ஜெனீவாவில் இந்திய நிலைப்பாடு

14 Sep, 2022 | 04:23 PM
image

இனப்பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்த பிரகாரம் அரசியல் தீர்வைக் காண்பதில் ' மதிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ' காணமுடியவில்லை என்று ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  51வது கூட்டத்தொடரின் கருத்துப்பகிர்வு அமர்வில்  கடந்தவாரம் ( செப்.12) இந்தியா வெளிப்படுத்திய விசனம் அரசியல் வட்டாரங்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்திருக்கிறது.அரசாங்கத்திடமிருந்து  பிரதிபலிப்பு வரவில்லை என்றபோதிலும், அரசியல் தீர்வு முயற்சிகளில் முன்னேற்றம் இல்லையென்று இந்தியா ஜெனீவாவில் முதற்தடவையாக குறிப்பிட்டிருப்பதால் இத்தடவை இந்திய நிலைப்பாட்டில் ஒரு  வித்தியாசத்தை அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம்  விரைவில் வாக்கெடுப்புக்கு விடப்படக்கூடிய சாத்தியம் இருக்கும் நிலையில், இந்தியாவிடமிருந்து இக்கருத்து வெளிவந்திருக்கிறது.தீர்மானத்தின் வரைவு  பேரவையின் உறுப்புநாடுகள் மத்தியில் சுற்றுக்கு விடப்பட்டிருக்கிறது.அதில் மனித உரிமைகள் நிலைவரம், பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறை  என்று பெருவாரியான விடயங்களுக்கு  மத்தியில் தமிழ் மற்றும்  முஸ்லிம் மக்களின்  நீண்டகால மனக்குறைகளையும் கோரிக்கைகளையும் தீர்த்துவைப்பதில் முன்னேற்றம் இல்லாதிருப்பது குறித்தும்மனித உரிமைகள்  பேரவை விசனம் கொண்டுள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.

2009 க்கு பிறகு இலங்கை மீதான ஜெனீவா தீர்மானங்களுக்கு   ஆதரவாக இந்தியா மூன்று தடவைகள் வாக்களித்தது. அவற்றில் இரு தீர்மானங்கள் இலங்கையை கடுமையாக கண்டிப்பவையாக அமைந்தன.2014, 2021 தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.

" ஐக்கிய நாடுகள் சாசனத்தின் வழிகாட்டலின் பிரகாரம் மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாப்பதும் ஆக்கபூர்வமான சர்வதேச  பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை முன்னெடுப்பதும் அரசுகளின் பொறுப்பு என்று இந்தியா எப்போதும் நம்புகிறது.இதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை பரவலாக்கி விரைவாக மாகாணசபை தேர்தல்களை நடத்தி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை காண்பதில் மதிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாமல் இருப்பது குறித்து இந்தியா விசனமடைகிறது " என்று  இந்திய இராஜதந்திரி  பேரவையில் குறிப்பிட்டார்.

பொருளாதார மீட்சியுடன் அதிகாரப்பரவலாக்கல் உறுதிமொழியை தொடர்புபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட இந்தியா விரைவில் தேர்தல்களை நடத்தி மாகாணசபைகளை செயற்படவைப்பதன் மூலமாக சுபிட்சமான எதிர்காலம் ஒன்றுக்கான தங்களின் அபிலாலைகளை மக்கள்  அடையக்கூடியதாக இருக்கும்.இது விடயத்தில் நம்பகமான உடனடி நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது.

இந்தியா இத்தகைய நிலைப்பாட்டை எடுத்ததற்கு சீன  ஆய்வுக்கப்பலை புதுடில்லியின் ஆட்சேபத்துக்கு மத்தியிலும் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கு கொழும்பு வழங்கிய அனுமதி உட்பட புவிசார் அரசியலுடன் தொடர்புடைய சர்ச்சைகளை சாத்தியமான காரணங்களாக அவதானிகள் கூறுகிறார்கள்.ஆனால், இந்தியா அரசியல் தீர்வு குறித்து நீண்டகாலமாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.அதை இலங்கை கவனத்தில் எடுக்காமல் காலத்தை இழுத்தடிக்கிறது என்பது ஒன்றும் புதியவிடயம் அல்ல.    

