ஏமாற்றிய பூச்சிய வரைவு

By Digital Desk 5

17 Sep, 2022 | 10:57 AM
image

சுபத்ரா

“இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை நிறைவேற்றப் போவதில்லை. உள்ளகப் பொறிமுறைகளில் நம்பிக்கையுமில்லை என்று, பாதிக்கப்பட்டவர்கள் தெளிவாக கூறியிருப்பிலும், மாற்று வழிகளை யோசிக்கின்ற நிலையில் கூட அனுசரணை நாடுகள் இல்லை என்பதை பூச்சிய வரைவு காட்டுகிறது”

 “புதிய பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை அல்லது மாற்று தெரிவுகளை, அனுசரணை நாடுகள், 2024 செப் டெம்பர் அமர்விலேயே முன்வைக்கும் நிலை ஏற்பட்டுள்ள மையால் அதுவரை தற்போதைய நிலைமைகளில் எந்த மாற்றமும் வரப்போவதில்ல” 

ஜெனிவாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் சுற்றோட்டத்துக்காக விடப்பட்ட தீர்மானத்தின் பூச்சிய வரைவு தற்போது கசிந்துள்ளது.

இந்தப் பூச்சிய வரைவு, இறுதியானதோ, மாற்றங்களுக்கு உட்படாத ஒன்றோ அல்ல. ஆனால் தீர்மானத்தின் அடிப்படையான ஒரு கட்டமைப்பாக இருக்கப் போகிறது.

பல்வேறு தரப்புகளிடமும் பெறப்பட்ட ஆலோசனைகள், பரிந்துரைகளை அடைப்படையாக கொண்ட ஒருமுதல் நிலை ஆவணமாக இதனைக் குறிப்பிடலாம்.

இந்த பூச்சிய வரைவின் உள்ளடக்கம், 13ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த போரில் பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஏமாற்றமளிக்கும் ஒன்றாகவே காணப்படுகிறது.

ஏனென்றால், இதுவரை நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானங்களை விட முன்னேற்றகரமான எந்த அம்சங்களும், இந்த பூச்சிய வரைவில் காணப்படவில்லை.

சில விடயங்களில் முன்னைய தீர்மானங்களில் இருந்து பின்நோக்கிச் செல்கிறது. இன்னும் சில விடயங்களில், கடந்த கால நிலைப்பாடுகளையே வலியுறுத்துகிறது.

இலங்கையில் மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான அணுகுமுறை தொடர்ச்சியாக தோல்வியுற்று வருகின்ற போதும், அதனைக் கடந்து செல்வதற்கான எந்த உத்தி மாற்றங்களையும், இந்த பூச்சிய வரைவு எடுத்துக் காட்டவில்லை.

2012இல் நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானத்தில் இருந்து கடைசியாக நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் வரையான எல்லா தீர்மானங்களிலும், உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டு வந்திருக்கிறது.

இந்த முறையும், உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்தும் அந்த அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் கடந்த கால அணுகுமுறைகள் தோல்வியடைந்துள்ளது குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

காணாமல் போனோருக்கான பணியகம், இழப்பீட்டுக்கான பணியகம் போன்ற நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகள், பெரும் நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட போதும், அவை வினைத்திறனுடன் செயற்படவுமில்லை, அதற்கு அரசாங்கம் அனுமதிக்கவுமில்லை.

இவ்வாறான நிலையில் புதிய தீர்மானம், அதனை வலுப்படுத்துவதற்கு அழைப்பதில் கவனம் செலுத்தும் அளவுக்கு, மாற்று வழிகளை யோசிக்கவில்லை.

இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை நிறைவேற்றப் போவதில்லை. உள்ளகப் பொறிமுறைகளில் நம்பிக்கையுமில்லை என்று, பாதிக்கப்பட்டவர்கள் தெளிவாக கூறியிருப்பிலும், மாற்று வழிகளை யோசிக்கின்ற நிலையில் கூட அனுசரணை நாடுகள் இல்லை என்பதையே, பூச்சிய வரைவு எடுத்துக் காட்டுகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் உயிர்ஸ்தானிகர் பணியகத்தின் அண்மைய பல அறிக்கைகளில், மீறல்கள், குற்றங்களை இழைத்தவர்கள் என உறுதி செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ், நாடுகள் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

தொடர்ச்சியாக பலமுறை இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அது இப்போது வரை கவனத்தில் கொள்ளப்படவில்லை.

