(நா.தனுஜா)
இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பில் பெருமளவிற்குத் திருப்தியடையமுடியாது எனவும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தப்படாமை முக்கிய குறைபாடு எனவும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், அதற்கு முன்னதாகவே இம்முறை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வலியுறுத்தவேண்டுமெனவும் அதற்கேற்றவாறான மிகவும் வலுவான பிரேரணையொன்றை பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் கொண்டுவரவேண்டுமென்றும் பெரும்பாலான தமிழ்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.
அந்தவகையில் இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை வரைவு சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ள நிலையில், அதன் உள்ளடக்கம் திருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளதா என்று வினவியபோது அதற்கு தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் பின்வருமாறு பதிலளித்தனர்.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் கூறுகையில்,
இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள பிரேரணையில் நாம் எதிர்பார்த்ததை விடக் குறைந்தளவிலான விடயங்களே உள்ளடக்கப்பட்டுள்ளன. மிகமுக்கியமாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தப்படுமென எதிர்பார்த்தபோதிலும், அவ்விடயம் உள்ளடக்கப்படவில்லை. அதேபோன்று அரசியல் காரணங்களுக்காகவும் வெறுமனே வாக்குமூலங்களின் அடிப்படையிலும் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தப்படும் என்றும், பயங்கரவாத்தடைச்சட்டம், காணி அபகரிப்பு மற்றும் இராணுவயமாக்கல் ஆகிய விடயங்கள் தொடர்பில் வலுவான கருத்துக்கள் முன்வைக்கப்படும் என்றும் எதிர்பார்த்தோம். இருப்பினும் அத்தகைய கருத்துக்கள் உள்ளடக்கப்படவில்லை.
இப்பிரேரணையில் பல்வேறு விடயங்கள் எமக்குச் சார்பானவையாக அமையாதபோதிலும், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் புதிதாகக் கொண்டுவரப்படும் ஒவ்வொரு பிரேரணைகளும் சற்று முன்னேற்றகரமானவையாகவே காணப்படுகின்றன. எனவே இலங்கை தொடர்பில் எதிர்வருங்காலங்களில் கொண்டுவரப்படக்கூடிய பிரேரணைகள் மேலும் காத்திரமான விடயங்களை உள்ளடக்கிய வலுவான பிரேரணைகளாக அமையவேண்டியது அவசியமாகும் என்று வலியுறுத்தினார்.
அதேவேளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் உள்ளடங்கும் தமிழீழ விடுதலை அமைப்பின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பின்வருமாறு குறிப்பிட்டார்:
இப்பிரேரணையில் பயங்கரவாத்தடைச்சட்டம் உள்ளிட்ட சில விடயங்களில் நாம் எதிர்பார்த்ததைப்போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அவற்றை அரசாங்கம் உரியவாறு நடைமுறைப்படுத்துமா என்பதும் அல்லது இப்பிரேரணையில் உள்ள விடயங்களை அரசாங்கம் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளுமா என்பதும் சந்தேகத்திற்குரிய விடயங்களாகவே காணப்படுகின்றன. எமது மக்கள் நீதியைப்பெற்றுக்கொள்ளும் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின்மீதே நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். எனவே அதற்கேற்றவாறு இணையனுசரணை நாடுகள் செயற்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. குறிப்பாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் ஏனைய உறுப்புநாடுகளும் வலியுறுத்தவேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்தார்.
மேலும் பல்வேறு விவகாரங்களிலும் ஏனைய தமிழ்க்கட்சிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்திவரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இவ்விடயத்தில் எத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது என்பது குறித்துத் தெளிவுபடுத்திய அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன், இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணையின் உள்ளடக்கம் குறித்துத் தம்மால் திருப்தியடையமுடியாது என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM