பாடத்தைக் கற்றுகொடுத்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறினார்.
'ஆப்கானிஸ்தானிடம் அவர்கள் தோல்வி அடைந்த பின்னர் அவர்கள் மனம் தளரவில்லை. அவர்கள் தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டு வெற்றியை ஈட்டினார்கள். இது எம் அனைவருக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். எல்லா பிரச்சினைகளிலிருந்தும் எம்மால் மீண்டு எழ முடியும் என்பதை தசுனும் அவரது அணியினரும் காட்டியுள்ளனர். நாம் இன்று ஆப்கானிஸ்தானைவிட மோசமான நிலையில் இருக்கிறோம். ஆனால், தசுன் மற்றும் அவரது அணியினரைப் போன்று சகல முரண்பாடுகளிலிருந்தும் நாம் மீண்டெழுந்தால் எம்மாலும் வெற்றி முடியும் என நான் நம்பகிறேன். நாம் ஆசியாவில் மட்டுமல்லாமல் முழு உலகிலும் சிறந்தவர்களாக மாற முடியும்' என ஜனாதிபதி தெரிவித்தார்.
நாட்டிலிருந்து எதையாவது பெறவேண்டும் என்பதை மாத்திரம் ஒருவர் எதிர்பார்க்காமல் நாட்டிற்கு திருப்பிக் கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்பதை இந்த அணிகள் (வீரர்கள், வீராங்கனைகள்) எடுத்துக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
'ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில், ஆசிய வலைபந்தாட்ட சம்பயின்ஷிப்பில், பொதுநலவாய விளையாட்டு விழாவில் அவர்கள் பங்குபற்றிய விதத்திற்காக அவர்களுக்கு நன்றி நவில்கிறேன். அவர்கள் எமக்கு பெருமை சேர்த்துக்கொடுத்தனர். எல்லாவற்றையும் விட அவர்கள் நாட்டிற்கு கொடுக்கவேண்டியதை அவர்கள் திருப்பிக்கொடுத்தனர். நம் எல்லோரையும் போன்று நாட்டிலிருந்து சிறந்தவற்றை அவர்கள் பெற்றனர். கல்வி கற்றுக்கொண்டனர். அவர்கள் ஓடி மறையவில்லை. அவர்கள் நம்பிக்கை இழக்கவில்லை. ஒவ்வொருவரும் சென்று போட்டிகளில் பங்குபற்றி பெருமையுடன் திரும்பினர்.
'எனவே, நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டிலிருந்து எதை பெற்றுக்கொள்ள முடியும் என எண்ணக்கூடாது. மாறாக நாட்டிற்கு எதை திருப்பிக்கொடுக்க வேண்டும் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். அதைத்தான் முழு நாடும் கற்றுக்கொள்ள வேண்டும்' என ஜனாதிபதி தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் வேண்டுகோளுக்கு அமைய ஆசிய சம்பியனான வலைபந்தாட்ட அணியில் இடம்பெற்ற வீராங்கனைகள் மற்றும் பயிற்றுநர் குழாத்தினருக்கு 20 இலட்சம் ரூபா வீதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கினார்.
பொதுநலவாய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கு ஒரு கோடி ரூபாவும் வெண்கலப் பதக்கங்கள் வென்றவர்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாவும் வழங்கப்பட்டது. பதக்கங்கள் வென்றவர்களின் பயிற்றுநர்களுக்கும் பணப்பரிசுகள் வழங்கப்பட்டது.
பேர்மிங்ஹாம் 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு ஒரு வெள்ளி உட்பட 4 பதக்கங்கள் கிடைத்தன.
மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான F42 - 44 பிரிவு தட்டெறிதல் நிகழ்ச்சியில் பாலித்த பண்டார (44.20 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
சுகதேகிகளுக்கான மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டி நிகழ்ச்சியில் தெற்காசியாவின் அதிவேக வீரர் யுப்புன் அபேகோன் (10.14 செக்.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். 92 வருட பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு பதக்கம் கிடைத்தது இதுவே முதல் தடவையாகும்.
பெண்களுக்கான 57 கிலோ கிராம் எடைப் பிரிவில் அவுஸ்திரேலியாவின் ஐரின் சைமொனிடிஸ் என்பவரை வீழ்த்தியதன் மூலம் இலங்கையின் நெத்மி பெர்னாண்டோ பொருதொட்டகே, ஆண்களுக்கான 55 கிலோ கிராம் எடைப் பிரிவுக்கான பளுதூக்கல் நிகழ்ச்சியில் டிலன்க இசுறு குமார யோதகே (மொத்தம் 225 கி.கி.) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.
இவர்களை விட ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சிங்கப்பூரை 63 - 53 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட இலங்கை வலைபந்தாட்ட அணியினரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 23 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இலங்கை கிரிக்கெட் அணியினரும் ஒரே நாளில் ஆசியாவின் முடிசூடா இராணிகள் மற்றும் மன்னர்கள் என்பதை நிரூபித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM