துருக்கி - இஸ்ரேஸ் குளிர்ச்சியான உறவு

By Digital Desk 5

16 Sep, 2022 | 12:22 PM
image

லத்தீப் பாரூக்

எவ்விதமான ஆத்திரமூட்டல் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் இஸ்ரேல் அதன் காட்டுமிராண்டித்தனத்தை கடந்த முதலாம் திகதி காஸா பிரதேசத்தில் கட்டவிழ்த்து விட்டதால் மகிழ்ச்சியானதொரு கோடைகால விடுமுறையை எதிர்ப்பார்த்திருந்த 15 சிறுவர்கள் உட்பட 49 அப்பாவி பலஸ்தீனர்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயம் அடைந்தனர். 

இவ்வாறு இந்த சோகங்கள் அடங்குவதற்குள் கடந்த 17ஆம் திகதி  சட்டத்துக்கு கட்டுப்படாத, இந்த கொடுமைக்கார இஸ்ரேலுடன் முழு அளவிலான இராஜதந்திர உறவுகளை ஆரம்பிப்பதாக துருக்கி அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பு வெளியாகி இருவாரங்களின் பின் செப்டெம்பர் நான்காம் திகதி துருக்கியின் யுத்தக்கப்பலான ‘ரி.சி.ஜி.கமால்ரீஸ்’ முழு அளவிலான படைகளுடன் இஸ்ரேலின் வடபகுதி ஹைபா துறைமுகத்தில் தரைதட்டியது. இங்குதான் இஸ்ரேல் கடற்படையின் தலைமையகமும் அமைந்துள்ளது.

துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கௌசொக்லு அங்காராவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது, “இஸ்ரேலுடன் வளர்ச்சி அடைந்து வரும் உறவுகள் என்பது பலஸ்தீன விடயத்தை துருக்கி கை விட்டுவிடுமென அர்த்தமல்ல. நாம் பலஸ்தீனர்களின் உரிமைகளுக்காகவும் காஸா மற்றும் ஜெரூஸலம் பற்றிய விடயங்கள் பற்றியும் தொடர்ந்து குரல் எழுப்புவோம்” என்று தெரிவித்துள்ளார்.

அரபுலகின் ஏனைய ஆட்சியாளர்கள் மத்தியிலும் காணப்படும் ஒரேவிதமான இரட்டை வேடத்தை அல்லது நயவஞ்சகத்தை தான் இந்தக்கூற்று வெளிப்படுத்துகின்றது. இந்த ஆட்சியாளர்கள் எல்லோருமே தமது ஆன்மாக்களை தம்மை பதவியில் அமர்த்திய அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இஸ்ரேல் எஜமானர்களுக்கு விற்பனை செய்து விட்டு ஆட்சிக்கதிரைகளை அலங்கரித்துக் கொண்டிருப்பவர்கள்.

துருக்கி இஸ்ரேலுக்கு தெரிவித்துள்ள செய்தி சவூதிஅரேபியா உட்பட அரபுலகின் ஆட்சி அதிகாரத்திலுள்ள ஏனைய கொடுங்கோல் ஆட்சியாளாகளின் செய்தியைப்;போலவே அமைந்துள்ளது.

உறவு நிலைகள்


பலஸ்தீனர்களை தினசரி சுதந்திரமாகக் கொன்று குவித்தல் உள்ளிட்ட மிலேச்சத்தமான எந்த நடவடிக்கைகள் தொடர்பிலும்  சர்வதேசம் இஸ்ரேலிடம் கேள்வி கேட்பதில்லை. மாறாக, ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக எந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் அnரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஆதரவோடு அது நிராகரிக்கப்படுகிறது. 

இதனால் தான் இஸ்ரேல் எவ்வித அச்சமும் கவலையும் குற்ற உணர்வுமின்றி பலஸ்தீன மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள், வன்முறைகள் என்பனவற்றில் ஈடுபட்டுள்ளது.

2018இல் இஸ்ரேலும் துருக்கியும் பரஸ்பரம் அதன் தூதுவர்களை வெளியேற்றி இருந்தன. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்தின் கீழ் இஸ்ரேலில் உள்ள அமெரிக்கத் தூதரகம் டெல்-அவிவ் நகருக்கு மாற்றப்பட்டதை அடுத்து இஸ்ரேல் துருக்கி தூதுவர்களின் வெளியேற்றம் இடம்பெற்றது. 

பலஸ்தீன மக்களைப் பொறுத்தமட்டில் அவர்களின் எதிர்கால தலைநகரமாக ஜெரூஸலம் அமைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். ஆனால் இஸ்ரேல் தனது தலைநகராக ஜெரூஸலத்தை எடுத்துக்கொண்டதை அடுத்து இஸ்ரேல் காஸா எல்லைப் பகுதியில் கடும் மோதல்களும்இடம்பெற்றன. 

அமெரிக்க தூதரக இடமாற்றத்தை அடுத்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது சுமார் 100பலஸ்தீனர்கள் இஸ்ரேல் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுமார் பத்து வருட கால பதற்ற நிலையின் பின் சுமுக நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் மாதத்தில் இஸ்ரேல் ஜனாதிபதி ஐஸாக் எர்சொக் துருக்கிக்கு விஜயம் செய்திருந்தார். அதன் பிறகு இரு நாடுகளினதும் வெளியுறுவு அமைச்சர்களும் பரஸ்பரம் விஜயங்களை மேற்கொண்டு உறவுகளை சீர்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இஸ்தான்புல்லில் இருந்து தகவல்களைத் வெளியிட்டுள்ள அல்ஜஸீராவின் ஊடகவியலாளர், ரசூல் சர்கார், ‘இருநாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்புக்களின் போது அபொருளாதார மற்றும் பாதுகாப்பு காரணிகள் முக்கிய இடம் பிடித்துள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். 

