(சாரதா தில்லைநாதன்)
இன்று பொருளாதார சிக்கல் என்பது நாட்டுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்றது என்றால் அதை மறுப்பதற்கில்லை. ஒவ்வொரு காலைப்பொழுதும் ஏன் விடிகின்றது என்று எத்தனையோ வீடுகளில் உள்ள குடும்பத் தலைவர்கள் அங்கலாய்ப்பதை அன்றாடம் நாம் காண்கின்றோம். காரணம் எந்த தேவைக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் எத்தனையோ சிறுவர்கள் இரவு படுக்கைக்கு பசியுடன் செல்வதாகவும் அடுத்தவேளை உணவு எப்போது கிடைக்கும் என்று தெரியாமலும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது உண்மையிலேயே வேதனைக்குரிய விடயமாகவே இருக்கின்றது.
வாழ்க்கைச்செலவு என்பது வானுயர உயர்ந்து நிற்கின்றது. அதற்கு எவ்வாறு ஈடுகொடுத்து சமாளிப்பது என்பது புரியாமல் திக்கு முக்காடி மக்கள் நிற்கி்ன்றனர். பொருளாதார சுமை மின்னல் வேகத்தில் அதிகரிக்கின்றது. ஆனால் ஒவ்வொருவரின் வருமானம் அதே இடத்தில் தான் இருக்கின்றது. இவ்வாறான நிலைமை தொடர்ந்தால் எதிர்காலத்தில் பலவிதமான சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரிக்க ஏதுவாக இருக்கும்.
களவு, கொள்ளை, மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் என்பனவும் தலைதூக்க ஆரம்பிக்கும். வறுமையும் பசியும் ஒருவனை ஆட்கொள்ளும்போது எந்தவொரு செயலையாவது செய்து தன்னுடைய பசியையும் வறுமையையும் போக்க நினைக்கும் எத்தனையோ பேரை இன்று நாம் காணக்கூடியதாக உள்ளது. இன்று அதிகளவான பெண்கள் விபசாரத்தில் ஈடுபடுகின்றார்கள். பார்ப்பவர்களுக்கு இதுவெல்லாம் ஒரு .தொழிலாளா? என்று நினைக்கத்தோன்றும். ஆனால் இவ்வாறான ஒரு தொழிலில் பெண் ஈடுபடுகின்றாள் என்றால் அவளுடைய வறுமைதான் அங்கு முக்கிய காரணமாக இருக்கும். அதேபோன்று வயிற்றுப் பசியை போக்கிக்கொள்வதற்காக சிறுவர்கள் கூட பிழையான வழியில் செல்வதற்கு காரணமாக அமைந்து விடும். சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் இந்த சிறுவர்களின் இயலாமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சொற்ப பணத்தையோ, அல்லது உணவையோ கொடுத்து அவர்களின் தேவைகளுக்காக பயன்படுத்துகின்ற பல துர்ப்பாக்கிய நிகழ்வுகளும் அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. அதுவே அந்த சிறுவர்களின் எதிர்காலாத்தை சூனியமாக்கும் கொடூரங்களும் அரங்கேறத்தான் செய்கின்றது.
வறுமையின் கோரப்பசிக்கு இன்று எத்தனையோ குடும்பங்கள் இரையாகிக் கொண்டிருக்கின்றன. பிள்ளைகளுக்கு கொடுப்பதற்கு உணவு இல்லை, அவற்றை பெற்றுக்கொடுக்க தன்னால் முடியவில்லை. என்று எண்ணிய ஒரு சில குடும்பத்தலைவர்கள் தங்களுடைய உயிரையே மாய்த்துக்கொள்ளும் பரிதாப சம்பவங்களும் அண்மைக்காலங்களில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான செயல்களை கேட்கும்போது இதயம் கணக்கின்றது.
இந்த இக்கட்டான சூழ்நிலை என்று மாறும் என்று யாராலும் எதி்ர்வுகூறமுடியாது. அதனால் ஒவ்வொருவரும் தங்களுடைய வருமானத்தை அதிகரிக்கப்பதற்கு மாற்று வழிகளைத் தேடிக்கொள்ள முயற்சிக்கவேண்டும். வேலைக்கு செல்லாது வீடுகளில் இருக்கும் குடும்பப் பெண்கள் தங்களுடைய கணவனுக்கு ஒத்தாசையாக ஏதேனும் வருமானத்தை ஈட்டக்கூடிய சுயதொழில் முயற்சிகளில் ஈடபட எத்தனிக்கவேண்டும். வெறுமனே காலத்தையும் நேரத்தையும் வீண் கதை பேசுவதிலும், தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பதிலும் செலவிடாமல் தங்களால் செய்யக்கூடிய ஏதோவது ஒரு முயற்சியில் ஈடுபட்டு வருமானத்தை பெருக்குவதற்கு முயற்சிக்கவேண்டும். அவ்வாறு தங்களை ஏதோ வேலையில் ஈடுபடுத்திக்கொள்ளும்போது வீணான சிக்கல்களையும் தவிர்த்துக்கொள்ள முடியும்.
நவீனத்துவம் என்ற பெயரில் இன்று அநேகமான வீடுகளில் கடைகளில் விற்பனை செய்கின்ற உடன் உணவுகளில் அதிக நாட்டம் கொண்டுள்ளனர். அவற்றை வாங்குவது என்றால் தற்போதைய சூழ்நிலையில் அதிகளவில் பணம் செலவிட வேண்டியுள்ளது. அதனால் இயன்றவரை வீடுகளில் சமைத்த உணவுகளை பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும். அது உடல்நலத்துக்கும் கேடுவிளைவிக்காது. செலவையும் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும்.
எமக்கு கிடைக்கின்ற வருமானத்துக்கு ஏற்றவாறு எமது செலவுகளையும் சுருக்கிக்கொண்டு அதி முக்கிய தேவைகளுக்கு மாத்திரம் முன்னுரிமை அளித்தோமானால் இன்றைய பொருளாதார நெருக்கடியை ஓரளவுக்கு சமாளித்து வாழ்க்கையை கொண்டு நடத்த முடியும். அதைவிட்டு ஆடம்பரமாகவும், பிறர் செய்வதை நாமும் செய்யவேண்டும் என்ற போட்டியோடும் வாழ நினைத்தால் வாழ்க்கை என்பது சுமையாகத்தான் இருக்கும். இந்த சுமையான வாழ்க்கையை சுகமானதாக்குவது ஒவ்வொருவரினதும் கைகளில்தான் தங்கியுள்ளது என்பதை யாவரும் புரிந்து கொண்டால் நாளைய பொழுது நமக்கான நல்லபொழுதாக மலரும் என்பதில் ஐயமில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM