இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசின் வீட்டுத்திட்டம் ; மலையக பிரதிநிதிகளுக்கும் அரசாங்கத்துக்கும் பாடமாகுமா ?

By Digital Desk 5

16 Sep, 2022 | 01:56 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

தமிழகத்தில் சுமார் 106 முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கான நலனோம்பு திட்டத்தை படிப்படியாக செயற்படுத்தி வருகின்றார்  தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின். 

இவர்களுக்கு அனைவருக்கும் பொருத்தமான சூழலில் சகல வசதிகளையும் கொண்ட  நிரந்தர வீடமைப்புத்திட்டத்தை அமைத்தல் அதில் ஒரு அம்சமாகும். அதில் முதற்கட்டமாக  முகாம்களில் வாழ்ந்து வரும் 321 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்து அவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு கடந்த புதன்கிழமை முதலாம் திகதி திண்டுகல் மாவட்டத்தில் இடம்பெற்றது. 

இம்மாவட்டத்தின் தோட்டனூத்து, அரியனூத்து மற்றும் கோபால்பட்டி ஆகிய இடங்களில் அமைந்துள்ள முகாம்களில் வசித்து வந்த 321குடும்பங்களுக்கே வீடுகள் கையளிக்கப்பட்டன. வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில், சிறுபான்மை நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டதோடு, முதலமைச்சர் ஸ்டாலின்,  நிகழ்வில் காணொளி மூலம் பங்கேற்றிருந்தார்.  

நூலகம், சிறுவர் பராமரிப்பு நிலையம், ஆரம்பவகுப்பு சிறார் பாடசாலை,  மைதானம், சமூக ஒன்று கூடல் மண்டபம், 24மணித்தியால நீர்,மின்சாரம்  என  சகல வசதிகளையும் கொண்டதாகவும் அழகிய சூழலில் பொருத்தமான இடைவெளிகளுடன் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான தமிழக அரசு 17 கோடியே 17 இலட்சம் (இந்திய ரூபா) நிதியை ஒதுக்கியிருந்தது.

தமிழக முகாம்களில் வாழ்ந்து வருவோர் யுத்தம் ஆரம்பித்த காலகட்டங்களில் அகதிகளாக தமிழகத்துக்கு சென்றவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் மலையக பிரதேசங்களிலிருந்து வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த இந்திய வம்சாவளி மக்களாகவே உள்ளனர். ஒரு தலைமுறையை கடந்து அங்கு வாழ்ந்து வரும் அவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலினின் அரசாங்கமே பாரிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியிருந்தது. 

‘அகதிமுகாம்கள்’ என்ற பெயரை அவர் தனது ஆட்சியில் ‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்’ என அரசாணை மூலம் மாற்றினார். வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை என்ற அமைச்சை உருவாக்கினார். மேலும் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சட்டசபையின் இந்த முகாம்களில் வாழ்ந்து வரக்கூடிய மக்களின் நலன் குறித்து விசேட உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்,  இந்த மக்களின் நலனோம்பு திட்டங்களுக்காக 317 கோடி (இந்திய)ரூபா ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார். 

அதன் முதற்கட்டமாக தான் அளித்த வாக்குறுதியின் படி ஒரு வருடத்தில் குறித்த மூன்று முகாம்களில் வாழ்ந்து வரும் 321குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுத்துள்ளார்.  கடந்த 30 வருடங்களுக்கும் மேல் முகாம்களில் வாழ்ந்து வந்த இந்த மக்கள் முதன் முறையாக தமக்காக அமைக்கப்பட்ட சிறந்த வீடுகளில் தமது வாழ்க்கையை தொடரப்போகின்றனர். 

இனி இவர்களை எவரும் அகதிகள் என அழைக்க முடியாது. முகாம் வாழ் மக்கள் என்றும் கூற முடியாது. தமிழக அரசின் இந்த திட்டம் இலங்கை அரசாங்கத்துக்கும் இன்னும் லயன் குடியிருப்புகளிலேயே மலையக மக்களை வாழ் வைத்துக்கொண்டிருக்கும் மலையக பிரதிநிதிகளுக்கும் பல செய்திகளை கூறுவதாக உள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக தமது மாநிலத்தில் தஞ்சமடைந்திருக்கும் அகதி மக்களுக்கு இத்தகையதொரு திட்டத்தினை தமிழ் நாடு அரசு முன்னெடுத்திருக்கும் போது,   இந்த நாட்டுக்காகவே உழைத்து களைத்து இன்னும் லயன்கள் என்ற பெயரில் முகாம்களை விட மோசமாக இருக்கும் குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு இவர்கள் என்ன செய்யப்போகின்றனர்? 

முதலில் தமிழக அரசு அமைத்துக்கொடுத்துள்ள குடியிருப்புகளின் உட்கட்டமைப்பு வசதிகளை இங்குள்ளோர் சென்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். குறித்த மக்களின் வாழ்க்கை முறையினை முற்றாக மாற்றியமைக்கக் கூடிய வகையில் சிறந்த சுற்றாடலில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

‘எமது மக்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுத்தமைக்கு  முதலமைச்சருக்கு நன்றி’  என ஊடகங்களை அலங்கரிக்கும் அறிக்கைகள் இப்போது அவசியமற்றவை. மனசாட்சியுள்ள பிரதிநிதிகள் எவரும் அவ்வாறு அறிக்கை விட மாட்டர். மலையக பெருந்தோட்டப் பகுதி வீடமைப்புத் திட்டமானது எந்த அரசாங்கத்தாலும் அக்கறையாக செயற்படுத்தப்படவில்லை. 

