இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படாததையும் உறுதி செய்வோம் - ஜனாதிபதி ரணில்

Published By: Digital Desk 5

16 Sep, 2022 | 10:27 AM
image

(எம்.மனோசித்ரா)


நாட்டில் யுத்தத்தில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனினும் தற்போது நாம் நாட்டில் சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டும். அதற்கமைய வடக்கு மற்றும் தமிழ் மக்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அடுத்த சில மாதங்களில் இறுதி தீர்வு ஏற்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பிராந்தியத்தின் பாதுகாப்பையும் அமைதியையும் பாதிக்கும் முறுகல் நிலை  உருவாவதை நாம் விரும்பவில்லை. எந்தவொரு அதிகாரப் போட்டியிலும் இலங்கை பங்கேற்காது.

இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளை, இந்தியாவுக்கு  எந்தவொரு பாதகமான விளைவும் ஏற்படாது என்பதையும் நாம் உறுதி செய்வதுடன் தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டில் இருப்போம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

இந்து சமுத்திரத்தின்  பூகோள அரசியல் துரதிஷ்டவசமாக எம்மை அம்பாந்தோட்டைக்கான  குத்துச்சண்டை பையாக மாற்றியுள்ளது. உண்மையில் இந்து சமுத்திரத்தில் சீனாவால் இயக்கப்படும் 17 துறைமுகங்கள் உள்ளன.

அவை வெவ்வேறு கம்பனிகளுக்கு உரியவை. டுபாயால் இயக்கப்படும் மேலும் சில துறைமுகங்களும் அங்கு உள்ளன.   அவை யாவுமே, வணிக துறைமுகங்களாகும். அம்பாந்தோட்டையும் அதே போன்றதே. அது ஒரு இராணுவ துறைமுகம் அல்ல.

அம்பாந்தோட்டை  துறைமுகம் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக  இருக்கிறது என்று சில தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.  

ஆனால் அவுஸ்திரேலியாவில் உள்ள டார்வின் துறைமுகம் தான்  பாதுகாப்பு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்க படையினரை இருமருங்கிலும் கொண்டதாக  சீன துறைமுகங்கள் இயங்குகின்றன. எம்மிடம் அவ்வாறு எதுவும் இல்லை.

நாம் இங்கே வந்து பயிற்சி பெற எவருக்கும் அனுமதியளிக்கவில்லை. எனினும் எமது கடற்படையின் தெற்கு கொமாண்டோ பிரிவை  நாம் அங்கு அமைத்துள்ளோம்.

இராணுவத்தின் பிராந்திய தலைமையகம் மற்றும் விமானப் படையின் ஒரு பிரிவும் அங்கு உள்ளது. எனினும் அவர்களில் எவரும் அம்பாந்தோட்டை துறைமுகத்துடன் சம்பந்தப்படவில்லை. இது ஒரு வணிக துறைமுகம் என்பதை மாத்திரம் அவர்கள் உறுதி செய்து வருகின்றனர்.

வணிக துறைமுகமாக இருந்தாலும் துறைமுகம் தொடர்பில்  தேவையற்ற முடிவுகளுக்கு வருவது இதன் மூலோபாய முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

மேலும் சீனாவுடன் நாம் செய்துகொள்ளும் அடுத்த ஒப்பந்தம் அத்தகைய ஊகங்களை ஏற்படுத்தாது என்று நம்புகிறேன். அது இலங்கைக்கான கடன் குறைப்பு பற்றியது மட்டுமே.

வணிகச் செயற்பாடுகள் இந்து சமுத்திரத்தில் சுமுகமாக முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். உலகம் முழுவதற்கும் தேவையான பெற்றோலியம் மற்றும் எரிசக்தி விநியோகம் இந்த சமுத்திரத்திற்கு ஊடாகவே முன்னெடுக்கப்படுகின்றது. பெரும் எண்ணிக்கையான கப்பல்கள் இந்த வழியாகச் செல்கின்றன. எனவே இப்பகுதி யுத்தம் மற்றும் முரண்பாடுகளுக்குரிய இடமாக மாறுவதற்கு நாம் இடமளிக்க முடியாது. இந்து சமுத்திரத்தில் ஆதிக்கப் போட்டியை நாம் பார்க்க விரும்பவில்லை.

