மக்களிடம் இருந்து துருவப்படும் ராஜாக்கள்

By Vishnu

10 Sep, 2022 | 06:52 AM
image

ஏ.எல்.நிப்றாஸ்

மாட்டு வண்டில்கள் புழக்கத்தில் இருந்த காலத்தில், அவை வீதிகளில் பயணிக்கும் போது அதற்குக் கீழால் பூனைக்குட்டிகளும் அதனோடு கொஞ்ச தூரம் சேர்ந்து பயணிக்கும். பூனைகள் மாடுகளின் நிழல்களின் கீழாக செல்கையில், அந்த நிழல் தன்னுடையது என்றும், தான் உருவத்தில் பெரிய, பலமானவன் என்றும் நம்புமாம். 

அதுமட்டுமன்றி, இந்த உண்மை தெரியாத பூனைகள், இந்த ஒட்டுமொத்த மாட்டு வண்டிலையும் அதிலுள்ள சுமையையும் தான்தான் இழுத்துக் கொண்டு போகின்றேன் என்று நினைத்து தற்பெருமை கொள்ளும் என்று ஒருகதை சொல்வார்கள். 

முஸ்லிம் தலைவர்கள், எம்.பி.க்கள் முதற்கொண்டு உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் வரை 99சதவீதமான அரசியல்வாதிகளின் நிலைப்பாடு கிட்டத்தட்ட இதுதான். 

அதாவது, முஸ்லிம் சமூகம் தனது அரசியல் தலைமைத்துவத்திலேயே இயங்குகின்றது என்று முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த சமூகத்தின் பிரச்சினைகளை, சுமைகளை சுமந்து கொண்டு இதனை தான் முன்னோக்கி இழுத்துக் கொண்டு செல்கின்றேன் என்று முஸ்லிம் தலைவர்கள் நம்புகின்றார்கள். 

ஆனால் இது மேலே சொன்ன கதையைப் போல அதுவொரு மாயையாகும். இந்த சமூகத்தின் ஓட்டத்தோடு சில போதுகளில் அவர்களும் இணைந்து பயணிக்கின்றார்கள். ஓரிரு அரசியல்வாதிகள், இக்கட்டான சில நேரங்களில் முன்வந்து சமூகத்தின் சுமையை தூக்குவதற்கு கைகொடுத்து உதவுகின்றார்கள் என்பதை மறந்து விட முடியாது. 

ஆயினும், பொதுவில் முஸ்லிம் சமூகம் ஒரு வண்டிலைப் போல தன்பாட்டில் பயணித்துக் கொண்டே இருக்கின்றது. அதற்குக் கீழால் போகின்ற பூனைகள் போலவே அநேகமான முஸ்லிம் அரசியவ்வாதிகள் இருக்கின்றார்கள். 

மேலே உள்ள மாடுகளின் நிழல் சற்று முன்னோக்கி நகர்கின்ற போதுதான் பலருக்கு இந்த உண்மை புரிகின்றது. ‘இந்த வண்டிலை அதாவது முஸ்லிம் சமூகத்தின் சுமையையும் அபிலாசைகளையும் நாம் முன்கொண்டு செல்லவில்லை. மாறாக, அதுவாக தன்பாட்டில் போய்க் கொண்டிருக்கின்றது’ என்பதை புரிந்து கொண்டவர்களாக, சற்று வேகமாக ஓடிவந்து, முன்னோக்கிச் செல்லும் நிழலின் கீழ் இணைந்து கொள்கின்றார்கள். 

அரசியல் என்பது எல்லாக் காலத்திலும் உயிரோட்டமாகப் பேணப்பட வேண்டிய ஒரு விடயமாகும். சீசன் வியாபாரம் போல அதனைச் செய்ய முடியாது. அப்படிச் செய்வதால் குறிப்பிட்ட அரசியல்வாதிகள் எம்.பி. அல்லது அமைச்சுப் பதவிகளில் கொஞ்சக் காலம் நீடித்திருக்கலாமே தவிர, அதற்கப்பால் சமூகத்திற்கு பெரிதாக எதுவும் நல்லது நடக்காது. 

முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை, நீண்டகால எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்ய முடியாது. தமது மக்களுக்கு ஏற்படுகின்ற நீண்டகால நெருக்கடிகள், உரிமை மறுப்புக்கள், புறக்கணிப்புகள், பாகுபாடுகளுக்கு எதிராக பலமாக போராடி வெற்றி பெறமுடியாது. 

இதன் பின்விளைவாக, காலவோட்டத்தில் முஸ்லிம் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் மக்கள் மனங்களில் இருந்து நிஜமாகவே தூரமாகி அதன்மூலம் தமது கோட்டைகளை இழக்க நேரிடுவதுடன், நீண்டகாலத்தில்  ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் தலைநிமிர்ந்து வாழமுடியாத நிலை ஏற்படும் ஆபத்து உள்ளது. 

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு தேர்தல் காலங்களில் இருக்கின்ற சமூக அக்கறையும் உற்சாகமும் மக்கள் தொடர்பும், தேர்தலுக்குப் பின்னர் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவதைக் காண்கின்றோம். அவர்கள் சமூகத்தைப் பற்றிப் பேசுவது என்றால், ஒன்று தேர்தல் வரவேண்டும், அல்லது பிரச்சினை முற்றி தலைக்கு மேலால் போக வேண்டும். 

களநிலைமைகள் எல்லாம் தமக்குச் சாதகமாகவும் இருக்கும்போது மட்டுந்தான் முஸ்லிம் அரசியல்வாதிகள் சுறுசுறுப்பான அரசியலைச் செய்வார்கள். அநேகமான அரசியல்வாதிகளுக்கு அமைச்சுப் பதவிகள் அல்லது ஏதாவது அதிகாரங்கள் கிடைத்தால் மாத்திரமே மக்களுக்கு சேவையாற்ற நினைக்கின்றார்கள். 

இதனால், மற்றைய காலங்களில் தமது தொலைபேசிகளுக்குக் கூட பதிலளிக்க முடியாமல், அரசியல் ஜடங்களைப் போல இருக்கின்றார்கள். அல்லது திருட்டுப் பூனைகளைப் போல இரகசியமாக நகர்ந்து செல்கின்றார்கள். மறுபுறத்தில், பெருமளவான முஸ்லிம் மக்களும் அதிகாரம் இருக்கின்ற அரசியல்வாதிகளுக்குப் பின்னாலேயே போக விரும்புவதையும் அவதானிக்க முடிகின்றது. 

இதனால், ஆரோக்கியமற்ற அரசியல் கலாசாரம் ஒன்றின் ஊடாக முஸ்லிம் சமூகம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் ஆளுமைகளுக்குப் பதிலாக அரசியல் வியாபாரிகளும் ஏமாற்றுப் பேர்வழிகளும் ‘டீல்’ மன்னர்களும் இப்போது அதிகரித்துள்ளனர். அத்துடன் கடந்த பல வருடங்களாக சமூகம்சார் அரசியலில் பாரிய இடைவெளியும் தேக்கநிலையும் உணரப்படுகின்றது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், கொரோனா அலைகள், பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பங்கள் என்று 2019இலிருந்து இன்று வரை, இலங்கையில் எந்தவொரு முறைமையும் சரிவர இயங்கவில்லை. இந்தப் பின்னணியில், சாதாரணமான காலங்களிலேயே ஒரு மந்தமான அரசியலைச் செய்து பழக்கப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

மஹிந்தவையா, சஜித்தையா, ரணிலையா ஆதரிப்பது என்ற மனப்போராட்டத்திலேயே பலரது காலம் கழிந்து விட்டது. யாரைத்தான் நம்புவது? அமைச்சுப் பதவி கிடைக்குமா? என்ற குழப்பத்தில் எம்.பி.க்களின் பொழுதுகள் போகின்றன. சில முஸ்லிம் தலைவர்களுக்கு கட்சியையும் கச்சையையும் காப்பாற்றுவதே பெரும்பாடாக இருக்கின்றது. 

இந்தப்பின்புலத்தில் பல முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது கோட்டைகளை இழந்து, அரசியல் சூனியத்திற்குள் தள்ளப்படும் நிகழ்தகவுகள் அதிகரித்துள்ளன.  

