பொன்னியின் செல்வன் ஓடியோ மற்றும் முன்னோட்டம் வெளியீடு

By Digital Desk 5

07 Sep, 2022 | 02:50 PM
image

இந்திய திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் பிரம்மாண்டமான படைப்புகளில், பான் இந்திய இயக்குநர்களில் முன்னணி வகிக்கும் படைப்பாளியான மணிரத்னம் இயக்கத்தில் தயாரான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் பாகத்திற்கான ஓடியோ மற்றும் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.

அமரர் கல்கி எழுதிய சரித்திர நாவல் 'பொன்னியின் செல்வன்'. அதே பெயரில் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாகி இருக்கிறது. 

இதனை லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சீயான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, ஜெயராம், சரத்குமார், விக்ரம் பிரபு, நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா துலிபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசைப்புயல்' ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'பொன்னி நதி..', 'சோழா சோழா..' என இரண்டு பாடல்களும், டீசரும் வெளியாகி கோடிக்கணக்கான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு புதிய சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த நட்சத்திரங்களான உலகநாயகன் கமல்ஹாசன், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர், ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பலர் பங்குபற்றினர். 

பொன்னியின் செல்வன் படத்தின் முன்னோட்டம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியிடப்பட்டது. தமிழில் உலகநாயகன் கமல்ஹாசனின் பின்னணி குரலுடன் முன்னோட்டம் வெளியானது.

பொன்னியின் செல்வன் படத்தில் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பங்கு பற்றி நடிகை ஐஸ்வர்யா ராய் பேசுகையில், '' எம்மை திரை உலகிற்கு இருவர் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மணிரத்னம். அவரது இயக்கத்தில் குரு ராவணன் என படங்களில் நடித்திருக்கிறேன் ஒவ்வொரு படத்திலும் ஆச்சரியப்படும்படியான படைப்பை வழங்கி வருகிறார் அவரின் உழைப்பு அபாரமானது. அவருடைய இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்திருக்கிறேன். நந்தினி கதாபாத்திரம் அவருடைய பார்வையில் சிறப்பாக இடம் பெற்றிருக்கிறது.'' என்றார்.

தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் முன்னோட்டத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. நாவலில் வாசித்த அனுபவத்தை திரையில் காட்சிகளாக விவரிக்கும் போது இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட தொழில்நுட்ப குழுவினரும், சீயான் விக்ரம் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களும், தங்களின் பொறுப்பினை உணர்ந்தும், நாவலின் மையக் கருத்தையும் உட்பிரகித்தும், தங்களின் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் பொன்னியின் செல்வன் படத்தின் முன்னோட்டத்திற்கு தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் ஏனைய இந்திய திரை உலகிலிருந்தும் ஏராளமானவர்கள் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

'பொன்னியின் செல்வன்' படத்தின் பாடல்கள், முன்னோட்டம் போன்றவை தமிழர்களின் அசலான வரலாற்று பாரம்பரியத்தை டிஜிட்டல் நேர்த்தியாக செதுக்கப்பட்டு இருப்பதால் அதனை காண்பதற்கான உளவியல் ரீதியிலான உந்துதல் அனைவருக்கும் உண்டாகி இருப்பதாக திரையுலகினர் அவதானிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right