அமைச்சர் பதவிகளினால் சாதித்தது என்ன ?

By Digital Desk 5

17 Sep, 2022 | 12:03 PM
image

எம்.எஸ்.தீன் 

ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள், ஊழல் மோசடிகள், சர்வதேசத்துடன் இணங்கிப் போகாத குருட்டுவாதங்கள், சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள், பெரும்பான்மை இனத்தை மையப்படுத்திய அரசியல் கொள்கைகள் போன்ற பல்வேறு காரணிகளின் ஆதிக்கத்தினால் இலங்கை என்றுமில்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.

அதிலிருந்து விடுபடுவதற்கு சர்வதேச நாடுகளினதும், நிதி அமைப்புக்களினதும் நிதி உதவியை வேண்டி நிற்கின்ற சூழலில், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகளுக்காக மடிப்பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதனையும், அவர்களின் ‘கூஜா’ தூக்கிகள் சமூக ஊடகங்களில் மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதனையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்களும், அக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும், பேரினவாதக் கட்சிகளின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்கள். 

ஆனால், அவர்கள் வகித்த அமைச்சர் பதவிகளினால் சமூகத்திற்கு பெரிதாக எதனையும் சாதிக்கவில்லை. முஸ்லிம்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவில்லை. அமைச்சர் பதவிகளின் ஊடாக தங்களை அலங்கரித்துக் கொண்டார்களே அன்றி வேறு எதனையும் செய்யவில்லை. 

முஸ்லிம் அரசியலில் சாதாரணமானவர்களாக அடியெடுத்து தற்போது பெற்றுள்ள அந்தஸ்துக்கு சமூகத்தினையே அடமானம் வைத்துள்ளார்கள்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது அவரைப் புகழுந்து பேசி அமைச்சர் பதவிகளுக்காகவும், வேறு சலுகைகளுக்காகவும், சம்பாதித்துக்கொள்ள வேண்டுமென்ற கொள்ளை ஆசையாலும் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சியையும், தலைவர்களையும் புறக்கணித்து செயற்பட்டார்கள். ஈற்றில் சட்டிகையைச் சுட்ட நிலையாக எதனையும் பேசிக் கொள்ளவும் முடியாததொரு இறுக்கமான நிலைக்குள் மாட்டிக்கொண்டார்கள். 

இப்போது முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியோடும், தலைவரோடும் பயணிப்பதற்கு தயாராக இருப்பதாக பாசாங்கு காட்டிக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தோடு இணைந்து கொள்வதற்கு எப்போது சந்தர்ப்பம் வருமென்று காத்துக் கொண்டிருக்கின்றார்கள். 

இதனால்தான் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போதைய ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளையும், பொருட்களின் விலையேற்றங்களையும் கண்டிக்காது ரணில் விக்கிரமசிங்கவுக்கு நல்ல பிள்ளைகள் போன்று வேசமிட்டு நாடகமாடிக் கொண்டிருக்கின்றார்கள். 

ரவூப் ஹக்கீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது செயல்கள் குறித்து கட்சியிடமும், தலைமையிடமும் மன்னிப்புக் கோரினார்கள். அதனால் மீண்டும் கட்சியோடு இணைத்துக் கொண்டோம் என்று சொல்வதற்குரிய நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றார். 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சர் பதவிகளும், இராஜாங்க அமைச்சர் பதவிகளும் வழங்கப்படுகின்றன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக கூறிக்கொண்டிருந்தார்கள். ஆயினும், இப்பத்தி எழுதும் வரையில் அவருக்கு எந்தவொரு அமைச்சர் பதவியும் வழங்கப்படவில்லை. 

ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளையாக மாறுவதற்காகவும், சுயதேவையை நிறைவு செய்வதற்காகவும் ஆட்சியாளர்களிடம் ஒட்டிக்கொண்ட முஷாரப்பினால் இராஜாங்க அமைச்சர் பதவியை பெற முடியாவிட்டால் அது அவரின் இயலாமை என்பதே உண்மையாகும். அதேவேளை, அவருக்கு எந்தவொரு அமைச்சர் பதவியும் வழங்கப்படாது என்று உறுதியாக எவராலும் கூறவும் முடியாது. 

கடந்த காலங்களில் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லோரும் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்திற்கு நிபந்தனையில்லாது ஆதரவு வழங்கினார்கள். முஸ்லிம்களுக்கு எதிரான சட்ட மூலங்களுக்கு கூட கையுயர்த்தினார்கள். 

மஹிந்தராஜபக்ஷவின் ஆட்சியிலும், மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியிலும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர் பதவிகளைப் பெற்றிருந்தார்கள். இவர்கள் அமைச்சர்களாக இருந்தபோதே முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டனர். முஸ்லிம்களின் சொத்துக்களும், உயிர்களும் அழிக்கப்பட்டன.

