இலங்கையில் இவ்வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் மாத்திரம் 2200 பேர் வாகன விபத்தினால் மரணித்துள்ளதாகவும் இவ்வருடத்தில் மாத்திரம் இதுவரையில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. 

மேலும் குறித்த வாகன விபத்துக்களினால் அதிகளவிலான பொலிஸ் போக்குவரத்து பிரிவின் அதிகாரிகளும் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முறையற்ற பாதுகாப்பு கடவை, அதிக வேகத்தில் வாகனத்தை செலுத்தியமை, வீதி ஒழுங்கு முறைமைகளை கடைப்பிடிக்காமை போன்றன காரணமாகவே அதிக வாகன விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.  

அதேநேரம், இவ்வருடம் இடம் பெற்ற விபத்துக்களில் ரயில் விபத்துக்கள் கணிசமான அளவு அதிகரிப்பை காட்டுகின்றன. இதற்கான சிறந்த உதாரணமாக கடந்த சி ல மாதங்களுக்கு முன்பு பிறந்த நாள் நிகழ்வொன்றில் கலந்து கொள்ள சென்ற யுவதிகள் இருவர்  பாடல்களை கேட்டுச் சென்றுள்ள நிலையில் ரயிலில் மோதுண்டு தூக்கி எறியப்பட்டு உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாது மாத்தறை பகுதியில் இளைஞர் ஒருவர் அதிவேக ரயில் ஒன்று எதிர்திசையில் பயணித்துக்கொண்டிருந்த வேளை ரயிலின் முன்பாகச் சென்று தண்டவாளத்தில் தனது கழுத்தை வைத்து தற்கொலை செய்துகொண்டிருந்தார். இவ்வாறான ரயில் விபத்துக்கள் இவ்வருடத்தில் கணிசமான அளவு இடம்பெற்றதில்   அதிகளவான இளம் உயிர்கள் காவுகொள் ளப்பட்டன. இவற்றை வெறுமனே வீதி விபத்துக்கள் என்று மட்டு வரையறுத்து விட முடியாது.  காரணம் இங்கு தற்கொலை செய்து கொள்ளப்பட்ட சம்பவங்கள் பலவும் பதிவாகியுள்ளன. குறிப்பாக இளைஞர்கள் தற்கொலை அதிகரித்துள்ளது.

மறுபுறத்தில் வாகன சாரதிகளின் கவனயீன போக்கு மற்றும் வேக கட்டுப்பாட்டினை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று வாகனங்கள் விபத்துக்குள்ளாவதாலும் நாளாந்தம் ஒருவர், இருவர் என்றவாறு வீதி விபத்துக்களில் உயிரிழந்தோரின் தொகை அதிகரித்த வண்ணமே உள்ளது. 

  அண்மையில் கெகிராவ பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த டிரக்டர் வாகனம் ஒன்றை மற்றுமொருவர் உயிர்பித்து செலுத்திச் சென்ற போது அவ்வழியே வந்த ஒருவர் மீது குறித்த டிரக்டர்  மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.   அப்பகுதியிலேயே  டிரக்டர் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். 

பின்பு கற்பிட்டி  பகுதியில் வேகமாக பயணித்த வாகனம் ஒன்று ஒருவர் மீது மோதிவிட்டுச் சென்றதில் மொஹமட் லாபீர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து மொனறாகலை  பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதியுள்ளதில் முச்சகர வண்டியொன்றின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

அதனையடுத்து கண்டி தெஹியத்தகண்டிய வீதியில் பயணிகளை ஏற்றிவந்த  தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகிச் சென்று தலைகீழாக புரண்டதில் 11 பேர் கடுமையான காயங்களுக்கு இலக்காகி மேலும் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். அதேபோல் காலி, மாத்தறை வீதியில் இடம்பெற்ற மோட்டார் விபத்தொன்றில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்திருந்தார். 

  கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரபல இளம் நடிகை ஒருவர் தனது காரில் பயணித்துக்கொண்டிருந்த போது  அவரது கார் வழுக்கிச் சென்று அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் ஒன்றின்  மீது மோதியதில் குறித்த நடிகை சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்த சம்பவம் மீரிஹானை பகுதியில் இடம்பெற்றது.

 கடந்த வருடத்தில் பதிவான விபத்துக்களை தொகுத்து போக்குவரத்து அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் 2590 அபாயகரமான உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன.   13095 சிறிய விபத்துக்கள் பதிவாகியுள்ளன.   13514 விபத்துக்களில் வாகனச் சேதங்களும் இடம்பெற்றுள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் 10147 விபத்துக்கள் மோட்டார் சைக்கிள்கள்  மூலமாகவும் 4429 விபத்துக்கள் லொறியின் மூலமும் 4858 வித்துக்கள் இரட்டைச் சக்கர வாகனங்கள் மூலமாகவும் 2877 விபத்துக்கள் தனியார் பஸ்களின் மூலமாகவும் 6871 விபத்துக்கள் முச்சக்கர வண்டிகள் மூலமாகவும் இடம்பெற்றுள்ளன.

ஆனால் கடந்த வருடத்தில் 142 பேர் மட்டுமே இழப்பீடுகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். இதில் 72 பேருக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ள போதிலும் ஏனைய 70 பேரினதும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாது விபத்தில் இறந்தவர்களுக்கு 4 மில்லியன் ரூபாவும் காயங்களின் போதான மருத்துவ செலவுகளுக்காக 8.4 மில்லியன் ரூபாயும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் நாளாந்தம் பதிவாகும் விபத்துக்களின் அளவும் அவற்றினால் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் குறைந்தவண்ணம் இல்லை. இவ்வாறான நிலையில் இது தொடர்பாக  மக்கள் அவதானமாக செயற்படுகின்றனரா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. கடந்த காலங்களில் இவ்வாறு அதிகரித்துச் செல்லும் விபத்துக்களை கட்டுப்படுத்த சட்டங்கள் பல நடைமுறைக்கு வந்தபோதும் அவற்றுக்கு எந்த அளவு மதிப்பளிக்கப்படுகின்றது என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. எவ்வாறாயினும் இவ்வாறான சட்டங்களும் எமது உயிர்பாதுகாப்பினை கருத்திற் கொண்டுதான் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை உணர்ந்து செயற்படுதல் சிறதந்ததாகும்.

அதேநேரம், அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு  செலவு திட்டத்திலும் வீதி விதிகளை மதிக்காவண்ணம் செயற்படுபவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப்பணத்தின் தொகையில் அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான திட்டங்கள் குறித்து பலவாறான விமர்சனங்கள் எழுந்த போதும் அவை பாதுகாப்புக்கு ஏதுவான காரணிகளாக அமையுமாயின் வரவேற்கத்தக்கதாகும்.

மேலும் வழமைக்கு மாறாக இவ்வருடத்தின் முதற்பகுதியில் சிறுவர்களினால் நிகழ்த்தப்பட்ட இரு விபத்துக்கள் பதிவாகியிருந்தன. எனவே இவ்வாறான விடயங்களிலும்   பொறுப்புடன் செயற்பட வேண்டியது காலத்துக்கு ஏற்ற  விடயமாக அமையும். 

க.கமலநாதன்