ஆனால் “முழு அளவிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையிலும் கூட இரு நாடுகளுக்கும் இடையில் பலஸ்தீன விவகாரமானது சர்ச்சைக்குரியதாகவே தொடர்ந்தும் காணப்படுகிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிராந்திய சக்திகளோடு தனது உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இஸ்ரேல் அரபு நாடுகளுடன் நேசக்கரம் நீட்டி வருகின்றது. இஸ்ரேலுடனான இந்தப் புதிய உறவுகளுக்கு காரணமாக அமைகின்ற புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இப்போது உலக அரங்கில் ‘ஆபிரஹாமின் உடன்படிக்கைகள்’ என்று அழைக்கப்பட்டு வருகின்றன. 

பஹ்ரேன், ஐக்கிய அரபு இராச்சியம், மொரோக்கோ என்பன ஏற்கனவே இந்த உடன்படிக்கைகளில் இணைந்துள்ளன. இப்போது துருக்கியும் இணைகின்றது. தன்னை விட்டுப்பிரிந்து தனக்கு போட்டியான நாடுகளுடன் உறவுகளை சீர்செய்து கொள்வதில் துருக்கி 2020முதல் கவர்ச்சிகரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. எகிப்து, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் என்பனவும் இதில் அடங்கும்.

இதேவேளை துருக்கிக்கு எதிராக குர்திஷ் இனத்தவர்களுக்கான தனித்தாயகம் ஒன்றுக்காகப் போராடும் குர்திஷ் கெரில்லாக்களுக்கு இஸ்ரேல் ஆயுத உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களிலும் துருக்கி கவனம் செலுத்தியுள்ளது. குர்திஷ் சுன்னாஹ் பிரிவு முஸ்லிம்களுக்கு தனித்தாயகம் இருந்தது. ஆனால் பிற்காலத்தில் அது நான்காகப் பிரிக்கப்பட்டது. அந்தப் பகுதிகள் துருக்கி, ஈரான், ஈராக், சரியா ஆகிய நாடுகளுடன் பின்னர் இணைக்கப்பட்டன.

குர்திஷ் இன மக்களைப் பழிவாங்கும் நோக்கில் ஐரோப்பிய ஏகாதிபத்தியவாத சக்திகளாலேயே இந்தப்பிரிவினை நடத்தப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் பலர் சுட்டிக் காட்டி உள்ளனர். இதற்குக் காரணம் ஐய்யூபி பரம்பரையை நிறுவிய குர்திஷ் இனத்தின் மாவீரர் சலாஹ{த்தீன் தான் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஜெரூஸலத்தை கிறிஸ்தவர்களிடம் இருந்து விடுவித்து முஸ்லிம்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தவர். இதனால் தான் அவர் சார்ந்த குர்திஷ் இனத்தையே ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய ஏகாதிபத்தியம் பழிவாங்கியது எனக் கூறப்படுகின்றது.

இந்தப் பிரிவினைக்குப் பிறகு தான் குர்திஷ் மக்கள் தமது தாயகத்துக்கான ஆயுதப் போராட்டத்தையும் தொடங்கினர். இந்தப் பிராந்தியத்தில் தமக்கென சுதந்திரமான தாயகம் ஒன்றை ஸ்தாபிக்க ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் பிரிவினர் மீது இஸ்ரேலின் அனுதாபம் திரும்பி உள்ளமை பற்றி துருக்கி சிந்திக்கத் தவறவில்லை.

குர்திஷ் இனத்தவர்கள் கேட்பது போல் தனிநாடு அமைவதாக இருந்தால் ஈராக், சிரியா, ஈரான் ஆகிய நாடுகளிடம் இருந்தும் பெருமளவு நிலப்பரப்பை பிரித்து எடுக்க வேண்டியிருக்கும். துருக்கியில் இருந்து ஒரு பகுதி பிளவு படுமானால் அதுபெரும் விளைவுகளையும் சந்திக்க வேண்டி இருக்கும்.

அந்தவகையில் குர்திஷ் ஆயுதக்குழு இப்போது இஸ்ரேலிடம் இருக்கும் முக்கியமான துருப்புச்சீட்டாகும். துருக்கிக்கும் ஏனைய பிராந்திய நாடுகளுக்கும் எதிராக இஸ்ரேல் எந்தநேரத்தில் வேண்டுமானாலும் அதை தாராளமாகப் பயன்படுத்தலாம்.  பல தசாப்த காலமாக குர்திஷ் ஆயுதக் குழுவுடன் இஸ்ரேல் கொண்டுள்ள உறவுகளின் மூலம் அந்தக் குழுவை இந்தப்பிராந்தியத்தில் உள்ள தனது எதிரிகளுக்கு எதிரான ஒரு தடையாகவே அவதானித்து வந்துள்ளது. என்றாவது ஒரு நாள் அரபிகளுக்கு எதிராகவும், ஈரான் மற்றும் துருக்கிய தரப்பினருக்கு எதிராகவும் அதைப் பாவிப்பதற்கு இஸ்ரேல் தருணம் பார்த்து காத்திருக்கின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right