(ஆர்.யசி)

அரசாங்கம் கொண்டுவந்துள்ள வரவு செலவுத்திட்டம் மக்களை எந்த வகையிலும் கஷ்டப்படுத்தாது, பொருளாதார சுமைக்குள் தள்ளும் எந்தவொரு நடவடிக்கையும் அரசாங்கம் மேற்கொள்ளாது. எனினும் அரசாங்கதின் செலவுகளை கட்டுப்படுத்தி நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதும் நாட்டின் கடன்களை கட்டுப்படுத்தி நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளவே இந்த வரவுசெலவு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

அரசாங்கம் கொண்டுவந்துள்ள வரவுசெலவு திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் சம்பிக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

வரவு செலவு திட்டத்தின் பிரதான நோக்கமே அரசாங்கதின் செலவுகளை கட்டுப்படுத்தி நாட்டின் வருமானத்தை அதிகரிப்பது. நாட்டின் கடன்களை கட்டுப்படுத்தி நாட்டை மீட்டெடுக்கும் வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல் மற்றும் நாட்டின் அபிவிருத்திக்காக செயற்படுதல் என்பனவாகும். அரச நிதி சார்  விடயங்களே வரவுசெலவு திட்டத்தின் பிரதானமாகும். விலைக்குறைப்பு வரி அறவீடுகள் என்பன வரவுசெலவு திட்டத்தின் உப காரணிகளாகவே உள்ளன. எனினும் அவை தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது. மக்களை பொருளாதார சுமைக்குள் தள்ளும் எந்தவொரு நடவடிக்கையும் அரசாங்கம் மேற்கொள்ளாது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.