முஸ்லிம்கள் மீதான உரிமை மீறல்களை பேசுவது யார் ?

Published By: Digital Desk 5

03 Sep, 2022 | 08:09 PM
image

ஏ.எல். நிப்றாஸ்

இதுஜெனிவா பருவகாலம். உலகம் இலங்கைக்கு மனித உரிமைகள் பற்றிய பழைய பாடத்தை  (வகுப்பை) மீண்டும் எடுக்கத்தொடங்கியுள்ளது. ஆனால், வீட்டில் செய்யுமாறு கொடுக்கப்பட்ட வேலையை செய்யாத ஒரு மாணவனைப் போல, அசட்டையாகவும் அசட்டுத் துணிச்சலுடனுமே அரசாங்கம் ஜெனிவாவை எதிர்கொள்ளப் போகின்றது. 

தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் மற்றும் அநியாயங்கள் பற்றி தமிழ் அரசியல் மற்றும் சமூக தரப்புகள் தொடர்ந்து பல வருடங்களாக குரல் கொடுத்து வருகின்றன. சர்வதேச சமூகமும், உரிமைசார் அமைப்புக்களும் இது விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றன. இதனால் அரசாங்கமும் இதுபற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், முஸ்லிம் சமூகத்தின் மீது கடந்தகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட உரிமை மீறல்கள் தொடர்பில் அச் சமூகத்தின் முன்முயற்சிகள் எந்த இடத்தில் இருக்கின்றது? என்பதுதான் இங்குள்ள கேள்வியாகும். 

இங்கு ஒரு விடயத்தை அழுத்தமாக குறிப்பிட வேண்டியுள்ளது. அதாவது, முஸ்லிம்கள் மீதான உரிமை மீறல்களை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதோ, அதனால் அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும் பகைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதோ இந்த கட்டுரையின் நோக்கமல்ல. 

மாறாக, யுத்தகாலத்திலும் அதற்கு முன் - பின்னரும் பல பக்கங்களிலும் பாதிக்கப்பட்ட ஒரு சிறுபான்மைச் சமூகம் என்ற அடிப்படையில், நாம் அரசியல் செய்வது போல, உண்பதுபோல உடுப்பது போல. உலக ஒழுங்கின் அடிப்படையில், இவ்விடயங்களை ஆவணப்படுத்தி உலகின் கண்ணுக்கு முன்வைக்க வேண்டும் என்பதையே இக் கட்டுரை வலியுறுத்த விளைகின்றது. 

51ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் என பல்வேறு விவகாரங்களில் உலகின் கவனம் குவிந்துள்ளது. கடந்த ஒரு வருடத்திற்குள் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் மக்கள் எழுச்சி தொடர்பான விடயங்களும் இம்முறை மறைமுக செல்வாக்கைச் செலுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஆனால், ராஜபக்ஷக்களை விட மிகவும் வித்தியாசமான, நுட்பமான முறையில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் எதிர்கொள்ளும் என்றே கருத முடிகின்றது. ஜெனிவா விடயத்தில் ஒரு பெரிய சக்தியாக தொழிற்படுகின்ற புலம்பெயர் தமிழர்களை நோக்கி நேசக் கரம் நீட்டியமை உள்ளடங்கலாக பல நகர்வுகளின் ஊடாக இதனை முன்னுணர்ந்து கொள்ளலாம். 

இவ் விவகாரத்தில் தமிழர்கள் நூறுவீதம் திருப்திப்படும் வகையில் தீர்வு கிடைக்குமா என்பது சந்தேகமே. ஆனால், தமிழ் சமூகம் இதனை சரிவர ஆவணப்படுத்தியிருக்கின்றது. சில விடயங்களில் மிகைப்படுத்தல்கள் இருக்கலாம், ஆதாரம் இல்லாதவையாக இருக்கலாம். ஆயினும் தம்மீதான உரிமை மீறல்கள் பற்றிய செய்தியொன்றை உலகறியச் செய்துள்ளமை ஒரு முக்கியமானது என்றுதான் கூற வேண்டும். 

