- பைஸ் -

''பள்­ளி­வா­சல்­கள் தாக்­கப்­பட்ட காலம் மலை­யே­றி­விட்­டது. இனி இந்த நாட்­டில் முஸ்லிம் மக்கள் சுதந்­தி­ர­மாக தமது மத கலாசார நட­வ­டிக்­கை­களை தொட­ரலாம். அதற்கு எமது நல்லாட்சி அர­சாங்கம் உத்­த­ர­வா­த­ம­ளிக்­கி­றது '' 

இப்­ப­­டித்தான் 2015 ஜன­வரி 08 ஆட்சி மாற்­றத்தின் பிற்­பாடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவும் சொன்­னார்கள். ஏன் முஸ்லிம் அமைச்­சர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கூட இப்­ப­டிச் சொல்­லித்தான் முஸ்லிம் மக்­களை தைரி­ய­மூட்­டி­னார்கள்.  முஸ்­லிம்கள் பெருமெ­டுப்பில் இந்த அர­சாங்­கத்­திற்கு வாக்­க­ளித்­ததும் இந்த எதிர்­பார்ப்­பில்­தான்.

ஆனால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி­யி­ருக்­கி­றது. இப்­போது நடப்­ப­வற்­றிற்கும் அன்று நடந்­த­வற்­றிற்­குமி­டை­யி­ல் பாரிய வேறு­பா­டுகள் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்­லை. 

பள்­ளி­வா­சல்கள் மீதான தாக்­கு­தல்கள் மீளவும் தலை­யெ­டு­க்க ஆரம்­பித்­துள்­ள­ன. கடந்த ஒரு வார காலத்­தினுள் மாத்­திரம் இரு வேறு பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டு­ள்­ள­ன. மீண்டும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்புப் பேச்­சுக்கள் அதி­க­ரித்­துள்­ளன. புறக்­கோட்டை முதல் பேஸ் புக் வரை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­­ரான பௌத்த கடும்போக்கு சக்திகளின் வசை­பா­டல்களே பரவிக் கிடக்­கின்­ற­ன.

குரு­நாகல் நகர எல்­லைக்குள் அமைந்­தி­ருக்கும் தெலி­யா­கொன்ன ஜும்ஆ பள்­ளி­வாசல் கடந்த 04.11.2016 வெள்­ளிக்­கி­ழமை இரவு கல்­லெ­றிந்து தாக்கி சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

சி.சி.ரி.வி. கமரா பதி­வு­க­ளின்­படி தாக்­கு­தல்­தா­ரிகள் மகேந்­திரா ரக கெப் வண்­டி­யொன்றில் வந்­துள்­ளனர். வந்த மூவரில் இருவர் இறங்கி கற்­களால் பள்­ளி­வா­சலை தாக்­கி­யுள்­ளனர்.இதற்­காக கற்­களை அவர்கள் தம்­முடன் கொண்டு வந்­துள்­ள­னர். அவர்கள் ரீ சேர்ட்டும் தலையில் கெப்பும் அணிந்து காணப்­ப­டு­கின்­றனர் என குரு­நாகல் பொலிஸார் தெரி­வித்­துள்­ள­னர். சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தி­­ரு­ந்­த­னர். எனினும் இச் சம்­பவம் நடந்து ஒரு வாரம் கடந்து விட்ட போதிலும் இது­வரை எவ­ருமே கைது செய்­யப்­ப­ட­வில்­லை.

அடுத்து, நிக்க­வ­ரெட்­டிய நகர ஜும்ஆப் பள்­ளி­வாசல் மீது கடந்த திங்கட்­கி­ழமை அதி­காலை பெற்றோல் குண்டுத் தாக்கு­தல் நடத்­தப்பட்­டது.   பள்­ளி­வா­சலின் பிர­தான வாயிலும் கேட்டும் மூடப்­பட்­டி­ருந்த நிலையில் நுழைவாயிலின் யன்­ன­லுக்கு மேல் பகுதி கண்­ணாடி உடைக்­கப்­பட்டு 5 பெற்றோல் குண்­டுகள் பள்­ளி­வா­ச­லுக்குள் எறி­யப்­பட்­டுள்­ளன.

இரு பெற்றோல் குண்டுகள் வெடித்­துள்­ள­துடன் மூன்று குண்டுகள் பள்­ளி­வா­ச­லுக்குள் வெடிக்­காத நிலையில் பொலி­ஸா­ரினால் மீட்­கப்­பட்­டுள்­ளன.

இச்­சம்­பவம் கடந்த திங்கட் கிழமை அதி­காலை வேளையில் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் இதனால் எவ­ருக்கும் காயங்கள் ஏற்­ப­டாத போதும் பள்­ளி­வா­சலின் சொத்­துக்­க­ளுக்கு சேதம் ஏற்­பட்­டுள்­ள­தாகவும் பொலிஸார் தெரி­விக்கின்­ற­னர். இந்த சம்­பவம் தொடர்­பா­கவும் பொலிசார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கின்ற போதிலும் இது­வரை சந்­தேக நபர்கள் அடை­யா­ளம் காணப்­ப­ட­வில்­­­லை.

இதே போன்றுதான் அண்­மைக்கா­ல­மாக மீண்டும் முஸ்­லிம்­களை சீண்டும் வகை­யி­லான கருத்­து­க்கள் சமூக வலைத்­த­­ளங்­களில் வல­ம் வர ஆரம்­பித்­துள்­ளன. குறிப்­பாக கடந்த வாரம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு முஸ்லிம் தனியார் சட்ட திருத்­­தத்தை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்­பாட்டம் ஒன்றை நடாத்­தி­யி­ருந்­தது. குறித்த ஆர்ப்­பாட்டம் புறக்­கோட்டை ரயில் நிலையம் வரை செல்லும் என்று அறி­வி­க்­கப்­பட்­டி­ருந்­ததால் அப் பகு­திக்கு முன்­கூட்­டியே சிங்­ஹலே அமைப்பின் ஆத­ர­வா­ளர்கள் சிலர் பதா­தை­க­ளு­டன் வருகை தந்­தி­ருந்­த­னர்.

எனினும் பொலிசார் தவ்ஹீத் ஜமா­அத்தின் ஆர்ப்­பாட்ட பேரணியை புறக்­கோட்­டைக்குச் செல்­லாது மாளி­கா­வத்தை பொலிஸ் நிலையம் முன்­பா­கவே தடுத்­து­விட்­டனர். எனினும் இங்கு உரை நிகழ்த்­திய தவ்ஹீத் ஜமா­அத்தின் செய­லாளர் ஞான­சார தேர­ரை கடு­மை­யான வார்த்தைப் பிர­யோ­கங்­களினால் தாக்­கி­யி­ருந்­தார்.

இவ­ரது கருத்­துக்கள் வெ ளியி­டப்­பட்ட அதே நேரத்தில் புறக்­கோட்­டையில் குழு­மி­யி­ருந்த சிங்­ஹ­லே ஆத­ர­வாளர் ஒருவர் முஸ்லிம்களுக்கு எதி­ரா­கவும் குறிப்­பா­க தவ்ஹீத் ஜமா­அத்­துக்கு எதி­ரா­கவும் கடும் வார்த்தைப் பிர­யோ­கங்­களை பயன்­ப­டுத்தி வசை­பா­டி­யி­ருந்­தார்.

மேற்­படி இரு தரப்பு கடு­ம்­போக்கு கருத்­துக்­களும் உட­ன­டி­யா­கவே சமூக வலைத்­த­ளங்­களை ஆக்­கி­ர­மித்­தன. இரு தரப்பு ஆத­ர­வா­ளர்­களும் கருத்­துக்­களால் கார­சா­ர­மா­க மோதி­க் கொண்­டனர். இக் கருத்­துக்­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் வகையில் மேலும் பல இன­வாதக் கருத்­துக்­களும் படு­மோ­ச­மான வார்த்தைப் பிர­யோ­கங்­களும் தொட­ராக வெளிப்­பட்­டன. இவை எரி­கிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் செய­லா­க­­வே அமைந்­த­ன.