பிராந்தியத்தின் பாதுகாப்பையும் அமைதியையும் பாதிக்கும் முறுகல் நிலை  உருவாவதை நாம் விரும்பவில்லை. எந்தவொரு அதிகாரப் போட்டியிலும் இலங்கை பங்கேற்காது என  அணிசேரா நாடுகளின் மாநாட்டில் டி.எஸ். சேனநாயக்க முன்வைத்த கொள்கையை நாம் தொடர்ந்தும் பின்பற்றி வருகின்றோம். எந்தவொரு பெரிய சக்தியாக இருந்தாலும் நாம் ஒரு அணியில் சேர மாட்டோம். அதிலிருந்து விலகியே  இருப்போம். எனவேதான் அதிகாரம் கூடிய நாடுகளுக்கிடையிலான முறுகல்கள் இந்து சமுத்திரத்தில் எவ்வாறான தாக்கத்தையும் ஏற்படுத்தி விடக்கூடாது  என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

என்றாலும், இராணுவம் அல்லாத பல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டுள்தை எம்மால்  இன்னமும் தவிர்க்க முடியாமல் உள்ளது. பல நாடுகளில் உள்ளதைப் போன்றே நாமும் உணவுப் பற்றாக்குறை, பொருளாதார வளர்ச்சியில் தடை, உலகளாவிய காலநிலை மாற்றம் போன்ற  பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். நாம் இவற்றில் கவனம் செலுத்த வேண்டும். எமது கவனம்  திசைதிருப்பப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இலங்கையின் பாதுகாப்பை நாம் உறுதி செய்யும் அதேநேரம், எந்தவொரு பாதகமான விளைவும் இந்தியாவுக்கு ஏற்படாது என்பதையும் நாம் உறுதி செய்வதுடன் தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டில் இருப்போம்.

இந்தியாவைப் போன்றே எமக்கு மாலைதீவும் மிக முக்கியமானது . எமது கடல் எல்லைகள் இந்தியாவுடனும், மாலைத்தீவுடனும் இருக்கின்றன. அவர்களின் பாதுகாப்புப் பிரிவினருக்கு சிறந்த பயிற்சியைக் கொடுப்பதற்கே எம்மால் உதவ முடியும். இலங்கையில் தற்போது பயிற்சிப் பெற்று வரும் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் மற்றும் முப்படைகளின் பிரதானியிடம் கேட்டுள்ளேன். எனவே, இவைதான் எமது கொள்கை. இந்த உள்ளடக்கத்தின் அடிப்படையிலேயே நாம் செயற்படுவோம்.அடுத்த கட்டமாக நாம் இலங்கையின் பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். அதனால்தான் 2030 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அறிக்கையை நாங்கள் பெற விரும்புகிறோம்.

யுத்தம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் எமக்கு ஏற்பட்டது. அந்த யுத்தத்தில் நாம் வெற்றிக் கண்டோம். தற்போது நாம் நாட்டில் சமாதானத்தை கொண்டுவர வேண்டும். அதைதான் நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம். வடக்கு மற்றும் தமிழ் மக்களுடன் அடுத்த சில மாதங்களில் இறுதி தீர்வு ஏற்படும் என நான் நம்புகிறேன். தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நான் தற்போது பேச்சு நடத்தி வருகிறேன். என்றாலும்  எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும்.

தற்போது எதிர்கொண்டுள்ள பயங்கரவாதம்,  முன்னர் எதிர்கொண்ட பயங்கரவாதத்தை  போன்றதல்ல. நாம் அவ்வாறான பயங்கரவாதத்தை மீண்டும் எதிர்கொள்ள மாட்டோம் என நம்புகின்றேன். என்றாலும் அதனை முறியடிப்பதற்கு ஏதுவாக  எம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.  மூன்றாம் தரப்பினரைத் தாக்குவதற்காக பயங்கரவாதிகள் இலங்கையை பயன்படுத்தக்கூடிய ஆபத்தான நிலை உள்ளது என்பதை நாம் எப்போதும் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.

காலநிலை மாற்றம் மற்றும் சுற்றாடல் குறித்தும் நாம் அதிகம் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்துறையுடன் தொடர்புடைய ஏனைய அரச சார்பற்ற அமைப்புக்களுடனும் நாம் இதற்காக இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாங்குளம் வைத்தியசாலையின் பெயர் பலகையில் தமிழ்...

2024-05-23 14:50:11
news-image

வெசாக் நிகழ்வை முன்னிட்டு சிறைக் கைதிகளை...

2024-05-23 14:20:50
news-image

கராப்பிட்டிய வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்ற...

2024-05-23 14:05:43
news-image

திருகோணமலையில் இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி...

2024-05-23 14:01:55
news-image

உணவுப் பொதியில் போதைப்பொருளை மறைத்து எடுத்துச்...

2024-05-23 13:59:34
news-image

திருகோணமலை சல்லி கடற்பரப்பில் மீனவர்கள் இருவர்...

2024-05-23 13:00:32
news-image

நுவரெலியாவில் பலத்த காற்று, பனி மூட்டத்துடன்...

2024-05-23 13:18:03
news-image

கல்முனை நகரில் ஒருவழிப் பாதை இருவழிப்...

2024-05-23 13:07:36
news-image

இங்கிரியவில் வீடொன்றிலிருந்து பெண் சடலமாக மீட்பு

2024-05-23 13:05:32
news-image

யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் கடலில் மயங்கி...

2024-05-23 13:07:23
news-image

வெசாக் தினத்தையொட்டி பொது மன்னிப்பு ;...

2024-05-23 12:41:01
news-image

இலங்கை பொலிஸ் ஏற்பாட்டில் வெசாக் பக்திப்...

2024-05-23 12:31:59