(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இனவாதத்திலிருந்து மீண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசிய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். உங்களது ஒத்துழைப்பினை நாம் எதிர்பார்க்கின்றோம் என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.

அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது முன்னைய  காலங்களில் தமிழ் கட்சிகள் புறக்கணிக்கப்பட்டன. எனினும் வரலாற்றில் முதற் தடவையாக தமிழ் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் புதிய அரசியலமைப்பு தயாரிப்பு வேலைத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை 2017ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான ஐந்தாம் நாள் விவாதத்தின் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே    அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் உரையாற்றுகையில்;

சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. அதற்கு முன்னர் இலங்கைக்கு கடன் சுமை இருக்கவில்லை. இனங்களுக்கிடையில் சமாதானம் இருந்தது. ஆனால் தற்போது கடன் சுமை அதிகமாகும். இலங்கையின் வருமானத்தை கொண்டு கடனையோ வட்டியையோ செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலைக்கு நாட்டை முன்பு ஆட்சி செய்தவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

எனவே இவ்வாறான பிரச்சினையை தீர்க்கவே தேசிய அரசாங்கத்தை நிறுவியுள்ளோம். 2016 ஆம் ஆண்டுக்கான நாட்டின் கடன் 1660  டொலர் பில்லியனாகும். அத்துடன் 2017 இல் 2037 பில்லியன் டொலராகும். 2019 இல் 3786 பில்லியன் டொலருமாக கடன்சுமை அதிகரிக்கும் என மத்திய வங்கி அறிக்கையிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி இன்று சபையில் உரை நிகழ்த்தியிருந்தார். இதன்போது மத்திய அதிவேக பாதை குறித்து குறிப்பிட்டுள்ளார். மத்திய அதிவேக பாதை பணிகள் 2003 ஆம் ஆண்டு நாமே ஆரம்பித்தோம். இதற்கு மலேசியாவே முதலீடு செய்தது. எனினும் நாம் திட்டத்தை ஆரம்பித்த கையோடு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

எனினும் 2005 ஆம் ஆண்டு ஆட்சிக்கு  வந்த மஹிந்த ராஜபக் ஷ கண்டி மாவட்ட மக்கள் தனக்கு வாக்களிக்காமைக்கு பழிவாங்கும் முகமாக கண்டி அதிவேக பாதை அபிவிருத்திப் பணிகளை  முன்னெடுக்கவில்லை. ஆனாலும் தென் மாகாண அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளித்தார். எனவே அடுத்த வருடம் கண்டி, இரத்தினபுரி, தம்புள்ளை அதிவேகப் பாதைகள் பணிகளை ஆரம்பிக்கவுள்ளோம். 2019 ஆம் ஆண்டு திறக்கவுள்ளோம்.

இதேவேளை எட்கா ஒப்பந்தம் தொடர்பிலும் மஹிந்த குறிப்பிட்டிருந்தார். முன்னைய ஆட்சியின்போது நாட்டின் எந்தவொரு தொழிற்சாலைகளும் திறக்கப்படவில்லை. ஆனால் நாம் அம்பாந்தோட்டையில்  சீனாவுடன் ஒப்பந்தம் செய்து 15,000 ஏக்கர் காணிகளில் முதலீடுகளை ஆரம்பிக்கவுள்ளோம். இதன் மூலம் சீனாவின் உற்பத்திகள் இலங்கையின் ஊடாக இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும். இவ்வாறு ஏற்றுமதி செய்யும் போது தீர்வை வரிக்கான சலுகை பெற்றுக்கொள்ளவே எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திட உள்ளோம்.

முன்னாள் ஜனாதிபதி அம்பாந்தோட்டையில்  15,000 ஏக்கர் காணியில்  சிறிய முதலீட்டு வலயப் பணிகளை முன்னெடுப்பதில்   தற்போதே இடையூறு விளைவிப்பதற்கு தயாராக உள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வரலாற்றில் இடம்பிடித்தவர். அவரின் ஆதரவு எமக்கு அவசியம். எக்காரணம் கொண்டும் அம்பாந்தோட்டையில்   15,000 ஏக்கர் காணிக்கான உரித்துரிமையை வழங்க மாட்டோம். சீனாவிற்கு குத்தகை அடிப்படையிலேயே வழங்க உள்ளோம்.   எனவே தேசிய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு மஹிந்த ராஜபக் ஷவின் ஆசிர்வாதம் எமக்கு வேண்டும் என்றார்.