அதேவேளை, பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழர்கள், இலங்கையில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் செயல்முறைகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

சர்வதேச விசாரணை ஒன்று தான் தங்களுக்கு நீதியைத் தரும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையினால் நேரடியாக இந்த விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்த முடியாது.

ஐ.நா. பாதுகாப்புக் சபையின் ஊடாகத் தான் அதனை செய்ய வேண்டும். அவ்வாறு ஐ.நா. பாதுகாப்புச் சபையிடம் பாரப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கைகளையும், புதிய தீர்மான வரைவு முன்மொழியவில்லை.

இது பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கின்ற ஒரு விடயம். 46/1 தீர்மானத்தின் ஊடாக, மீறல்கள் குறித்த ஆதாரங்களைத் திரட்டி, பகுப்பாய்வு செய்து, பாதுகாக்கும் பொறிமுறை கடந்த மே மாதத்தில் இருந்தே, முழு அளவில் செயற்படத் தொடங்கியிருக்கிறது.

இதற்குப் போதுமான நிதி ஆதாரங்களை திரட்டுவது மற்றும், நிபுணர்களை நியமிப்பதில் சிக்கல்களை எதிர்கொண்டதாக, ஐ.நா. மனித உரிமைகள் உயிர்ஸ்தானிகர் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அந்தச் செயல்முறைகள் முடிவடையும் வரையில், புதிதாக எந்த நகர்வுகளையும் பொறுப்புக்கூறல் பொறிமுறை சார்ந்து அனுசரணை நாடுகள் முன்னெடுக்கப் போவதில்லை என்பதை பூச்சிய வரைவில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

ஆதாரங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் சுயாதீனக் குழுவின் செயற்பாடுகள் நிறைவடைந்த பின்னர்,  அவற்றை அடிப்படையாக கொண்டு சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து அனுசரணை நாடுகள் கவனம் செலுத்தக் கூடும்.

ஏற்கனவே மியான்மாரில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கின்ற ஐ.நா. பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

அந்த குழுவுக்கு இப்போது பெருமளவிலான ஆதாரங்கள் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. முகநூல் நிறுவனம் மாத்திரம், ஒரு மில்லினுக்கும் அதிகமான ஆதாரங்களை திரட்டிக் கொடுத்திருக்கிறது.

ஆனால் இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் குறித்த அவ்வாறான ஆதாரங்களை முகநூல் நிறுவனம் இதுவரை திரட்டிக் கொடுத்ததாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை.

திரட்டப்படும் ஆதாரங்கள், கண்மூடித்தனமாகப் பயன்படுத்தப்படாது. அவை பகுப்பாய்வு செய்யப்பட்டு, உண்மையானவை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பாதுகாக்கப்படும்.

ஆதாரங்களை திரட்டும் பணியகத்தை வலுப்படுத்துகிறோம் என, போலியான ஆதாரங்களை சமர்ப்பிப்பது அல்லது அதன் நேரத்தை வீணடிக்க கூடிய ஆதாரங்களை முன்வைப்பது என்பன, அதன் உண்மையான நோக்கத்தை பின்நோக்கித் தள்ளிச் செல்லும்.

ஆதாரங்களை சேகரித்துப் பாதுகாக்கும் ஐ.நா. பொறிமுறையின் பணிகள் நிறைவடைந்த பின்னரே, இந்த விவகாரத்தை எங்கு கொண்டு செல்வது என்று உறுப்பு நாடுகள் தீர்மானிக்கவுள்ளன.

