(எம்.ஆர்.எம்.வஸீம்)

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் வகையிலேயே வரவு செலவு திட்டம் அமைந்துள்ளது. அத்துடன் உலக நாணய நிதியத்தின் நிபந்தனைகளை உறுதிப்படுத்தி மக்கள் மீது சுமை ஏற்படுத்தப்பட்டுள்ளது என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமபன திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

அரசாங்கம் சமர்ப்பித்துள்ள அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் உலக நாணய நிதியத்தின் நிபந்தனைகள் அனைத்தையும் உறுப்படுத்தியுள்ளது. அத்துடன் அதன் சுமையை மக்கள் மீது சுமத்தியுள்ளதை காணமுடிகின்றது. அதாவது வரி விதிப்பும் அமுலாக்கப்பட்டு புதிதாக அரச தொழிலுக்கு இணைத்துக்கொள்பவர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வரவு செலவு திட்டத்தினூடாக அரச நிறுவனங்களை உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஓர் அங்கமாகவே நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளில் இருக்கும் நோயாளர்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர் விடுதிகள் மற்றும் சிகிச்சை  நிலையங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் அரச வைத்தியசாலை நோயாளர் விடுதி மற்றும் சிகிச்சை நிலையங்களுக்கு தனியார் நிறுவனங்கள் மூலமே தேவையான வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.