சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் துனீசியா

Published By: Digital Desk 5

03 Sep, 2022 | 08:08 PM
image

லத்தீப் பாரூக்

பிரான்ஸின் காலணித்துவத்தின் கீழ் இருந்த வட ஆபிரிக்காவின் முஸ்லிம் நாடுகளில் ஒன்றான துனீசியா 2010 -2011 காலப்பகுதியில் ஏற்பட்ட அரபு வசன்த போராட்டத்தின் பிறப்பிடமாகும். அரபு வசந்தப் போராட்டம் இந்தப் பிராந்தியத்தில் ஏற்படுத்திய அதிர்வுகள் காரணமாக பல நாடுகளில் ஆட்சிகள் வீழ்ந்தன. நான்கு அரபு நாடுகளின் அன்றைய ஜனாதிபதிகள் இதனால் பதவியிழக்க நேரிட்டது.

2011இல் டுனீஷியாவில் ஏற்பட்ட புரட்சி காரணமாக அந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்த சர்வாதிகாரி சின் அல் ஆபிதீன் பின் அலியும் பதவியில் இருந்து விரட்டப்படார். அன்று முதல் மக்கள் பல ஜனநாயக உரிமைகளை வென்றெடுத்தனர்.

இருந்தாலும் துனீசியாவின் இன்றைய ஜனாதிபதி கயிஸ் செய்த் இப்போது ஜனநாயகத்தை மீண்டும் நசுக்கி சர்வாதிகாரத்தை படரவிடத் தொடங்கியுள்ளார். இவருக்கு பெரும்பாலும் துனீசியாவின் காலணித்துவ எஜமான் பக்கபலமாக இருப்பதாக கூறப்படுகின்றது. 

வழமைபோல் அமெரிக்கா, பிரித்தானியா, இஸ்ரேல் என்பனவும் இந்த பின்புலத்தில் இருக்கின்றன. மத்திய கிழக்கில் அல்லது வட அபிரிக்காவில் எந்தவொரு நாட்டிலும் ஜனநாயகம் மலர்ந்து விடக்கூடாது என்பதில் மிகவும் அக்கறையோடு செயற்படும் சவூதி அரோபியா, ஐக்கிய அரபு அமீரகம் என்பனவும் வழமைபோல் துனீசிய மக்களுக்கு எதிரான நாசகார சக்திகளுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன.

அதிகாரத்தில் தனது பலத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான கணிசமான நடவடிக்கைகளை ஜனாதிபதி கயிஸ் செய்த் கையாண்டு வருகின்றார். இதற்காக அவர் அரசியல்சாசனத்தை ஆயுதமாகப் பயன்படுத்த முடிவு செய்;துள்ளார். அரசின் நடவடிக்கைகள் பற்றி கேள்வி எழுப்பும் மக்களுக்கான உரிமைகளை முழுமையாக நசுக்கும் வகையிலான புதிய அரசியல்யாப்பு ஒன்றை அறிமுகம் செய்ய அவர் முயற்சித்து வருகின்றார்.

இதன் காரணமாக அந்த நாடு மிகப்பெரிய அரசியல்சாசன நெருக்கடிக்கு முகங்கொடுத்தள்ளது. இதையொரு சதி என்றும் அதிகாரத்துக்கான நெருக்குதல் என்றும் கூட பலர் வர்ணித்துள்ளனர். தற்போது காணப்படும் 2021-2011 துனீசிய அரசியல் நெருக்கடி ஜனாதிபதி கயிஸ் செயித்துக்கும்;, இஸ்லாமிய ஆதரவு பிரதிநிதிகளைப் பெரும்பாலும் கொண்ட என்ஹாடா கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் வலுவடைந்து வருகின்றது.

2021 ஜுலை 25இல் பிரதமர் ஹிச்சம் மெச்சிச்சியை பதவியில் இருந்து நீக்கிய ஜனாதிபதி, மக்கள் பிரதிநிதிகள் சபையின் செயற்பாடுகளை இடைநிறுத்தியதோடு இந்த நெருக்கடி ஆரம்பமாகியது. தனது கரங்களுக்குள் மேலதிக அதிகாரத்தைக் கொண்டு வரும் வகையில் நாட்டின் அதியுயர் நீதித்துறை சபையையும் ஜனாதிபதி கலைத்துள்ளார். அதியுயர் நீதித்துறை சபை மற்றும் நாட்டின் தேர்தல் ஆணையகம் என்பன இப்போது ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

துனீசிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் பிரபல இஸ்லாமிய போக்கு என்ஹாடா கட்சியைச் செர்ந்த ராஷெட் கெனோச்சி ஜனாதிபதியின் நடவடிக்கைகள் ஜனநாயகத்துக்கு எதிரான தாக்குதல்கள் என்று வன்மையாகச் சாடியுள்ளார். மக்கள் இதற்கு எதிராக வீதிகளில் இறங்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார். இதனை அடுத்து ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் ஆங்காங்கே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் தலைதூக்கியுள்ளன.

துனீசிய ஜனாதிபதியின் முடிவுகளை பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் கண்டித்துள்ளன. பாராளுமன்றம் கலைக்கப்பட்டது முதல் ஜனாதிபதியின் அதிகாரத்தின் கீழ் விடுக்கப்படும் உத்தரவுகளுக்கு அமையவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வென்றெடுத்த ஜனநாயக உரிமைகள் யாவும் இப்போது மீண்டும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. 