இந் நிலை­யில்தான் புறக்­­கோட்டை ரயில் நிலையம் முன்­பாக சிங்­ஹலே உறுப்­பினர் ஒருவர் தெரி­வித்த கருத்­துக்­க­ளுக்கு எதி­­ராக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு புறக்­­கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்­பாடு ஒன்றைப் பதிவு செய்­தது. இத­னை­­ய­டுத்து கடந்த புதன் கிழமை சம்­பந்­தப்­பட்ட இரு­ தரப்­பி­ன­ரையும் வாக்­கு­மூ­­ல­ம­ளிக்க வரு­மாறு பொலிசார் அழைப்பு விடுத்­தி­ருந்­தனர். இதற்­க­மைய குறித்த நபர் சுமார் 200 பேர் கொண்ட தனது ஆத­ர­வா­ளர்­­க­ளுடன் பொலிஸ் நிலை­யத்­துக்கு வந்­த­துடன் மீண்டும் ரயில் நிலையம் முன்­பாக ஆர்ப்­பாட்டம் ஒன்­றையும் நடத்­தி­யி­ருந்­த­னர். இவ்­வாறு ஏட்­டிக்குப் போட்­டி­யாக இன்று இன­வாத கருத்­துக்­களும் செயற்பாடுளும் தலை­தூக்­கி­யி­ருக்­கின்­ற­ன.

மேற்­படி நிகழ்­வு­களின் எதி­­ரொ­லி­யா­கவே குரு­நாகல் மாவட்­டத்தில் ஒரே வாரத்தில் இரு பள்ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­ட­னவா எனும் சந்­தே­க­மும் வலுப் பெற்­றுள்­ளது. எனினும் இது தொடர்பில் பொலிஸ் விசா­ர­ணை­களில் எதுவும் கண்­ட­றி­யப்­ப­ட­­வில்­லை.

ஒரு வாரத்­திற்குள் குரு­நாகல் மாவட்­டத்தின் இரு வேறு பகு­தி­க­ளி­லுள்ள இரண்டு பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­மை­யினால் அம் மாவட்ட மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதே மாவட்டத்திலுள்ள மும்மானை எனும் முஸ்லிம் கிராமத்தை இலக்கு வைத்து பொதுபல சேனாவின் வழிகாட்டலில் ஒரு நீண்ட கால திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டமை நினைவிருக்கலாம். முஸ்லிம் பாடசாலைக்கு சொந்தமான காணியை தமக்கு வழங்க கோரி இனவாதிகள் பிரச்சினையை கிளப்பினர். இதனை பயன்படுத்தி அப் பகுதி முஸ்லிம்களின் வர்த்தகத்தை முடக்கினர். இந்த திட்டம் தமக்கு பாரிய வெற்றியளித்ததாகவும் இதேபோன்று ஏனைய பகுதிகளிலும் முயற்சித்தால் பௌத்தர்களின் ஆதிக்கத்தை பரவலாக்கலாம் என்றும் சில மாதங்களுக்கு முன்னர் கொரியாவில் நடைபெற்ற சந்திப்பொன்றில் ஞானசார தேர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறான திட்டங்களின் தொடரில்தான் பள்ளிவாசல் தாக்குதல்கள் இடம்பெறுகின்றனவா எனும் கேள்வி எழுகிறது.

இதன் காரணமாக இம்­மா­வட்­டத்­தி­லுள்ள அனைத்து பள்­ளி­வா­சல்­க­ளுக்கும் இரவில் பொலிஸ் பாது­காப்­ப­ளிக்­கு­மாறு சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாக­ல ரத்ணா­யக்­கவிடம் குரு­நாகல் மாவட்ட முஸ்­லிம்கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

அதே­போன்­று­தான் அமைச்­ச­ர­வை­யிலும் இந்த விவ­காரம் குறித்து அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. வெளி விவகார ­அமைச்சர் மங்­கள சம­ர­வீர நாட்டில் பௌத்த தீவி­ர­வா­தமும், முஸ்லிம் தீவி­ர­வா­தமும் தலை­தூக்­கி­யுள்­ள­தாக அமைச்­ச­ர­வை­யில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். 