அரசியல் தீர்வு விடயத்தில் குறிப்பாக, 13  வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இரு தரப்பு ஊடாட்டங்கள் மூலமாக இலங்கையை இணங்கச் செய்வதில் இந்தியா நம்பிக்கை இழந்த நிலையில்தான் ஜெனீவாவில்  பிரச்சினையை கிளப்புவதற்கு தீர்மானித்ததோ என்ற கேள்வியும் எழுகிறது.உண்மையில் இந்திய -- இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பிறகு 35 வருடங்கள் கடந்த நிலையில் இதுவரையில் இலங்கை அரசாங்கங்கள் 13 வது திருத்தத்தை ஒழுங்காக நடைமுறைப்படுத்துவதை இந்தியாவினால் உறுதிப்படுத்தமுடியாமல் போய்விட்டது. இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்புக்களின்போது அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்படுவதும் பிறகு இலங்கை தலைவர்கள் அதைப் பற்றி அக்கறை காட்டாமல் விடுவதும் வழமையாகிவிட்டது.

மாகாணசபைகள்  தேர்தல் கடந்த நான்கு வருடகாலமாக நடத்தப்படாத நிலையில் அவற்றின் நிருவாகம் ஜனாதிபதியின் பிரதிநிதிகளான ஆளுநர்களின் கீழ் இருந்துவருகிறது.சில தமிழ் அரசியல் கட்சிகள்  தேர்தல்களை நடத்தவேண்டும் என்று இடைக்கிடை கோரிக்கைகளை முன்வைக்கின்றனவே தவிர,தென்னிலங்கையில் மாகாண சபைகளைப் பற்றி எந்த அக்கறையையும் காணவில்லை. 

நான்கு மாதங்களாக இடம்பெற்ற மக்கள் கிளர்ச்சியின்போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு, புதிய அரசியல் கலாசாரம் மற்றும் முறைமை மாற்றம் உட்பட பெருவாரியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால்,நான்கு வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாணசபை தேர்தல்களை வலியுறுத்தும் கோரிக்கை அந்த கிளர்ச்சியி்ன்போது எவராலும் முன்வைக்கப்பட்டதாக இல்லை. பிரதான சிங்கள அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை, பாராளுமன்றத்துக்கு அடுத்ததாக இரண்டாம் மட்டத்தில் அரசியல் செல்வாக்கை  வலுப்படுத்துவதற்கான ஒரு ஏற்பாடாகவே மாகாணசபைகளை அவை கையாண்டு வந்திருக்கி்ன்றன.

மாகாணசபைகள் முறை அறிமுகப்படுத்தப்பட்டு மூன்றரை தசாப்தங்கள் கடந்துவிட்ட நிலையில் அவை என்றைக்காவது முழுமையான அதிகாரங்களுடன் செயற்படக்கூடிய அரசியல் சூழ்நிலை நாட்டில் உருவாகும் என்று நம்பமுடியவில்லை. கடந்த நூற்றாண்டில்  இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண்பதற்கு என்று கூறிக்கொண்டு தமிழ் மக்களின் தலைவர்களுடன் ஒப்பந்தங்களைச் செய்த இலங்கை பிரதமர்கள் சிங்கள இனவாத சக்திகளிடம் இருந்து கிளம்பிய எதிர்ப்புக்கு மத்தியில் அவற்றை கிழித்தெறிந்தார்கள். மாகாணசபைகளை அறிமுகப்படுத்திய 1987 ஜூலை சமாதான உடன்படிக்கை இந்தியாவுடன் செய்யப்பட்டது என்பதால்தான் அதை ஜனாதிபதிகளினால் அதை கிழித்தெறிய முடியாமல் இருக்கிறது.அந்த உடன்படிக்கையும் மாகாணசபைகளும் இந்தியாவினால் இலங்கை மீது  திணிக்கப்பட்டவை என்பதே சிங்கள அரசியல் சமுதாயத்தின்  பெரும் பகுதியின்  பரவலான அபிப்பிராயம்.

1983 ஜூலையில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவன்செயலுக்கு பின்னரான சூழ்நிலைகளில் இந்திய அரசாங்கத்தின் நெருக்குதல்கள்  காரணமாகவே அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியுடன் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட முன்வந்தார்.உடன்படிக்கையின் ஏற்பாடுகளுக்கு  எவ்வாறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துவது என்பதையும் தீர்மானித்துக்கொண்டுதான் அவர் அதில் கைச்சாத்திட்டார் என்பதை கடந்த கால அரசியல் நிகழ்வுப் போக்குகளை திரும்பிப்பார்த்தால் புரிந்துகொள்ளமுடியும்.

