காதல் கைகூடுமா ?

Published By: Sindu

02 Sep, 2022 | 10:07 AM
image

கேள்வி

நான் ஒரு பெண். வயது 17. என்னை ஒருவர் விரும்புவதாகச் சொன்னார். அவருக்கு 23 வயது. இருவரும் வெவ்வேறு சமயங்கள். திருமணம் செய்யும்போது என்னுடைய சமயத்துக்கு மாற மாட்டேன் என்றார். பிறகு எனக்காக ஒத்துக்கொண்டார்.

ஆனால், என் வீட்டில் சம்மதிக்காவிட்டால் அவருடன் வந்துவிடவேண்டும் என்றார். அதற்கு நான் மறுத்தேன். இப்படியே எமது காதல் தொடர்ந்தது. ஒருநாள் அவரை அலைபேசியில் அழைத்தபோது ஒரு பெண் குரல் கேட்டது. அது அவரது அண்ணி என்று கூறினார். ஆனால், அவரது அண்ணனுக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை. அவர் இப்போது வெளிநாடு செல்லப்போகிறாராம். இந்தக் காதல் கைகூடுமா?

பதில்

உங்களது கடிதத்தை முழுமையாகப் பிரசுரிக்க முடியாது, நீளம் கருதி. எனவே, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்து விடயங்களை வைத்தும் பார்க்கும்போது, நிச்சயமாக அவருடனான உங்களது உறவு உங்களுக்கு மகிழ்ச்சி தராது என்றே சொல்லவேண்டும்.

நீங்கள் உங்கள் காதலில் உண்மையாக இருக்கலாம். உங்கள் வாழ்வில் இன்னொருவருக்கு இடமில்லை என்று சொல்லலாம். இது, இந்த வயதில் இருக்கும் எல்லோரும் சொல்வதே. எது நடந்தாலும் வாழ்க்கை அதன் பாதையில் உங்களை அழைத்துச் செல்லும். அப்போது உங்களுக்குப் பொருத்தமான ஒருவரை நிச்சயமாகக் கண்டடைவீர்கள். அது காதலாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றாலும் சரி.

உங்கள் காதலர் சார்ந்திருக்கும் சமூகத்தில், ஒழுக்கக் கட்டுப்பாடுகள் சற்றுத் தளர்வானவை என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்படியிருக்க, அவர் உங்களை மட்டும்தான் விரும்புவார் என்றும் உங்களுக்கு துரோகம் செய்யமாட்டார் என்றும் உறுதியாகக் கூற முடியாது. மேலும் உங்களுக்கு திருமணத்துக்கு முன்னரே அவர் மீது சந்தேகம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவர் உண்மையில் உத்தமராக இருந்தாலும் உங்கள் மனம் அவரைச் சந்தேகிக்கவே செய்யும்.

இவை எல்லாவற்றையும் விட, உங்கள் வாழ்க்கைத் துணையை நிர்ணயிக்கும் வயது இன்னமும் உங்களுக்கு வரவில்லை. உங்களது சமூகத்தினர் நிச்சயமாக காதல் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள், அதுவும் வேறு சமயத்தவரை என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். அப்படியிருக்க, இதுபோன்ற காதல் உறவுகள் உங்கள் வாழ்க்கைக்கு எந்த வகையிலும் மகிழ்ச்சி தரப்போவதில்லை.

கல்வியில் கவனம் செலுத்துங்கள். இன்னும் நான்கைந்து வருடங்களுக்கு காதல் எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு, உங்கள் தோழிகளுடன் சுதந்திரமாக நேரத்தைச் செலவிடுங்கள். அதைவிட்டுவிட்டு காதல் என்ற பெயரில் உங்களுக்கு நீங்களே விலங்கிட்டுக்கொள்ளாதீர்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right