ராஜபக்ஷவினரை காப்பாற்றும் முயற்சி

By Vishnu

16 Sep, 2022 | 09:45 PM
image

என்.கண்ணன்

ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம், சமர்ப்பித்திருந்த விரிவான அறிக்கையில், பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான பரிந்துரைகளுக்கு இலங்கை அரசாங்கம் கடுமையான பதிலடியைக் கொடுத்திருக்கிறது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் பணியகத்தின் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் பதிலை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வெளியிட்டிருந்தார்.

பேரவையில் அவர் உரையாற்றிய போது, இரண்டு முக்கியமான விடயங்களை முன்வைத்தார்.

ஒன்று, மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம் இலங்கை மக்களின் இறைமையையும், ஐ.நா  பிரகடனத்தையும் மீறும் வகையில் அமைந்திருப்பதால், அந்த தீர்மானத்தின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும், அது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால்  முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளையும் முற்றாக நிராகரிப்பதாக கூறியிருந்தார்.

இதன் மூலம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளை அரசாங்கம் முற்றாக நிராகரித்திருக்கிறது.

அடுத்து, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள நாட்டை முன்னுதாரணமற்ற வகையில், நெருக்கடிக்குள் தள்ளிய பொருளாதாரக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்  என்ற பரிந்துரைக்கு கடுமையான பிரதிபலிப்பை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் அலி சப்ரி.

பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருக்கும் விடயங்கள் தெளிவற்ற சொற்பதங்களைக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள அலி சப்ரி, இந்த விடயங்களை முன்வைப்பது, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகத்தின் ஆணைக்கு அப்பாற்பட்ட விடயம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இது ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகத்தின் வேலையில்லை, அவர்கள் வேண்டாத வேலையில் இறங்கியுள்ளனர் என்று மறைமுகமாக சுட்டிக்காட்டியிருக்கிறார்.

ஜெனிவா தீர்மானங்களின் மூலம், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் அல்லது விசாரணைப் பொறிமுறைகள் தொடர்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும், இவ்வாறு தான்- உயர்ஸ்தானிகர் பணியகம் ஆணைக்கு அப்பால் செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வந்திருக்கிறது அரசாங்கம்.

பொருளாதாரக் குற்றங்கள் தொடர்பான விடயத்துக்கு அரசாங்கம் ஏன் அதிகளவில் முக்கியத்துவம் அளித்து பதில் கொடுத்திருக்கிறது என்ற கேள்வி இதனால் எழுகிறது.

நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இந்தப் பொருளாதாரக் குற்றங்கள் தான், நாட்டில் பெரும் பஞ்சத்துக்கும், மக்கள் உணவுக்கும், எரிபொருளுக்கும் வீதியில் அலைகின்ற நிலைக்கும் காரணமானது.

அரசியல் குழப்பங்களுக்கும், மக்கள் போராட்டங்களுக்கும் வழிவகுத்தது. அதன் தொடர்ச்சியாக நாட்டில் கண்மூடித்தனமான கைதுகள், மனித உரிமை மீறல்களுக்கும் காரணமானது.

பொருளாதாரக் குற்றங்கள் தடுக்கப்பட்டிருந்தால், இந்த தொடர்ச்சியான நிகழ்வுகள் நிகழ்ந்திருக்காது என்ற அடிப்படையில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பொருளாதாரக் குற்றவாளிகளை இலக்கு வைத்திருந்தார்.

ஆனால் இலங்கை அரசாங்கம் அது அவருக்கு இல்லாத வேலை என்று பதில் கொடுத்திருக்கிறது. பொருளாதாரக் குற்றங்களை அரசாங்கம் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது. 

ஆனால் பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் பணியகம் கூறுகின்ற பரிந்துரைகளைத் தான் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை, அதனை ஏற்றுக் கொள்ளவும் போவதில்லை.

அங்கு தான் இருக்கிறது முக்கியமான பிரச்சினை. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமானவர்கள் என குற்றம்சாட்டப்படுபவர்கள், ராஜபக்ஷவினரும், அவர்களுக்கு நெருக்கமான அதிகாரிகளும் தான்.

ஜனாதிபதியாக அதிகாரத்தில் இருந்த கோட்டாபய ராஜபக்ஷ, நிதியமைச்சராக இருந்த பஷில் ராஜபக்ஷ, பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன், மத்திய வங்கி ஆளுநராக இருந்த அஜித் நிவாட் கப்ரால், நிதியமைச்சின் செயலாளராக இருந்த பி.பி.ஜயசுதந்தர உள்ளிட்ட அதிகாரிகளும் பொறுப்புக்கூறப்பட வேண்டியவர்களின் வரிசையில் இருக்கின்றனர்.

இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு, புதிய தீர்மான வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அதில், பொருளாதாரக் குற்றவாளிகளுக்கு எதிராக உள்நாட்டு மற்றும் உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரும் விடயமும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பொருளாதாரக் குற்றங்களை இழைத்தவர்கள் எனப் கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெறும் வாய்ப்புகள் உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் நடவடிக்கையை எடுப்பதற்கு 7 நாடுகள இணங்கியிருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பஷில் ராஜபக்ஷ அமெரிக்க குடியுரிமை கொண்டவர் என்பதால், அமெரிக்காவின் சமஷ்டி அல்லது மாநில சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா என்பது குறித்தும் ஆராயப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான நிலையில், தான் அரசாங்கம் பொருளாதாரக் குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டை முன்வைப்பது ஜெனிவாவின் ஆணைக்கு அப்பாற்பட்டது என்ற பதிலைக் கொடுத்திருக்கிறது.

இந்தப் பதிலைக் கொடுத்திருப்பவர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி. அவர் இப்போது அணிந்திருப்பது வெளிவிவகார அமைச்சர் என்ற முகமூடியை என்றாலும், முன்னர் அவர், ராஜபக்ஷவினரின், சட்டத்தரணி. அவர்களுக்கு நெருக்கமான சட்ட ஆலோசகர் என்பது கவனிக்க வேண்டிய விடயம்.

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட மோசடி, ஊழல் வழக்குகளை நீதிமன்றங்களில் எதிர்கொண்டவர் அலி சப்ரி.

அந்த தொடர்புகளின் மூலம் தான் அவர் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்பட்டார். அலி சப்ரி நீதி அமைச்சராக இருந்து கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டங்களை அடுத்துப் பதவி விலகியிருந்தார். 

ஆனால் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், அவருக்கு வெளிவிவகார அமைச்சர் பதவி கொடுக்கப்பட்ட போதே, அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால், வெளிவிவகாரங்களுடன் தொடர்பில்லாத அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

கோட்டாபய ராஜபக்ஷவை தென்கிழக்காசிய நாடுகளில் பாதுகாப்பாக தங்கவைப்பதற்கு வெளிவிவகார அமைச்சின் ஊடாக முயற்சிகளை மேற்கொண்டிருந்த அலி சப்ரி, இப்போது. ஜெனிவாவில் அதே வெளிவிவகார அமைச்சின் ஊடாக, ராஜபக்ஷவினரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

13 ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த போரில் இடம்பெற்ற மீறல்களுக்கு ராஜபக்ஷவினரும் பொறுப்புக்கூற வேண்டியவர்கள்.

ஆனால், அவ்வாறு அவர்கள் மீது நேரடியாக குற்றம்சாட்டி தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு இன்று வரை எந்த நடவடிக்கைகளையும் உலக நாடுகள் எடுக்கவில்லை.

ஏனென்றால், போரில் பெற்ற வெற்றியைக் கொண்டு, ராஜபக்ஷவினர், சிங்கள மக்களின் ‘ஹீரோக்களாக’ மாறியிருந்தனர்.

அவ்வாறான நிலையில் ராஜபக்ஷவினரை குறிவைத்து நடவடிக்கை எடுக்கும் போது, அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் மேலும் பலமடைவார்கள் என்ற தயக்கம் பல நாடுகளிடம் காணப்பட்டது.

ஆனால் இப்போது அவர்களாகவே சென்று குடுமியைக் கொடுத்திருக்கிறார்கள். பொருளாதாரக் குற்றங்கள் என்பது இலங்கை முழுவதுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய ஒரு அனர்த்தம். 

இறுதிக்கட்டப் போர் தமிழர்களை மட்டும், அகதிகளாக அலைய விட்டு, நடுத்தெருவுக்கு கொண்டு வந்தது. ஆனால், பொருளாதாரக் குற்றங்கள், சிங்கள, தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி எல்லா மக்களையும் நடுத்தெருக்கு கொண்டு வந்து நிறுத்தியது.

ராஜபக்ஷவினருக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களிலும்  சிங்கள மக்கள் தான் அதிகம்.

எனவே, பொருளாதாரக் குற்றங்களை வைத்து ராஜபக்ஷவினரை குறிவைக்கும் போது, அவர்களைக் காப்பாற்ற இனவாதக் கவசத்தை பயன்படுத்த முடியாது. ஏற்கனவே சிங்கள பௌத்த பாதுகாவலர்கள் என்ற அவர்களின் கவசமும் உடைக்கப்பட்டு விட்டது.

இவ்வாறான நிலையில் தான் சர்வதேசம் அவர்களை குறிவைக்கிறது என்பதை உணர்ந்து, அலி சப்ரி தனது நீதிமன்ற வாத திறமையை ஐ.நாவில் காட்ட முயன்றிருக்கிறார்.

இதன் மூலம் அவர் ராஜபக்ஷவினருக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனாலும் அவர் உள்ளூர் நீதிமன்றங்களில் ராஜபக்ஷவினரைக் காப்பாற்றியது போல ஜெனிவாவில் காப்பாற்ற முடியுமா என்பது சந்தேகம் தான். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right