இதனை அவர்களும் உணரத் தொடங்கியுள்ளதால், எஞ்சியதைக் காப்பாற்றுவோம் என்ற ஞானம் சிலருக்கு பிறந்துள்ளது. சிலர் பதவிகளை தக்கவைக்கவும் சிலர் கிடைப்பதை சுருட்டிக் கொண்டு ஒதுங்கிக் கொள்ளவும் மனக்கணக்குப் போடுகின்றனர்.  

முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் மரணித்தபோது இருந்த எம்.பி.க்களின் எண்ணிக்கை, அரசியல் பலம் எல்லாம் வெகுவாகக் குறைந்துள்ளது. முஸ்லிம் அரசியல் இந்தளவுக்கு பலமற்றுப் போனதற்கு ‘மக்களை மறந்த’ அரசியல்தான் இதற்கு அடிப்படைக் காரணமாகும். 

பிரதான முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மட்டுமன்றி அவர்களுக்கு கீழுள்ள இரண்டாம், மூன்றாம் நிலை அரசியல்வாதிகள், எடுபிடிகள், இணைப்பாளர்கள், ஊடக தொடர்பாளர்கள், அமைப்பாளர்கள், பேஸ்புக் போராளிகள் மட்டுமன்றி, கண்மூடித்தனமாக வாக்களிக்கின்ற முஸ்லிம் மக்களும் இதற்குக் வழிகோலியுள்ளார்கள்.  

இந்த நெருக்கடியான காலப்பகுதியில் கூட தமக்குக் கிடைத்த வித்தியாசமான வாய்ப்புக்களைப் பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்து, உதவி செய்து, முஸ்லிம் சமூகத்திற்காக குரல்கொடுத்து,  தங்களது கோட்டைகள் சரியாதவாறு இராஜியங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான பணிகளை முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டும். 

நாட்டில் எல்லாம் சரியாக இருக்கும்போதுதான் நாங்கள் அரசியல் செய்வோம் என்றால், எம்.பிக்களும் தலைவர்களும் எதற்கு? எல்லா பொறிமுறைகளும் சரியாக இருக்கும் என்றால், எல்லா விவகாரங்களும் நீதி நேர்மையுடன் நடக்குமென்றால், எல்லாம் தானாகவே நடந்து விடுமே.  

தமது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வது ஒருபுறமிருக்க முஸ்லிம் சமூகத்திற்கான அரசியலை பாதுகாக்க வேண்டிய பாரிய தார்மீகப் பொறுப்பும் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இருக்கின்றது. இதில் முதலாவது விடயமானது இரண்டாவது விடயத்திலேயே தங்கியிருக்கின்றது. ஆனால் அவை இரண்டுமே நடக்கவில்லை.  

இது பற்றி அவர்களிடம் கேட்டால் ‘இப்போது ஒன்றும் செய்ய முடியாது, களநிலைமைகள் சரியில்லை’ என்று கூறுகின்றார்கள். இதுபோன்ற கதைகளைத்தான் இரு வருடமாக அல்ல இருபது வருடமாக வேறுவேறு தோரணைகளில் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.   

எனவே, தேசிய அரசியலில் மக்கள் மனங்களில் இருந்து ராஜபக்ஷக்கள் தூரமானதை விட, முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்தின் மனங்களில் இருந்து கடுமையதக துருவப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.  ‘அவர்கள்’ அடைந்த ‘பெயிலை’ விட இது நாட்பட்டதும் கனதியானதுமாகும். 

இதனை முஸ்லிம்கள் சரியாக மனதில் வைத்து வாக்களித்தால் கடந்த கால தேர்தல்களில் ரணில் விக்கிரமசிங்க பெற்ற தோல்விகளை விட பலமான தோல்விகளை முஸ்லிம் அரசியல்வாதிகள் சந்திக்க நேரிடும். முஸ்லிம் அரசியலில் ராஜாக்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற பலர் தமது கோட்டைகளை, மட்டுமல்ல கோவணத்தை கூட இழக்க நேரிடலாம்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்