(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம் வசீம்)
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்து, குடியுரிமையினை நீக்குமாறு பரிந்துரைக்கப்பட்ட உபாலி அபேரத்ன ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? உபாலி அபேரத்ன தலைமையிலான ஆணைக்குழு நீதிமன்ற கட்டமைப்பிற்கு அப்பாற்பட்டு செயற்பட்டு, நாட்டு மக்களின் வரி பணத்தை வீணடித்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் 07 ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்ற அமர்வு கூடியதை தொடர்ந்து விசேட கூற்றை முன்வைத்த போது மேற்கண்டவாறு சபை முதல்வரை நோக்கி வினவினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசியல் பழிவாங்களுக்குட்பட்டவர்கள் தொடர்பான விசாரணையை முன்னெடுப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் சர்ச்சைக்குரிய நிலைப்பாடு தோற்றம் பெற்றுள்ளமை குறித்து சபைக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2019ஆம் ஆண்டு நவம்பர் வரையான காலப்பகுதியில் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணையினை முன்னெடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதியால் ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி 2157 கீழ் 44 என்ற இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நியமிக்கப்பட்டது.
ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை 2020ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 08ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டதுஆணைக்குழு தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு செயற்பட்டுள்ளதுடன், நியாமற்ற முறையில் செயற்பட்டுள்ளதாகவும் சமூகத்தின் மத்தியில் பேசப்படுகிறது.
விசேடமாக இந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் பாரிய சிக்கல் நிலை காணப்படுகிறது.இலஞ்ச ஊழல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை சுய விருப்புடன் நீக்கி கொள்ளல் (வாபஸ் பெறல்),குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டு சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளல்,அத்துடன் அவர்களுக்கு நட்டஈடு வழங்கல் உள்ளிட்ட பரிந்துரைகளை ஆணைக்குழு அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது.
இலஞ்ச ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கு ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரை ஊடாக அனுசரனை வழங்கியுள்ளது.பெரும்பாலான பரிந்துரைகள் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன.மறுபுறம் ஊழல் மோசடி தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
விசேடமாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன,குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சானி அபேசேகர,அதே போல் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பெரும்பாலான அதிகாரிகளுக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதே போல் நிதி குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கும்,இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும்,குடியுரிமையினை இரத்து செய்யவும் உபாலி அபேரத்ன ஆணைக்குழவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சட்டமாதிபர் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும்,அவர்களின் குடியுரிமையினை இரத்து செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க உள்ளிட்ட உயர்மட்ட அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும்,குடியுரிமையை இரத்து செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நான் உட்பட பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் குடியுரிமையினை இரத்து செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.ஊழல் மோசடிக்கு எதிராக முறைப்பாடு செய்த எனது குடியுரிமையை நீக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதேபோல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதியின் ஆணைக்குழுவில் குற்றவாளி,அவரின் குடியுரிமையினை நீக்கவும்,வழக்கு தாக்கல் செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உபாலி அபேரத்னவின் ஆணைக்குழுவின் அறிக்கையை 'பைத்திய பூனையின் அறிக்கை'என விமர்சிக்கிறார்கள்.இந்த அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்தவும் குழு நியமிக்கப்பட்டது.அந்த ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.ஆணைக்குவின் அறிக்கையின் பரிந்துரையினை செயற்படுத்தவதற்கு எதிராக சானி அபேசேகர,ரவி வித்யாலங்கார உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த ஆணைக்குழுவினால் நாட்டின் அடிப்படை சட்டம் முறையற்ற வகையில் செயற்படுத்தப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு என்னவென்பதை அரசாங்கம் குறிப்பிட வேண்டும். இந்த ஆணைக்குழுவிற்காக பாரிய நிதி செலவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றம்,சட்டமாதிபர் திணைக்களம்,பொலிஸ் மற்றும்,நாட்டின் அடிப்படை சட்டம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட வகையில் உபாலி அபேரத்ன தன்னிச்சையாக செயற்பட்டார்.108 வழக்குகள் ஒருசில மாதங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன.நீதிமன்ற கட்டமைப்பில் வருட கணக்கில் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன.நாட்டு மக்களின் வரிபணத்தை இந்த ஆணைக்குழு வீணடித்துள்ளது.ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் மீதான நம்பிக்கையை உபாலி அபேரத்ன இல்லாதொழித்துள்ளார்,இவருக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM