(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

ஐக்கிய இலங்கைக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் எனத்தெரிவித்த சுற்றுலாத்துறை ,கிறிஸ்தவ விவகாரங்கள் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க வடக்கில் மீண்டும் எந்தவொரு வன்முறையும் உருவாவதற்கு இடமளிக்க முடியாது எனவும் உறுதிபடத்தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2017ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நான்காம் நாள் விவாதத்தின் ஆரம்ப உரையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எஸ். சிறிதரன் நிகழ்த்தியதைத் தொடர்ந்து ஆளும் தரப்பில் உரையாற்ற ஆரம்பித்த அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிடுகையில் ,

தற்போதைய தேசிய  அரசாங்கமானது புதிய அரசியலமைப்பை இயற்றி நியாயபூர்வமான முன்னெடுப்புகளை உறுதிசெய்யும். அனைத்து விடயங்களிலும் நாம் நியாயபூர்வமான செயற்பாடுகளையே மேற்கொள்வோம். 

குறிப்பாக ஐக்கிய இலங்கைங்கைக்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்பதை உறுதிபடக் கூறுகின்றோம். வடக்கில் காணிகள் மீளவும் கையளிக்கப்பட்டு வருகின்றன. வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை  வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

முன்னைய அரசாங்கம் இழைத்த செயற்பாடுகளுக்கு நாம் பொறுப்புக்கூற முடியாது. ஆனால்  அவ்வாறான விடயங்கள் மீண்டும் இடம்பெற இடமளிக்கப்பட மாட்டாது. தமிழ் மக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்க நாம் செயற்படுவோம். குறிப்பாக அமைதியான முறையில் அனைத்தும் மேற்கொள்ளப்படும். வடக்கில் மீண்டும் எந்தவொரு வன்முறையும் உருவாவதற்கு இடமளிக்க முடியாது என்றார்.