இலங்கை முன்னேறுமா ? இந்தியா தக்கவைக்குமா ? இன்று முக்கிய போட்டி !

Published By: Vishnu

06 Sep, 2022 | 10:40 AM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆசிய கிண்ண (இருபது 20) கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை தகுதி பெறுமா என்பதையும் நடப்பு சம்பியன் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைக்குமா என்பதையும் தீர்மானிக்கும் இரண்டு அணிகளுக்கும் இடையிலான சுப்பர் 4 போட்டி இன்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ளது.

இப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால் இறுதிப் போட்டி வாய்ப்பை உறுதி செய்துகொள்ளும். இந்தியா வெற்றிபெற்றால் எஞ்சிய போட்டி முடிவுகளே இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் அணிகளைத் தீர்மானிக்கும்.

மீள் எழுச்சி பெற்று கடந்த இரண்டு போட்டிகளில் பங்களாதேஷ் (முதல் சுற்று), ஆப்கானிஸ்தான் (சுப்பர் 4) ஆகிய அணிகளினால் நிர்ணயிக்கப்பட்ட கணிசமான மொத்த எண்ணிக்கைகளை விரட்டிக் கடந்து வெற்றியீட்டிய இலங்கை, இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதாக இருந்தால் இந்தியாவுடனான போட்டியில் முழுத் திறமையை சகல துறைகளிலும் வெளிப்படுத்தி வெற்றி பெறுவது அவசியமாகும்.

மறுபுறத்தில் சுப்பர் 4 ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இந்தியாவின் இறுதிப் போட்டி வாய்ப்பு ஊசலாடிக்கொண்டிருப்பதால் இலங்கையுடனான இன்றைய போட்டியில்   என்ன விலைகொடுத்தேனும் வெற்றி பெற முயற்சிக்கும்.

எனவே, இன்றயை போட்டி முடிவு இரண்டு அணிகளுக்கும் தீர்மானம் மிக்கவை என்பதால் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று வீழ்த்த முயற்சிக்கும். அதேவேளை, நாணய சுழற்சியும் இப் போட்டி முடிவை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும்.

கடந்த இரண்டு வருடங்களில் இந்த மைதானத்தல் நடைபெற்ற 18 போட்டிகளில் 16இல் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய அணிகளே வெற்றிபெற்றுள்ளன.

 துபாயில் கடும் உஷ்ணம் நிலவுவதாலும் இரவு வேளையில் பனி பொழிவதாலும் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் அணிகளுக்கு சாதகமான பெறுபேறுகள் கிடைப்பதாலும் நாணய சுழற்சி இன்றைய போட்டியில் முக்கிய பங்காற்றும் என கருதப்படுகிறது.

எனவே நாணய சுழற்சியில் வெற்றிபெற்றால் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்யவுள்ளதாக இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்தார்.

'துபாய் ஆடுகளத்தில் எந்தவொரு பலம் வாய்ந்த அணியினாலும் நிர்ணயிக்கப்படும் மொத்த எண்ணிக்கையை எங்களால் கடந்து   வெற்றிபெற முடியும் என நான் நம்புகிறேன்.

 இரண்டாவதாகத் துடுப்பெடுத்தாடும் போது ஆடுகளத்தின் தன்மையை நன்கு புரிந்து சிறந்த வியூகங்களுடன் விளையாடக்கூடியதாக இருக்கும். கடைசியாக நடைபெற்ற போட்டிகளில் நாங்கள் வெற்றிபெற்றதற்கு இதுவே காரணம்' என தசுன் ஷானக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

'இந்தியா ஒரு திறமைவாய்ந்த, பலம்வாய்ந்த அணி என்பதை நாம் அறிவோம். அந்த அணியில் மிகச் சிறந்த துடுபாட்ட வீரர்கள் இடம்பெறுவதை சகலரும் அறிவர். ஆனால் எமது அணியும் அவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய வியூகங்களுடன் விளையாடக்கூடிய ஆற்றல் மிக்கதாகும். எமது நோக்கம் எல்லாம் இந்தியாவை வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதாகும்' என்றார் அவர்.

இலங்கையும் இந்தியாவும் ஒன்றையொன்று 25 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் எதிர்த்தாடியுள்ளன. அவற்றில் 17 போட்டிகளில் இந்தியாவும் 7 போட்டிகளில் இலங்கையும் வெற்றிபெற்றுள்ளன.

ஒரு போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. 

இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரண்டு அணிகளும் சந்தித்துக்கொண்ட 19 சந்தர்ப்பங்களில் இலங்கை 10 - 9 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.

நடப்பு ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் மூன்றாவது தொடர்ச்சியான வெற்றிக்கு குறிவைத்துள்ள இலங்கை, கடைசியாக இரண்டு போட்டிகளில் விளையாடிய அதே வீரர்களை களம் இறக்க எண்ணியுள்ளது.

எனினும் மாற்றம் இடம்பெறுவதாக இருந்தால் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியுள்ள சரித் அசலன்கவுக்கு பதிலாக தனஞ்சய டி சில்வா அல்லது அஷேன் பண்டார இணைக்கப்பட வாய்ப்புள்ளது.

அணிகள்

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், சரித் அசலன் அல்லது தனஞ்சய டி சில்வா அல்லது அஷேன் பண்டார, தனுஷ்க குணதிலக்க, பானுக்க ராஜபக்ஷ, தசுன் ஷானக்க (தலைவர்), வனிந்து ஹசரங்க டி சில்வா, சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க.

இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), கே. எல். ராகுல், விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷாப் பன்ட், ஹார்திக் பாண்டியா, அக்சார் பட்டேல், புவ்ணேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்த்ர சஹால்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35