(லியோ நிரோஷ தர்ஷன்)

ஆட்சி மாற்றங்கள் இரு நாட்டு உறவுகளை பாதிப்பதாக அமைந்து விட கூடாது . இலங்கையின் அபிவிருத்தி பணிகளில் சீனா வெளிப்படையானதும் தனித்துவமானதுமான ஒத்துழைப்புகளையே என்றும் வழங்கும் என  இலங்கைக்கான சீன தூதுவர் யீ ஷியான்லியங் தெரிவித்தார். 

கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இன்று இடம்பெற்ற சீன - இலங்கை வர்த்தக  கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இலங்கைக்கான சீன தூதுவர் யீ ஷியான்லியங் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவு என்பது வெறுமனே இரு நாடுகளுக்கு  உடையதாக கருதப்பட முடியாது. அது நட்பு ரீதியானதும் ஆழமானதுமாகும். ஆட்சிகள் மாறலாம் . ஆனால்  அவை உறவுகளை பாதிப்பதாக அமைந்து விடக் கூடாது.  இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்பு போன்றே சீனா முழுமையான ஒத்துழைப்புகளை இலங்கைக்கு வழங்கி வருகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின்  சீன விஜயத்தின் ஊடாக இரு தரப்பிற்கு இடையில் காணப்படுகின்ற ஆழமான புரிதலை உணர முடிகின்றது.  இதனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் சீன தலைவர் இலங்கைக்கு அனைத்து பொருளாதார அபிவிருத்தி தேவைகளின் முழு அளவில் ஒத்துழைப்புகளை வழங்குமாறு எமக்கு அறிவுறுத்தியுள்ளார் என்றார்.