(க.கமலநாதன்)

வைத்திய துறையின் செயற்பாடுகள் தற்போது ஸ்தம்பித்துள்ளன. வைத்திய சேவை சார்ந்த நிகழ்விற்கு அழைப்பு விடுத்தும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹீபால வருகை தரவில்லை.

 எனவே பொறுப்பற்ற அதிகாரியான அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள் என தாதியர் சங்கத்தின் தலைவர் முரதொடுவாவே ஆனந்த தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார்.

பொது தாதியர் சங்கத்தின் 47 ஆவது ஆண்டு விழா நிகழ்வு இன்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடத்தில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய தேரர்,

இன்று வைத்திய சேவைகளில் திருப்பியடையும் நிலைமை இல்லை. வைத்திய சேவைக்குள்  பல்வேறு சிக்கல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த சிக்கல்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹீபாலவின் அசமந்த போக்கே பிரதான காரணமாகும்.

இன்று வைத்திய சேவைகளின் பிரதான பகுதியினரான தாதியர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் பங்கேற்குமாறு அவருக்கு அழைப்பிதலும் அனுப்பியிருந்தோம் ஆனபோதிலும் அவர் நிகழ்வில் பங்கேற்க தவறியுள்ளார். இவர் போன்றதொரு மோசமான சுகாதார சேவைகள் பணிப்பளாரை நாம் எங்கும் கண்டதில்லை.

சுகாதார தரப்பிற்கு ஏதேனும் பிரச்சினைகள் தோன்றுகின்ற போதிலும் அவர் ஒரு பொம்மையை போன்றே செயற்படுகின்றார். தீர்க்கமான முடிவுகள் எவற்றையும் உடனடியாக அவர் எடுக்காமையே இன்று வைத்திய சேவைகள் முகம் கொடுக்கின்ற பல நெருக்கடிகளுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளன. 

தற்போது இந்நிகழ்வில் முன்னாள் சுகாதார அமைச்சரும் இந்நாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவும் தற்போதைய சுகாதார  அமைச்சருமான ராஜித சேனாரத்னவும் அமர்ந்துள்ளீர்கள் எனவே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹீபாலவை உடனடியாக பதவி நீக்கம் செய்யுங்கள் என்ற கோரிக்கை முன்வைக்கிறேன் என்றார்.