வெந்து தணிந்தது காடு = திரை விமர்சனம்

Published By: Digital Desk 5

16 Sep, 2022 | 01:57 PM
image

தயாரிப்பு : வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்

நடிகர்கள் : சிலம்பரசன், சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார், பவா செல்லத்துரை மற்றும் பலர்

இயக்கம் : கௌதம் வாசுதேவ் மேனன்

மதிப்பீடு : 3 / 5


சிலம்பரசன் - கெளதம் வாசுதேவ் மேனன் - ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா‘, ‘அச்சம் என்பது மடமையடா’ என இரண்டு படைப்புகள் வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதனால் இவர்களின் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படைப்பான ‘வெந்து தணிந்தது காடு’ எனும் திரைப்படத்திற்கும் ரசிகர்களிடத்திலும், திரையுலகினரிடத்திலும், பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்பை ‘வெந்து தணிந்தது காடு’ நிறைவு செய்ததா? இல்லையா? என்பதை இனி காண்போம்.

தமிழகத்தின் தென் பகுதியில் வாழ்வாதாரம் இல்லாத ஒரு சிற்றூரில், படித்து வேலையில்லா பட்டதாரியாக இருக்கும் முத்துவீரன் எனும் சிலம்பரசன், தரிசு நிலத்தில் விளைந்திருக்கும் சவுக்கு மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். எதிர்பாராமல் நடந்த ஒரு சிறிய தீ விபத்தில் அதன் உரிமையாளர், விபத்திற்கு காரணம் முத்து தான் என அவர் மீது குற்றம் சுமத்தி நிவாரணம் கேட்க, முத்துவோ கோபத்தின் எல்லைக்குச் சென்று தகாத வார்த்தைகளை பயன்படுத்துகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் ராதிகா, ‘நீ தொடர்ந்து இங்கு இருப்பது சரியல்ல. மும்பைக்கு சென்று ஏதேனும் செய்து முன்னுக்கு வா’ என உபதேசிப்பதுடன், சேர்மதுரை எனும் அண்ணாச்சியிடம் உதவி கேட்கிறார். அவரும் முத்துவுக்கு உதவுகிறார். ஆனால் அடுத்த நாளே அண்ணாச்சி தற்கொலை செய்து கொள்கிறார். அவர் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி என்ன? என்பதை விசாரித்து தெரிந்து கொள்வதற்காகவும், தன்னுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காகவும், அவர் வைத்திருந்த துப்பாக்கியுடன் மும்பைக்கு பயணிக்கிறார் முத்து. அவரது வாழ்க்கையில் மும்பை கற்றுக் கொடுத்த பாடம் என்ன? மும்பையில் அவர் என்னவாக தொழில் செய்து முன்னேறுகிறார்? என்பதே‘வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் பாக கதையாக அமைந்திருக்கிறது.

முத்து என்கிற முத்துவீரன் கதாபாத்திரத்திற்காக தன்னை வருத்திக் கொண்டு, முற்றிலுமாக பொருந்தியிருப்பதுடன், முழு திரைக்கதையும் தன் தோளில் அநாயசமாக சுமந்திருக்கிறார் சிலம்பரசன். கேங்ஸ்டர் படம் என்றாலும் முதல் பாதி திரைக்கதையில் முத்துவின் கபடமற்ற வாழ்வியலையும், மும்பையில் இசக்கி புரோட்டா கடை என்ற உணவகத்தின் பின்னணியில் நடைபெறும் குற்றச்சம்பவங்களையும் விரிவாக விவரித்து, பார்வையாளர்களை சோர்வடையச் செய்கிறார் இயக்குநர்.

சிலம்பரசனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை சித்தி இத்னானி தோற்றத்தில் அவருக்கு பொருத்தம் இல்லாததாக இருப்பதை உணர்ந்த இயக்குநர், திரைக்கதையில் அவரை விட நான்கு வயது மூத்தவர் என பொருத்தமான காரணத்தை கூறி, இந்த ஜோடியை ரசிகர்களிடம் ஏற்க செய்திருக்கிறார். அதே தருணத்தில் இவர்கள் இருவருக்கு இடையேயான காதல் காட்சிகளும், தனிமையில் சந்தித்துக் கொள்ளும் போது பேசும் வசனங்களும் ‘நச்’. குறிப்பாக கடற்கரையில் இருவரும் அமர்ந்து உரையாடும் காட்சி பளீச்.

‘மல்லிப்பூ..’ என்றப் பாடலைப் படமாளிகைகளில் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் சில விமர்சகர்கள், ‘பாடல் நன்றாக இருக்கிறது. ஆனால் அதன் பின்னணி விரசமாக இருக்கிறது’ என குறிப்பிடுவதையும் கவனிக்க வேண்டும்.

கேங்ஸ்டர் பாணியிலான திரைக்கதையில் நம்பிக்கை துரோகம் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பதும், அது இந்த திரைக்கதையில் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருப்பதும், பலமும், பலவீனமாகவும் அமைந்திருக்கிறது. கேங்ஸ்டர் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள், காதலுக்கும், பெண்களின் அன்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பதைச் சற்று சிரமப்பட்டு புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது.

“யார் முன்னாலும் எதன் காரணமாகவும் அவமானப்பட தயாராக இல்லை. இதனால் தான் நான் எப்போதும் கையில் ஆயுதம் வைத்திருக்கிறேன்” என கதாநாயக பிம்பத்தின் மூலம் இயக்குநர் சொல்லி இருக்கும் விடயம், போதை கலாச்சாரத்தில் மோகம் கொண்டிருக்கும் தற்போதைய இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விடயமாகவே அவதானிக்கமுடிகிறது.

நாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி கதாபாத்திரம், மும்பையில் இளம் பெண், தன் வாழ்க்கையை இயல்பாக நடத்துவதற்கு ஏதேனும் ஒரு வகையில் பாலியல் ரீதியிலான சுரண்டலை அனுமதிக்க வேண்டும் என காட்சிப்படுத்தியிருப்பதை தவிர்த்திருக்கலாம். இது பார்வையாளர்களின் மனதில் எதிர்மறையான எண்ணங்களையே விதைக்கக்கூடும்.

கேங்ஸ்டர் படம் என்பதை உணர்ந்து, படத்தின் திரைக்கதையை இதற்கு முன் வெளியான எந்த கேங்ஸ்டர் படைப்பின் பாதிப்பும் இல்லாமல் உருவாக்க வேண்டும் என நினைத்து, கௌதம் வாசுதேவ் மேனன் உருவாக்கி இருக்கும், ‘வெந்து தணிந்தது காடு’, சிலம்பரசனின் தனித்துவமான நடிப்பிற்காகவும், ஏ ஆர் ரகுமானின் நேர்த்தியான பின்னணியிசைக்காகப் பார்க்கலாம்.

வெந்து தணிந்தது காடு- கேங்ஸ்டர் படைப்புகளில் ராக் ஸ்டார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்