எனவே, ஆதாரங்களைத் திரட்டும் பணிகள் இழுத்தடிகப்படுமானால், பொறுப்புக்கூறல் சார்ந்த சர்வதேச பொறிமுறைகளும் இழுத்தடிக்கப்படும் நிலை ஏற்படலாம்.

அதேவேளை, இலங்கை ஜெனிவாவின் கண்காணிப்பு வளையத்துக்கு கொண்டு வரப்பட்ட போது., உண்மை, நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியனவே, அடிப்படையாக இருந்தது.

போர்க்கால மீறல்களில் பாதிக்கப்பட்டவர்களை அது மையப்படுத்தியிருந்தது.

காலப்போக்கில் ராஜபக்ஷவினரின் எதேச்சாதிகாரத்தை முன்னிலைப்படுத்துவது தொடக்கம் இப்போதைய பொருளாதாரக் குற்றங்களை சுட்டிக்காட்டி அவற்றுக்கு நீதி கோருவது வரை- ஜெனிவா தீர்மானங்களின் அடிப்படை இலக்குகள் மாறியிருக்கின்றன.

இதனால், ஆரம்பத்தில் பொறுப்புக்கூறல் சார்ந்து இருந்து வந்த கவனம் இப்போது குறையத் தொடங்கியிருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கையில், பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு உறுப்பு நாடுகள் தொழில்நுட்ப ஆதரவு உள்ளிட்ட  உதவிகளை வழங்க வேண்டும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அது அரசாங்கத்துக்கு சினத்தை ஏற்படுத்தியது.

பொருளாதார நெருக்கடி சார்ந்த விடயங்களுக்குள் மூக்கை நுழைப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பணியகத்துக்கு எந்த ஆணையும் கிடையாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய அன்றே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது கசிய விடப்பட்டுள்ள பூச்சிய வரைவானது, பொருளாதார நெருக்கடி  குறித்த நிலைமைகளை கண்காணிப்பது மற்றும் அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை கண்காணிப்பதில் ஈடுபடுமாறு, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பணியகத்துக்கு ஆணை வழங்கும் வகையில் அமைந்திருக்கிறது.

தீர்மான வரைவின் இறுதிப் பந்தி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் மற்றும், பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் மனித உரிமைகள் தாக்கம், உட்பட இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமையை கண்காணித்து அறிக்கையிடுமாறு, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பணியகத்தை கோருவதாக உள்ளது.

அத்துடன், பொறுப்புக்கூறல் சார்ந்த அடுத்த நடவடிக்கை அல்லது தெரிவுகளை ஆராயும் வாய்ப்பையும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கும் வகையில் இந்த வரைவு அமைந்திருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது (2023 ஜூன்) மற்றும் 55ஆவது (2024 பெப்ரவரி) அமர்வுகளில் வாய்மொழி அறிக்கைகளை முன்வைக்குமாறும்,

54ஆவது அமர்வில் ( 2023 செப் டெம்பர்) எழுத்துபூர்வ அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், 57 ஆவது அமர்வில் (2024 செப்டெம்பர்) பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான மேலதிக தெரிவுகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கையை சமர்ப்பித்து, அவை குறித்து கலந்துரையாட வேண்டும் என்றும் கோரப்பட்டிருக்கிறது.

இதற்கமைய, புதிய பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை அல்லது மாற்று தெரிவுகளை, அனுசரணை நாடுகள், 2024 செப் டெம்பர் அமர்விலேயே முன்வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதுவரை தற்போதைய நிலைமைகளில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை என்பதையே பூச்சிய வரைவு சுட்டிக்காட்டுகிறது.

பூச்சிய வரைவில் மாற்றங்கள் செய்யப்பட்டு, பொறுப்புக்கூறலை விரைவுபடுத்தும் உள்ளடக்கங்கள் சேர்க்கப்படாது போனால், அடுத்த இரண்டு வருடங்கள்- அதாவது ரணில் விக்கிரமசிங்க தனது ஆட்சிக்காலத்தில் ஜெனிவா பற்றிய பாரிய அழுத்தங்கள் ஏதுமின்றி இலகுவாக கடந்து சென்று விடுவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்