இன்னும் சுமார் ஒன்றரை இலட்சம் லயன் குடியிருப்புகள் பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ளன. இவை அனைத்தையும் மாற்றியமைத்து பொருத்தமான வீடுகளை அமைப்பதென்றால், தற்போதைய அரசியல் சூழ்நிலையில்  இன்னும் நூறு வருடங்கள் தேவை. இந்த மக்கள் இலங்கைக்கு வருகை தந்து இருநூறு வருடங்களாகின்றன. 

அதேவேளை தமிழகத்துக்கு அகதிகளாக மக்கள் சென்று 40வருடங்களாகின்றன. அவர்களுக்கு இனி குடியிருப்புகள் அமைத்துக்கொடுப்பதில் தமிழக அரசு வெகுவேகமாக செயற்படும் என்பதில் ஐயமில்லை. அப்படி பார்த்தால் அகதிகளாக சென்ற அனைவருக்கும்  குடியிருப்புகள் கிடைத்து   விடும் என உறுதியாக சொல்லலாம். 

ஆனால் ஆறு தலைமுறைகளாக இங்கு பெருந்தோட்டப்பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்கள் இன்னும் அகதிகளின் நிலைமைகளிலேயே தமது குடியிருப்புகளில் வாழ்ந்து வருகின்றனர். கூறப்போனால்  லயன் குடியிருப்புகளும் ஒரு வகை முகாம்களே. 

தமிழகத்தில் 29மாவட்டங்களில் உள்ள சுமார் 109 முகாம்களில் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் இருப்பதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. முகாம்களுக்கு வெளியே சுமார் 30ஆயிரம் பேர் வரை இருப்பதாகக் கூறப்படுகின்றது. 

வெளியே இருப்பவர்கள் அங்குள்ளோரை மணம் முடித்து நிரந்தரமாக அங்கு தங்கி விட்டனர்.  இந்நிலையில் அகதிகளாக இருப்பவர்கள் மீண்டும் இலங்கை திரும்ப வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த முப்பது வருடங்களாக பேசப்பட்டு வருகின்றன. ஆனால் யுத்தம் முடிந்தும் இங்கு இன்னும் இனப்பிரச்சினை தீரவில்லை. 

அதேவேளை நிரந்தர சமாதானமும் உருவாகவில்லை. அதுவும் 2020 இற்குப்பிறகு இலங்கையின் நிலைமை மிக மோசமாக உள்ளது. இந்நிலையில் அங்குள்ளவர்களை இங்கு மீண்டும் வரும்படி கோரிக்கை விடுப்பதில் எந்தளவுக்கு நியாயங்கள் இருக்கின்றன என்பது தெரியவில்லை.

மேலும் தமிழக அரசின் இந்தப்புதிய திட்டத்தால் இனி முகாம்களில் இருப்போம் இலங்கையை நினைத்துப்பார்ப்பார்களா என்று கூற முடியாது. அங்கேயே பிறந்து வளர்ந்து திருமணம் முடித்து தொழில் செய்வோருக்கு இலங்கை என்பது தமது நாட்டுக்கு அருகிலுள்ள ஒரு நாடு என்ற எண்ணமே இருக்குமே ஒழிய, அது தமது பூர்விக மண் என்ற சிந்தனை இருக்குமா என்பதும் கேள்விக்குரிய விடயம். 

2010 தொடக்கம் 2022 வரையான 12 வருடங்களில் தமிழக முகாம்களிலிருந்து சுமார் 16 ஆயிரம் பேர் வரை இலங்கைக்கு திரும்பியுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இனி இத்தொகையில் வீழ்ச்சி ஏற்படும் என்று உறுதியாகக் கூறலாம். எனினும் தமிழக முகாம்களில் உள்ள அகதி மக்களைப் பற்றி பேசுவதை விடுத்து இலங்கை அரசாங்கமும் பிரதிநிதிகளும் தமது நாட்டு அகதி முகாம்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பற்றி சற்று யோசிக்க வேண்டும்.

தமிழக முதலமைச்சரின் இத்திட்டத்தை ஒரு பாடமாகக் கொண்டு இவர்கள் செயலாற்ற வேண்டும். இந்திய அரசின் நிதியுதவியில் தொடங்கப்பட்ட வீட்டுத்திட்டம் அரைகுறையாக உள்ளது. மத்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்ட பல வீடுகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன. இதைப்பற்றிய அக்கறையும் சிந்தனைகளுமே இப்போது இந்த பிரதிநிதிகளுக்கு மேலோங்க வேண்டும். அரசியல் நெருக்கடிகள் இல்லாமலில்லை. ஆனால் அரசாங்கத்துக்கு முட்டு கொடுக்க யோசிப்பவர்கள்  யாருக்காக, எதற்காக அதை  செய்யப்போகின்றோம் என்பதை ஒரு தடவை யோசித்தல் நன்று. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right