முஸ்லிம்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்களை அரசாங்கம் கைது செய்யவில்லை. அவர்கள் சுதந்திரமாக இருந்தார்கள். முஸ்லிம் விரோத செயற்பாடுகளை தொடர்ந்தும் செய்து கொண்டிருந்தார்கள். முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம்களின் மீது தாக்குதல்களை மேற்கொண்டவர்களை கைது செய்யுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவில்லை.

முஸ்லிம்கள் இழந்த பூர்வீகக் காணிகளை மீட்க முடியவில்லை. ஆயினும் பேரினவாதிகளின் கால்களில் உள்ள தூசுகளை தட்டித்துக் கொண்டிருந்தார்கள். இன்றும் அதனை செய்தாவது அமைச்சர் பதவியை பெற்றுக் கொள்வதற்கு மண்டிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். 

அமைச்சர் பதவிகளின் மூலமாக எதனையும் செய்து கொள்வதற்கு முடியாத அளவுக்கு நிதி நெருக்கடி உள்ள நிலையிலேயே அமைச்சர் பதவிகளுக்காக போராடிக்கொண்டிருக்கின்றார்கள். 

இந்த நாட்டில் முஸ்லிம்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த பிரச்சினைகள் எதனையும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும், முஸ்லிம் கட்சிகளும் சர்வதேசமயப்படுத்தவில்லை. தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு தமிழ் அரசியல் கட்சிகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் ஐ.நா மற்றும் சர்வதேச அமைப்புக்கள் பலவும் அழைப்புவிடுத்து பேசிக் கொண்டிருக்கின்றன. 

ஆனால், முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கோ, முஸ்லிம் சமூக அமைப்புக்களுக்கோ ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புக்கள் எந்தவொரு அழைப்பையும் விடுப்பதில்லை. இதற்கு பிரதான காரணம் இவர்கள் முஸ்லிம்களின் பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்தாது விட்டதேயாகும். 

முஸ்லிம் கட்சிகளையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒருமுகப்படுத்தி வழிப்படுத்துவதற்கு எந்தவொரு முஸ்லிம் சிவில் அமைப்பும் முன்வருவதாகயில்லை. குறிப்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைக்கு பாரிய பொறுப்புக்கள் உள்ளன. 

முஸ்லிம் அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ஆனால், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை எதனையும்  கண்டு கொள்ளாது இருந்து கொண்டிருக்கின்றது. முஸ்லிம் கட்சிகள் எதுவாக இருந்தாலும், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் யாராக இருந்தாலும் சமூகக் கடமைகளை புறக்கணித்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 

இதனால்தான் முஸ்லிம்களின் மீது பல திசைகளிலும் எதிர்வினைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு சமூகத்தில் பலதுறைகளிலும் தலைவர்கள் உள்ளார்கள். அவர்கள் தங்களின் கடமைகளை சரியாக செய்யாதுவிட்டால் சமூகத்தை பாதுகாப்பது கடினமான காரியமாகிவிடும். ஆதலால், முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவிகளின் பின்னால் அலைந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. 

பதவிகள் சமூகத்திற்காகவே என்று இருக்க வேண்டும். சமூகத்தின் பிரச்சினைகளுக்கு அமைச்சர் பதவிகளின் மூலமாக தீர்வு காண முடியாது என்பதே கடந்த கால அனுபவமாகும். ஆதலால், ஆட்சியாளர்களுக்கு ஆதரவு வழங்குவதாயின் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டுமென்று நிபந்தனை விதிக்க வேண்டும். நிபந்தனைகளை ஆட்சியாளர்கள் நிறைவேற்றாது போனால் அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவை மீளப்பெற வேண்டும். 

இத்தகைய நிலைமைகளை உருவாக்குவதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் ஏனைய சமுக அமைப்புக்களும் முன்வர வேண்டும். அரசியல்வாதிகளை அவர்களின் சுயவிருப்பத்திற்கு ஏற்றவாறு செயற்பட அனுமதிப்பதும், எதனையும் கண்டு கொள்ளாது பார்த்துக் கொண்டிருப்பதும் சமூகத்திற்கு செய்யும் பாரிய துரோகச் செயல் என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். 

முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை அரசியல்வாதிகளை விடவும் கூடுதல் அக்கறைகளை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை காட்டுதல் வேண்டும். அரசியல்வாதிகளும், உலமாக்களும் தங்களின் சுயதேவைக்காக சமூகத்தை பயன்படுத்திக் கொண்டதனால்தான் முஸ்லிம்களின் அரசியல் பலமும், சமூக ஒற்றுமையும் சீரழிந்து காணப்படுகின்றது என்ற கசப்பான உண்மையை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்