2017 ஆம் ஆண்டுக்காக நல்லாட்சி அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டத்தில் வரி விதிப்பதிலும், அரச சொத்துகளை தனியார் மயப்படுத்துவதிலும்தான் பிரதான அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கத்தின் இறுதி வரவு செலவுத்திட்டமாக இது அமையவுள்ளதாக மஹிந்தானந்த அழுத்கமமே எம்.பி. தெரிவித்தார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய இரு கட்சிகளும் இணைந்துதான் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டன. என்றாலும் குறித்த இரு கட்சிகளும் இணைந்து 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்துள்ளதா என்ற சந்தேகம் எமக்குள்ளது. ஏனெனில் வரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சகல யோசனைகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளாகவே அமைந்துள்ளது.

வரி விதிப்பதிலும், அரச சொத்துகளை தனியார்மயப்படுத்துவதிலும்தான் அரசாங்கத்தின் பிரதான அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் வருமானம் பெறுவதனையுமே இலக்காகக்கொண்டுள்ளனர். 

இருந்தபோதிலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒருபோதும் இலங்கையில் முதலீடு செய்ய முன்வரப்போவதில்லை. ஏனெனில் மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் ஏற்பட்ட மோசடி மூலம் முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அத்துடன் நிதியமைச்சர் மீதும் எவரும் நம்பிக்கை வைக்கப்போவதில்லை. அவருக்கெதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.    

ஆகவே அரசாங்கம் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கும் இலக்கினை அடைய முடியாது. ஆதலினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் நல்லாட்சி அரசாங்கத்தின் இறுதி வரவு செலவுத்திட்டமாக  அமையவுள்ளது. அரசாங்கத்தின் இறுதிக்காலம் இது என்பதை அரசாங்கத்திலுள்ளவர்களும் நன்கு அறிந்துகொண்டுள்ளனர். அதனால்தான் கொள்ளையடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.