கடந்த 35 வருடங்களாக பதவியில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் மாகாணசபைகள் முழுமையான அதிகாரங்களுடன் ஒழுங்காக இயங்காதிருப்பதை உறுதிசெய்வதிலேயே கவனம் செலுத்தின.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பதவியில் இருந்து இறங்கிய பின்னர் ராஜீவ் காந்தி பற்றி முன்னாள் இந்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர்  எழுதிய நூலொன்றின் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ள ஒரு தடவை புதுடில்லி சென்றார்.  அந்த நிகழ்வில் இடம்பெற்ற கலந்துரையாடலில்  அவர்  இனப்பிரச்சினை பற்றி குறிப்பிட்டபோது இலங்கையில் பதவிக்கு வந்த சகல அரசாங்கங்களுமே இந்திய --இலங்கை   சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாதிருப்பதை உறுதிசெய்துகொண்டன என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.தனது அரசாங்கத்தையும் சேர்த்தே அவர் கூறினார். அந்தளவுக்காவது ஒரு அரசியல் ' நேர்மை ' திருமதி குமாரதுங்கவிடம் இருந்தது.

13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற வலியுறுத்தல்  இந்தியாவிடமிருந்து மாத்திரமல்ல, அண்மைய வருடங்களில் சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகளின் அனுசரணையுடன்  ஜெனீவா தீர்மானங்களிலும் இடம்பெற்றிருக்கிறது.என்றாலும் கூட இலங்கை அரசாங்கம் அதில் அக்கறை காட்டவில்லை. 

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை யை ஒழிப்பதானால் 13 வது திருத்தத்தையும் இல்லாமல் செய்யவேண்டும் என்று சிங்கள தேசியவாத சக்திகள் கூறிவந்திருக்கின்றன. ஜனாதிபதியின் அதிகாரங்கள் ஆளுநர்கள் ஊடாக மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படுவதால் ஜனாதிபதி பதவியை ஒழித்தால் நாட்டின் ஐக்கியத்துக்கும் ஒருமைப்பாட்டுக்கும்   ஆபத்தை ஏற்படுத்தும் ; அதனால்  ஜனாதிபதி ஆட்சிமுறையையும் அந்த திருத்தத்தையும் ஏககாலத்தில் ஒழிக்கவேண்டும் என்று அந்த சக்திகள் விசித்திரமான ஒரு முடிச்சைப் போடுகின்றன. தற்போதைய நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச அந்த நிலைப்பாட்டின் முக்கியமான ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால், எதிர்காலத்திலும் 13 வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படக்கூடிய சூழ்நிலை வருமா என்பது சந்தேகமே.இது விடயத்தில் இந்தியாவினால் இலங்கையை வழிக்கு கொண்டுவர முடியவில்லை. பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு நிதயுதவிக்கு இலங்கை முற்றுமுழுதாக நம்பியிருக்கும் சர்வதேச சமூகத்தினால் இதை சாதிக்க இயலுமா?

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனிதகுல வரலாற்றில மிகப் பெரிய ஜனநாயகச்...

2024-04-15 14:15:52
news-image

நாட்டை பேராபத்தில் தள்ளுகிறார் 'மைத்திரி'

2024-04-15 09:49:17
news-image

பஸிலின் இடத்தில் நாமலை வைத்த மகிந்த…!...

2024-04-10 15:23:29
news-image

கச்சதீவும் மோடியும்

2024-04-08 16:04:18
news-image

காவிந்தவின் இராப்போசன விருந்தில் ஜனாதிபதி

2024-04-08 10:10:33
news-image

யானை - மனித முரண்பாடும் அதிகரிக்கும்...

2024-04-05 17:47:10
news-image

ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமான தேசிய வேட்பாளர்...

2024-04-04 13:20:01
news-image

நாமலின் நியமனத்தால் கடும் விரக்தியில் சமல்

2024-04-01 11:03:34
news-image

நாட்டு மக்களின் விவேகத்தை நிந்தனை செய்யும்...

2024-03-28 12:02:53
news-image

இந்திய - சீன மேலாதிக்க போட்டியின்...

2024-03-28 10:03:53
news-image

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் :...

2024-03-24 17:29:22
news-image

'நிலைப்பாட்டை அறிவிப்போம்' : ரணிலிடம் கூறிய...

2024-03-24 11:48:14