ஜனநாயக ரீதியான உரிமைகளை நசுக்கி பொருளாதார ரீதியான நெருக்கடியையும் உருவாக்கி அவற்றின் மூலம் தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளுமொரு விஷப்பரீட்சையில் கயிஸ் செயித் இறங்கியுள்ளார்.

2011 துனீசியப் புரட்சிக்குப் பின் உருவாக்கப்பட்ட ஜனநாயக பண்புகளைக் கொண்ட நாட்டின் அரசியல் சாசனத்தை தற்போதைய ஜனாதிபதி தனக்கு ஏற்றவாறு திருத்தியுள்ளார். அதிகாரப் பரவலாக்கத்தின் எண்ணக்கருவை இந்தப் புதிய அரசியல் யாப்பு முற்றாக மறுத்துரைக்கின்றது. மக்களுக்கு உள்ள கேள்வி எழுப்பும் உரிமை, மனித உரிமைகள் மீதான உத்தரவாதம் என்பனவற்றை முற்றாக மறுத்து புரட்சிக்கு முன்னர் பதவியில் இருந்த பென் அலியின் பாணியிலான மனித உரிமை மீறல்களுக்கு மீண்டும் வித்திடப்பட்டுள்ளது.

புதிய அரசியல்சாசன வரைபில் அபாயகரமான திருப்பு முனைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தனிமனித ஆட்சியை திடப்படுத்தி அதன் மூலம் துனீசியாவில் புதிதாக மலர்ந்த ஜனநாயகத்தை அழித்து தனிமனித சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும்; திட்டம் புலப்படுகின்றது.

2022 ஜுலை 25இல் தனது புதிய அரசியல் யாப்புக்கான தேசிய மட்ட சர்வஜன வாக்கெடுப்பை அவர் நடத்தினார். 27 சதவீதமான மக்கள் மட்டுமே அதில் வாக்களித்தனர். ஒரு ஜனாதிபதியின் தனி அதிகாரங்களையும் கடந்து செல்லும் வகையில் இந்த புதிய யாப்பு அமைந்துள்ளது. 

புதிய அரசியல் யாப்பை வரைகின்ற போது எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களை அவர் முற்றாகப் புறக்கணித்துள்ளார். தனது பிரதான அரசியல் எதிரியான ராஷட் கெனோச்சியை அவர் பல துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். அவரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. இதேநிலைமை எதிர்க்கட்சியின் ஏனைய முக்கிய பிரமுகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறான நிலையில், ஏன்ஹாடா கட்சியினதும் எதிர்க்கட்சியினதும் தலைவரான ராஷட் கெனோச்சி அரசியல் சாசனத்தின் மீதான சர்வஜன வாக்கெடுப்பை நாட்டின் 75சதவீதமான மக்கள் நிராகரித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். இந்த அரசியல் அமைப்புக்கான செயற்பாடுகள் சட்ட விரோதமானவை. அவை ஜனநாயகப் புரட்சிக்கு முன் நாட்டு மக்கள் அனுபவித்த சர்வாதிகார ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி சர்வாதிகாரத்தை சட்டபூர்வமாக ஏற்படுத்த எடுக்கப்படும் முயற்சிகளை முறியடிக்க சர்வஜன வாக்கெடுப்பை நிராகரிப்பதைத் தவிர மக்களுக்கு ஒன்றுபட்டு மேற்கொள்ளக் கூடிய வேறு வழி தெரியவில்லை. இந்த சர்வஜன வாக்கெடுப்பை நிராகரிக்குமாறு டுனீஷியாவின் எழுத்தாளரும் புத்தி ஜீவியுமான ஹேதம் குவாஸ்மியும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

சர்வதேச நீதித்துறை ஆணைக்குழுவாது, கட்டுப்பாடற்ற ஜனாதிபதி ஆட்சிமுறையை துனீசியாவின் புதிய அரசியல் சாசனம் ஏற்படுத்துகின்றது. இங்கு சர்வ வல்லமையுள்ள  ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பார் அவருக்கு கீழ் எந்த அதிகாரமும் அற்ற நீதித்துறை அமுலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

துனீசியாவின் ‘புதிய அரசியல் சாசனம்  மேலும் கொந்தளிப்புக்களுக்கான சமையல் குறிப்பாக உள்ளது’ என்று பத்தி எழுத்தாளர் ஈவா ஜராட் வர்ணித்துள்ளார். துனீசியாவில் வல்லமை மிக்க ஒரு போராட்டத்துக்கான மேடை தயார் படுத்தப்பட்டுள்ளது. அரசுக்கு அடுத்தபடியாக பாரிய அளவில் ஒழுங்கமைக்கப்பட்ட மக்கள் அமைப்பாக இருப்பது என்ஹாடா கட்சி மட்டுமே என்று பிரித்தானிய பத்தி எழுத்தாளர் டேவிட் ஹேர்ஸ்ட் குறிப்பிட்டுள்ளார்.

துனீசியாவின் ஐரோப்பிய அண்டை வீட்டாளர்கள் ஒத்துழைப்பு வழங்க எந்தளவு தகுதியற்றவர்கள் என்பதற்கு மீண்டும் உதாரணாகியுள்ளனர். அரபு வசன்தத்தையும் அதன் தொடராக மலர்ந்த ஜனநாயகத்தையும் நசுக்குவதில் தான் அவர்கள் எப்போதும் குறியாக உள்ளனர். அரபுலகில் ஜனநாயகம் மலரக் கூடாது என்பது தான் அவர்களின் ஏகோபித்த கொள்கை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்