'‘முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்­சிக்­கா­லத்தில் செயற்­பட்­டு­வந்த பௌத்த தீவி­ர­வாத குழுக்கள் மீண்டும் தலை­தூக்­கி­யுள்­ளன. அதே­போன்று இதற்கு ஏட்­டிக்குப் போட்­டி­யாக ஒரு முஸ்லிம் தீவி­ர­வாத குழுவும் இறங்­கி­யுள்­ளது. இக்­கு­ழுக்கள் அரசின் ஸ்திரத்­தன்­மையை இல்­லாமற் செய்யும் முயற்­சி­களில் ஈடு­பட்­டுள்­ளன. ஒரு முஸ்லிம் தீவி­ர­வாத குழு ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டுள்­ளது. அர­சுக்கு விரோத அறிக்­கை­களை வெளி­யிட்­டு ­வ­ரு­கி­றது. இக்­கு­ழுக்­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது '' என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதன்­போது கருத்து வெளியிட்­டுள்ள  அமைச்சர் ஹக்கீம் '' நாட்டில் மஹிந்த ராஜபக் ஷ அரசின் காலத்தில் போன்று தற்போது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் அதி­க­ரித்து வரு­கின்­றன.இந்தவாரம் இரண்டு பள்­ளி­வா­சல்கள் தாக்­கப்­பட்­டுள்­ளன. குரு­நாகல் மாவட்­டத்தில் தெலி­யா­கொன்­ன­யிலும், நிக­வெ­ரட்­டி­யிலும் இச்­செ­யல்கள் அரங்­கே­றி­யுள்­ளன. இச்­செ­யற்­பா­டு­க­ளுக்கு அர­சாங்கம் இட­ம­ளிக்­கக்­கூ­டாது. வெளி­நாட்­ட­மைச்சர் குறிப்­பிட்ட முஸ்லிம் அமைப்புடன் எமக்கும் உடன்­பா­டில்லை. ஆர்ப்­பாட்­டங்­க­ளையும் அறிக்­கை­க­ளையும் இந்தச் சூழ்­நி­லையில் அங்­கீ­க­ரிக்க முடி­யாது. குறித்த முஸ்லிம் அமைப்பின் செயற்­பா­டு­களை நாம் கண்­டிக்­கிறோம்.  அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபை முஸ்லிம் சிவில் அமைப்பின் பிர­தி­நி­தி­களை அழைத்து முஸ்­லிம்­களின் சம­காலப் பிரச்­சி­னைகள் அவற்­றுக்­கான தீர்­வுகள் பற்றி ஆராய்ந்து வரு­கி­றது'' என ஹக்கீம் இதன்­போது விளக்­கி­யுள்­ளார். 

அதே­ போன்­றுதான் ஐக்­கிய தேசியக் கட்­சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தலை­தூக்கும் இன­வாதம் தொடர்பில் ஒன்­று­கூடிப் பேசி­யுள்­ளனர். இது தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை சந்­தித்து அவ­ரது கவ­னத்தை ஈர்க்­க­வுள்­ள­தாகவும் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

குரு­நாகல் சம்­ப­வங்கள் இவ்­வா­றி­ருக்க தம்­புள்­ளை­யிலும் எதிர்­வரும் 19ஆம் திகதி ஆர்ப்­பாட்­ட­மொன்­றுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்ளது. 2012 ஏப்ரலில் இடம்பெற்ற தம்­புள்ளை பள்­ளி­வாசல் விவ­கா­ர­மே உள்­நாட்­டி­லும் சர்­வ­தே­சத்­திலும் அதிகம் பேசப்­பட்ட பள்­ளி­வாசல் தாக்­குதல் சம்­ப­வ­மாகும். எனினும் இப் பள்­ளி­வாசலை அங்­கி­ருந்து அகற்றி புதிய இடத்தில் நிர்­மா­ணிப்­ப­தற்கு இணக்கம் காணப்­பட்டு காணியும் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந் நிலையில் குறித்த காணியில் புதி­தாக புதி­தாக பள்­ளி­வா­ச­லொன்றை நிர்­மாணிப்­ப­தற்கு எதி­ராகவே இவ் ஆர்ப்­பாட்டம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. 

இதனால் அப் பகுதி முஸ்லிம்கள் அச்­ச­ம­டைந்­­துள்­ளதுடன் தம்­புள்ளை பள்­ளி­வா­ச­லுக்கும் முஸ்­லிம்­க­ளுக்கும் பாது­காப்பு வழங்­கு­மாறு தம்­புள்ளை பள்­ளி­வாசல் நிர்­வாகம் பொலிஸில் முறைப்­பாடு ஒன்­றினைச் செய்­துள்­ளது.