ஆனால், முஸ்லிம் சமூகம் குறைந்த பட்சம் இந்த இந்த விடயங்களில் தமக்கு உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற ஆவணப்படுத்தலையாவது பொதுத் தளத்தில் முன்வைக்கவும் இல்லை. அதுவிடயத்தில் நீதியை நாடவும் இல்லை என்பதே இங்கு கவனிப்பிற்குரியது.

முஸ்லிம் சமூகத்திற்குள் இருந்து ஓரிரு தனிப்பட்ட செயற்பாட்டாளர்கள் ஆவணங்கள், நூல்களை வெளியிட்டிருந்தாலும் கூட ஒரு சமூகமாக இப்பணி நிறைவேற்றப்படவில்லை. கட்சித் தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இப்பணியையும் சரிவரச் செய்யவில்லை

முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்கள் மூடிமறைக்கப்பட்டதுடன், ‘இறைவன் தீர்மானித்தபடி நடக்கின்றது’ என்ற இறை நம்பிக்கையை சொல்லி பல விடயங்கள்;  காலவோட்டத்தில் மறக்கடிக்கச் செய்யப்பட்டுள்ளது. அதையும்தாண்டி  கொஞ்சம் முயன்ற அரசியல்வாதியின் முயற்சி மழுங்கடிக்கப்பட்ட கதையும் உள்ளது.

முஸ்லிம்கள் எப்போதும் சிங்கள ஆட்சியாளர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார்கள். சமகாலத்தில் சகோதர தமிழ் சமூகத்தின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கருகின்றனர். ஆயுதங்கள் முன்கையெடுத்தததையே முஸ்லிம்கள் வெறுத்தனரே தவிர தமழரின் அபிலாஷைகளை எதிர்க்க வேண்டிய எந்த தேவையும் இல்லை. 

இருப்பினும், முஸ்லிம்கள் பல பக்கங்களில் இருந்தும் உரிமை மீறல்களைச் சந்தித்தனர். இனவாதம், பயங்கரவாதம், ஆயுதக் கலாசாரம். களையெடுப்பு, பழிவாங்கல், மதவாதம் எனப் பல முகமூடிகளை அணிந்து கொண்டு முஸ்லிம் சமூகத்தின் மீதான உரிமை மீறல்கள் நடந்தேறியிருக்கின்றன.

இலங்கையில் மனித உரிமை மீறல்களால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் சகோதர தமிழர்கள் என்ற பொதுவாக கருதினாலும், யுத்த காலத்திலும் அதற்கு முன்பின்னான கலவரங்கள் மற்றும் ஒடுக்குமுறைகளாலும் முஸ்லிம்கள் சந்தித்த உரிமை மீறல்களை குறைத்து மதிப்பிட முடியாது.  

இதனை, 1915சிங்கள – முஸ்லிம் கலவரம், சுதந்திரத்திற்குப் பின்னரான ஊவா வெல்லஸ்ஸ கலவரம் ஆகியவற்றிலிருந்து தொடங்க வேண்டும். ஆனால் 1970களுக்குப் பின்னாரான மீறல்கள், அநியாயங்கள், அநியாயங்கள் முக்கியமானவை எனலாம்.  

தமிழர்களின் உரிமைப் போராட்டம் ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களுக்குமான ஒரு விடுதலை தாகம் என்ற ஒரு பார்வை ஆரம்பத்தில் இருந்தது. அக்காலத்தில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழர் அரசியலோடு மிக நெருக்கமாக சேர்ந்தியங்கினர். சமகாலத்தில்; பல முஸ்லிம் போராளிகளும் தம்மை அர்ப்பணித்தனர். 

