சனத்தின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து லெஜெண்ட்ஸை வீழ்த்தியது இலங்கை லெஜெண்ட்ஸ் 

Published By: Vishnu

14 Sep, 2022 | 11:31 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

சனத் ஜயசூரியவின் அபார பந்துவீச்சு திறன் காரணமாக இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் அணியுடனான 5 ஆவது லீக்  போட்டியில் 7 விக்கெட்டுக்களால் இலங்கை லெஜெண்ட்ஸ் அணி இலகுவான வெற்றியை ஈட்டியது.

வீதி பாதுகாப்பு குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருபதுக்கு 20 கிரிக்கெட் வடிவிலான வீதி பாதுகாப்பு உலகத் தொடர் (Road Safety World Series) இரண்டாவது தடவையாகவும் இந்தியாவில் நடத்தப்பட்டடு வருகிறது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆபிரிக்கா,  மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவற்றின் லெஜெண்ட்ஸ் அணிகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்கின்றன. 

இத்‍தொடரின் 5 ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் அணிகள் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மோதிக்கொண்டன.  

இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான கான்பூரில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இங்கிலாந்து அணி இலங்கை பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு காரணமாக 19 ஓவர்கள் நி‍றைவில் 78 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.  

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து சார்பாக அணித் தலைவர் இயன் பெல் 15 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் சிறந்த ஆற்ற‍லை வெளிப்படுத்திய சனத் ஜயசூரிய 4 ஓவர்கள் வீசியதுடன், 2 ஓட்டமற்ற ஓவர்கள், 3 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை சாய்த்தார். இவரைத் தவிர நுவன் குலசேகர, சத்துரங்க டி சில்வா இருவரும் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்று மெதுவாக துடுப்பெடுத்தாடி 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 79 ஓட்டங்களை ‍பெற்று 7 விக்கெட்டுக்ளால் வெற்றியீட்டினர். துடுப்பாட்டத்தில் தரங்க (23), டில்ஷான் முனவீர (24),  திலகரட்ண டில்ஷான் (15) ஓரளவு ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர். சனத் ஜயசூரியவின் துடுப்பெடுத்தாட வராததனால், அவரின் துடுப்பாட்டத்தை ரசிக்க வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே  மிஞ்சியது. எனினும், அவர் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு போட்டியின் ஆட்ட நாயகனாக  தெரிவு செய்யப்பட்டமை  அவரின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

முன்னதாக  அவுஸ்திரேலியாவுடன் விளையாடிய முதல் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன், தற்போது  4 புள்ளிகளை பெற்றுள்ள இலங்கை லெஜெண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.   இலங்கை  லெஜெண்ட்ஸ் தனது மூன்றாவது ‍ போட்டியில் எதிர்வரும் 17 ஆம் திகதியன்று தென் ஆபிரிக்க லெஜெண்ட்ஸ் அணியை சந்திக்கவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்