தம்­புள்­ளையில் அர­சாங்கம் பள்­ளி­வாசல் நிர்­மா­ணத்­துக்கு காணி ஒதுக்­கி­யுள்ள நிலையில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள இவ்­ஆர்ப்­பாட்டம் இனங்­க­ளுக்­கி­டையில் முறுகல் நிலையைத் தோற்­று­விக்கும் எனவும் சக­வாழ்­வினைப் பாதிக்கும் என்­பதால் குறிப்­பிட்ட ஆர்ப்­பாட்­டத்தைத் தடை­செய்­யு­மாறும் பொலி­ஸா­ரிடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இதே போன்றுதான் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில், இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட தமிழ் மக்கள் வாழும் பிரதேச்தை அண்டிய மாயக்கல்லி மலையில் திடீரென புத்தர் சிலை வைக்கப்பட்டமை அங்கு பெரும்பான்மையாக வாழும் முஸ்லிம்களையும் தமிழர்களையும் அச்சத்திலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. 

இச் சிலை வைக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட போதிலும் இதுவரை அதனை அகற்றவோ வேறு பகுதிக்கு இடமாற்றவோ நடவடிக்க எடுக்கப்படவில்லை. இது பற்றி மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் பேசப்பட்ட போதிலும் அதில் பங்கேற்ற அமைச்சர் தயா கமகே சிலையை அகற்றுவதற்கு சம்மதிக்கமாட்டேன் என்ற பாணியில் கருத்து வெளியிட்டிருக்கிறார். இந்த சிலை வைப்பின் பின்னணியில் தயா கமகே இருப்பதாக பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது. அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களாக தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தாலும் அங்கு தயாவின் கைகளே ஓங்கியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

தயா கமகே ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் என்ற வகையில் அவரது செயற்பாடு அம்பாறை வாழ் முஸ்லிம்களையும் தமிழர்களையும் அதிருப்தியுறச் செய்துள்ளதுடன் ஐ.தே.க. சிறுபான்மை ஆதரவாளர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அக் கட்சியின் முஸ்லிம் அமைச்சர்களுக்கும் எம்.பிக்களுக்கும் இந்த சிலை விவகாரம் தலையிடியை கொடுத்துள்ளது. இது தொடர்பில் தயா கமகேவை எச்சரிக்குமாறு கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஐ.தே.க முஸ்லிம் பிரதிநிதிகள் நேரில் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது.

இவ்வாறு நாட்டின் நாலா புறமும் மீண்டும் இனவாதம் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. அது கடும் சொற்களாகவும் கற்களாகவும் பெற்றோல் குண்டுகளாகவும் புத்தர் சிலைகளாகவும் வெளிப்பட்டு நிற்கிறது.இந் நிலை நீடிப்பது ஆரோக்கியமானதல்ல. 

எனவேதான் அரசாங்கம் இந்த விரும்பத்தகாத நகர்வுகளை கட்டுப்படுத்த உடனடியாக தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முஸ்லிம் மக்கள் உணர்ச்சிகளால் ஆளப்படுபவர்கள். பள்ளிவாசல் மீது எறியப்படும் கல் ஒன்றே அவர்களது தீர்மானத்தில் செல்வாக்குச் செலுத்தப் போதுமானது. ஒரு கல் இரண்டாகி பத்தாகிப் பலவாகுகையில் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் நல்லாட்சியை விட்டும் தூரமாகிவிடுவார்கள். அதனை தருணம் பார்த்துக் காத்திருக்கும் கடந்த கால இனவாதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். 

இந்நிலை தொடர்ந்தால் அடுத்த வருடம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களில் முஸ்லிம்களின் நிலைப்பாடு வேறுவிதமாகவே இருக்கும். அந்த நிலைப்பாட்டை நிச்சயம் முஸ்லிம் கட்சிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும். ஆனால் அது இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆரோக்கியமாக அமையப்போவதில்லை என்பது மட்டும் திண்ணம்.