சுமார் 40போராளிகள் விடுதலைப் புலிகளால் மாவீரர்களாக பிரகடனப்படுத்தப்படுமளவுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு இருந்தது. 90களில் அப்பாவி தமிழ் குடும்பங்களுக்கு அடைக்கலம் கொடுத்த முஸ்லிம்கள் பற்றிய வரலாற்றுக் கதைகள் வயதில் மூத்த தமிழ் சகோதரர்களுக்கு தெரியும். அப்படித்தான் அந்த உறவு இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு முஸ்லிம்கள் மீதான மீறல்களால் நிலைமைகள் மாறின.  

1990ஆம் ஆண்டு, யாழ் குடா நாட்டில் பூர்வீகமாக வாழ்ந்த முஸ்லிம்கள் சில மணிநேர அவகாசத்தில் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் புத்தளத்தை அண்டிய பிரதேசங்களிலும் வேறு பல பகுதிகளிலும் குடியேறினர். இவர்கள். இன்னும் முழுமையாக மீள் குடியேற்றப்படவில்லை. இது ஒரு முக்கிய மீறலாகும். 

அதேபோல், ஏறாவூர், காத்தான்குடி பள்ளிவாசல்களில் இறைவனை தொழுது கொண்டிருந்தவர்கள் உயிர் பறிக்கப்பட்டன. அக்கரைப்பற்று பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களின் வேறு சில இடங்களிலும் வயல்களிலும் பொது இடங்களிலும் உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. 

அத்துடன், அழிஞ்சிப்பொத்தானை அழிப்புக்கள், குருக்கள்மடத்தில் ஹஜ் யாத்திரிகர்கள் உயிர்பறிக்கப்பட்டறை, ஊறுகாமம் அசம்பாவிதம், அக்போபுர மரணங்கள் என்று மீறல்கள் தொடர்ந்தது.  

இதேவேளை, இலங்கை, இந்திய படையினராலும் சாதாரண முஸ்லிம் மக்கள் மீது ஆங்காங்கு உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தொழில் நிமித்தம் ஆயுதமேந்திய முஸ்லிம்களை கொல்லப்பட்டமை வேறு கோணத்தில் பார்க்கப்படலாம். ஆனால், எந்த இனத்தவராயினும் நிராயுதபாணியான பொதுமக்களின் உயிர்பறிக்கப்படுவது கடுமையான உரிமை மீறல் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 

அதுமட்டுமன்றி, இனவாதமும் முஸ்லிம்களின் உரிமையை கடுமையாக மீறியிருக்கின்றது. அளுத்கம, திகண மற்றும் அம்பாறைக் கலவரங்கள் முஸ்லிம்களின் பலவிதமான உரிமைகளை ஒட்டுமொத்தமாக மீறிய சம்பவங்களாகும். 

இப்படி இந்தப் பட்டியல் நீள்கின்றது. ஆனால், இது குறித்து முஸ்லிம்கள் ஒரு சமூகமாக குரல் எழுப்பியதில்லை. அரசியல்வாதிகள் ஆவணப்படுத்தவோ உலகிற்கு எடுத்துச் செல்லவோ இல்லை. எனவே, மனித உரிமை அமைப்புக்கள் இதுபற்றி அக்கறை கொள்வதையும் பெரிதாக காணக் கிடைக்கவில்லை. 

எனவே, சுருக்கமாகக் கூறினால், முஸ்லிம்கள் மீதான உரிமை மீறல்களை ஆவணப்படுத்த வேண்டும் என்று சொல்வது யாரையும் குற்றம் சாட்டுவதற்கோ தமிழ், சிங்கள மக்களை நோவினைப் படுத்துவதற்கோ அல்ல. மாறாக, முஸ்லிம்களுக்கும் இத்தனை இழப்புக்கள், உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை பொதுவெளியில் முன்வைப்பதற்காக ஆகும். 

ஏனெனில், முள்ளிவாய்க்காலில், அரந்தலாவையில், காத்தான்குடியில்  உரிமைகளை இழந்தது   வேறு வேறு இனத்தவர்கள் என்றாலும், அவற்றின் பரிமாணங்கள் வேறுபட்டாலும், அவை ஒரே கனதியைக் கொண்டவையாகும்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்